Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லார்ட்சில் கரீபியனுக்கு லாடம் கட்டியவர்: உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன்!

ஒரு விஷயம் காலம் காலமாக கோலோச்சி நிற்கத் தேவையானது -  ஒரு வெற்றி. அப்படி இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மூளை முடுக்கிலும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கிரிக்கெட்டை விதைத்ததும் ஒரு வெற்றி தான். உலகம் வியந்த அவ்வெற்றியை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த ‘ஹரியானா ஹரிகேன்’ கபில் தேவின் பிறந்த தினம் இன்று.

 உலகின் அனைத்து அணிகளையும் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா வென்ற அந்த உலகக்கோப்பை தான், இந்திய அணியின் வெற்றிநடைக்கு இன்று அச்சாரம்.

 


அசத்தல் ஆல்ரவுண்டர்
 
1959ல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ் ரஞ்சி போட்டிகளில் ஹரியானா அணிக்காகக் களமிறங்கினார். தனது அபாரமான பந்துவீச்சால் தேசிய அணிக்கு தனது 19வது வயதில் தேர்வானார் கபில். இந்தியர்கள் சுழற்பந்துவீச்சில் மட்டும் வல்லவர்களாய் இருக்க தனது அறிமுக தொடரிலேயே பாகிஸ்தான் வீரர்களை தனது பவுன்சர்களால் திக்குமுக்காடச் செய்தார். இன்சுவிங் பந்துகள் வீசுவதில் வல்லவர். தனது யார்க்கர்களால் எதிரணியின் டெயிலெண்டர்களை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பிவிடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியன் கபில் தான். தான் ஓய்வு பெறும்போது 434 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். 1994 முதல் 2000 வரை அதுவே உலக சாதனையாக இருந்தது. பவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் கபில் கில்லி தான். களத்தில் சூறாவளியாகவே சுழல்வார். நெருக்கடியான நேரங்களில் கூட சிக்சர்களை அசால்டாக பறக்கவிடுவார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளும் 5000 ரன்களும் எடுத்துள்ள ஒரே வீரர் கபில் தேவ் தான்.

 

கோப்பையை வென்ற கபில்’ஸ் டெவில்ஸ்

கடந்த 1975, 1979 என இரு உலகக் கோப்பையிலும் சேர்ந்து ஒரே வெற்றிதான் பெற்றிருந்தது இந்தியா. 1983ல் அடுத்த தொடர் தொடங்கும் முன்பாக 23 வயது கபில் தேவை கேப்டனாக்கியது பிசிசிஐ. உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே சாம்பியன் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆச்சர்யம் தந்தது இந்திய அணி. பின்னர் 1 வெற்றி, 2 தோல்விகள். கடைசி இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலை.

ஜிம்பாப்வேயுடனான போட்டியில் 9 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்து தவித்தது இந்திய அணி. களம் புகுந்தார் கபில். களை எடுத்தார் ஜிம்பாப்வேயை. சிக்சர்கள் நாலா புரமும் சிதறின. 138 பந்துகள் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடித்து ஆட்டமிழக்காமல் 175 ரன் குவிக்க அப்போட்டியில் வென்ற இந்திய அணி அடுத்தடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்தது ‘கத்துக்குட்டி’ இந்திய அணி. இப்போட்டியில் 9வது விக்கெட்டிற்கு கிர்மானியுடன் இணைந்து 126 ரன்கள் எடுத்தார் கபில். இச்சாதனை சுமார் பத்தாயிரம் நாட்கள் தகர்க்கப்படாமல் இருந்தது.

இறுதிப் போட்டியோ சாம்பியன் வெஸ்ட் இண்டீசோடு. வெஸ்ட் இண்டீசின் வெற்றியை உலகம் உறுதி செய்திருந்தது. இந்தியா எடுத்ததோ 183 ரன்கள். கரீபியத் தீவில் கொண்டாட்டங்கள் தொடங்கியிருந்தன. ஆனால் நடந்ததோ மாபெரும் சரித்திரம். அணியை அவர் வெற்றி பெறச் சொல்லவில்லை. போராட மட்டும் தான் சொன்னார். போராட்டத்திற்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று தன் அணியினரை நம்ப வைத்தார். 140 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீசை சுருட்டி மகுடம் சூடியது இந்திய அணி.

 

உலகமே ஆச்சர்யத்தில் உறைந்தது. பெரிய பெரிய அணிகளை போகிற போக்கில் போட்டுத்தள்ள இவர்களை ‘கபில்’ஸ் டெவில்ஸ்’ என்று அழைத்தது கிரிக்கெட் உலகம். கிரிக்கெட் உலகில் மாற்றங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் பிள்ளையார் சுழி போடப்பட்டது அன்று தான். தனது அதிரடி ஆட்டத்தால், போட்டியை விவியன் ரிச்சர்ட்ஸ் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார். மதன் லால் வீசிய பந்தை அவர் டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாச, 20 அடி தூரம் பின்னோக்கியே ஓடி யாரும் எதிர்பாராத வகையில் பிடித்து அசத்தினார் கபில். இன்றும் உலகின் தலைசிறந்த கேட்ச்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது. அந்தத் தொடரின் 8 போட்டிகளில் 303 ரன், 12 விக்கெட், 7 கேட்ச் என ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்சில் ஜொலித்தார் நம் கேப்டன்.


கபிலின் நேர்மை

1987 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதின. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 268 ரன்கள் எடுத்தது. போட்டி முடிந்ததும் நடுவரிடம் சென்ற கபில், “ஆட்டத்தின் போது ஒரு சிக்சரை நீங்கள் தவறுதலாக பவுண்டரி என அறிவித்துவிட்டீர்கள். எனவே 2 ரன்களை அவர்கள் ஸ்கோரோடு கூட்ட வேண்டும்” என்றார். ஆஸி அணியின் ஸ்கோர் 270 என மாற்றியமைக்கப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணி 269 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கபிலின் நேர்மையை உலகமே வியந்து பாராட்டியது. விஸ்டன் நிறுவனம் 2002ம் ஆண்டு நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை கபில் தேவிற்கு வழங்கி சிறப்பித்தது.

இன்று நாம் அனைவரும் வெறிகொண்டு பார்க்கும் ஐ.பி.எல் தொடங்கப்பட ஒருவகையில் கபில் தேவ் தான் மூலக்காரணம். 2007 உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைய, அணித் தேர்வில் கடுப்பான கபில், இளம் வீரர்களை ஊக்குவிக்க ஜீ குழுமத்தோடு இணைந்து இந்தியன் கிரிக்கெட் லீக்கைத் தொடங்கினார். அதற்கு முட்டுக்கட்டை போட இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியதே ஐ.பி.எல். இப்படி கிரிக்கெட்டின் பல மாற்றங்களுக்குப் பின்னால் கபிலின் நிழல் செயல்பட்டுள்ளது. இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளது. முதன்முதலாய் இந்தியாவின் பெயரை கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மகுடத்தில் பொறித்ததற்காக இவருக்கு பாரத ரத்னாவே தரலாம்!

ஹேப்பி பர்த் டே ஹரியானா ஹரிகேன்!

மு. பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close