Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி? ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு!

விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில்தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர், இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள்தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டென்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். 
 
 
கேப்டனாக என்ன செய்தார்?
 
கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்டன் தோனி  காயமடைந்திருந்ததால்  துணை கேப்டன் கோலியை கேப்டனாக்கியது அணி நிர்வாகம் . தோனியின் திடீர் ஓய்வுக்கு பின் கோலி முழுநேர கேப்டனாக்கப்பட்டார். மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகாரப்பூர்வ கேப்டனாக இருந்துள்ள கோலி 5 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என தனது வெற்றி விகிதத்தை பாஸிட்டிவாக வைத்துள்ளார். கோலி கேப்டனாக ஒரு தொடரை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி,  22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் தொடரை வென்று சாதனை படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி. பலம் குறைந்த இலங்கை அணியை வெல்வதில் பெருமையில்லை. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் கோலியை கேப்டனாக அங்கீகரிக்கிறோம் என்று கூறியவர்களுக்கு,  4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கெத்தான வெற்றியை பதிவு செய்தார் கோலி.
 
 
தோனி செய்ய தவறிய சில விஷயங்களை கோலி தைரியமாக செய்தார். உள்வட்டத்துக்குள் வீரர்களை கையாளுவது, நீண்ட நேரமாக களத்தில் இருக்கும் வீரரை வீழ்த்த,  வீரருக்கு அருகில் பீல்டிங் செட் செய்து தடுமாற செய்வது என களத்தில் ஃபயர் காட்டினார் கோலி. மூன்றாவது இடத்தில் விளையாட,  அடுத்த திராவிட் என வர்ணிக்கப்பட்ட புஜாராவை அணி நலனுக்காக ஆடும் லெவனில் சேர்க்காதது, ராகுலை சரியாக கையாண்டது, அஸ்வின் , ஜடேஜா என இருவரை மட்டும் வைத்து தென் ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ வைத்தது என மாஸ் காட்டினார் கோலி.

பேட்ஸ்மேன் கோலி:
 
மோசமான ஃபாம், இந்திய அணியின் தோல்விகளுக்கு ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்ட விராட் பெரிதாக பதிலளிக்கவில்லை. தனது பேட்டிங் மூலம் சரியான பதிலை வழங்கினார் விராட். கேப்டனாக ஆடிய 9 டெஸ்ட்களில் 2 சதம், 2 அரை சதம் உட்பட 640 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில்,,  147 ரன்கள் அடித்து மிரள வைத்த இன்னிங்ஸும் அடங்கும்.  கேப்டன்ஸி வழங்கினால் இவரது பேட்டிங் பாதிக்கப்படும் என்பதை பொய்யாக்கினார். 
 
 
டெஸ்ட் போட்டிகளில் கில்லியான தென் ஆப்பிரிக்கா, பந்துகள் எகிறும் ஆஸி பிட்ச்களில் கலக்கினாலும் இந்திய ஆடுகளங்களில் 300 ரன்களை தாண்டக்கூட தடுமாறியது. ஆம்லா, டுப்ளேஸிஸ், டுமினி என இந்திய ஆடுகளங்களில் சாதித்தவர்கள் கூட ஒற்றை இலக்கங்களில் வெளியேற, கோலியும், இந்திய அணியும் பேட்டிங்கில் கெத்தான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆஸி அணியின் ஜாம்பவான் ஸ்டீவ் வாக், தனது மகனிடம், "உனக்கு ரோல் மாடலாக விராட் கோலியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதை நிரூபித்து காட்டியவர்" என புகழாரம் சூட்டினார். 
 
இந்தியாவின் சிறந்த கேப்டன்களின் முதல் வருடம் 
 
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களாக சொல்லப்படும் கங்குலி, தோனி இருவரோடும் கோலியை இவ்வளவு குறுகிய காலத்தில் ஒப்பிடக்கூடாது என்றாலும்,  மூன்று பேரிடமும் இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்ட போது இந்தியா மோசமான தரவரிசையில்தான் இருந்தது. அதிலிருந்து இந்தியாவை ஒரு வருடத்தில் மீட்டு,  இரண்டாவது இடத்துக்கு கொண்டுவந்தவர்கள் கங்குலியும், கோலியும் என்றால் முதலிடத்துக்கே கொண்டு சென்றவர் தோனி.
<
 
 
முதல் வருடத்தில் கோலி  பாஸ் என்பதை தாண்டி,  சிறப்பாகவே செயல்பட்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும் . காரணம் கங்குலி மற்றும் தோனியிடம் இருந்தது அனுபவசாலிகளைக் கொண்ட இந்திய அணி. கோலியிடம் இருப்பதோ இளம் இந்திய அணி.
 
 
 
 
அக்ரஸிவ் கேப்டன், களத்தில் கோபத்தை வெளிபடுத்த தயங்காதவர்  என்றெல்லாம் கூறினாலும் இன்னும் வெளிநாட்டில் ஜெயிக்கவில்லை என்ற பெயர் அப்படியேதான் உள்ளது. கோலி ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மண்ணில் வெற்றியை பதிவு செய்தால்தான் டெஸ்டின் பெஸ்ட் கேப்டனாக மாறுவார்.
 
லார்ட்ஸ் மைதானத்தில் கோலியின் டி-ஷர்ட் சுழலலாம், அடிலெய்டில் வெற்றி பெற்றவுடன் ஆஃப் ஸ்டெம்பை  எடுத்துக் கொண்டு வலம் வரலாம். இந்தியாவை மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடம் பெற வைப்பாரா கோலி என்பதை வெளிநாட்டு தொடர்கள்தான் முடிவு செய்யப் போகிறது.
 
வெள்ளை சீருடையில் இந்தியா மகுடம் சூடவாழ்த்துக்கள்  கேப்டன்..!
 
-ச.ஸ்ரீராம் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close