Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோசக்கார ஹாசிம் ஆம்லா!

தொடர் தோல்விகளையடுத்து தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக அசைக்க முடியாத அணியாக வலம் வந்த தென்ஆப்ரிக்க அணிக்கு கடந்த ஆண்டு மோசமானதாக அமைந்து விட்டது. 2015-ம் ஆண்டு ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரே  ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தென்ஆப்ரிக்கா வென்றது. 4போட்டிகளில் தோல்வி கண்டது.  இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆட்டமும் வங்கதேசத்துடனான இரண்டு போட்டிகளும் மழையால் ரத்தானது.

இந்தியாவுக்கு எதிரான  டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது. இதனால்,  கடந்த 9 ஆண்டுகளாக அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமலிருந்த அவர்களது சாதனைப் பயணமும் முடிவுக்கு வந்தது. கடந்த டிசம்பரில் சொந்த மண்ணில், இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில்,  241 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று செம அடி வாங்கியது.

இந்நிலையில் கேப்டவுன் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும்,  தென்ஆப்ரிக்க அணியால்  இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியவில்லை, ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, தென்ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தலைமையில் தென்ஆப்ரிக்க அணி விளையாடும்.

தனது ராஜினாமா குறித்து ஆம்லா கூறுகையில், ''இத்தகைய முடிவெடுப்பதற்கு சற்று கடினமானதாகத்தான் இருந்தது. ஆனாலும் தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். மூத்த வீரர்கள் மீண்டும் அணியை கட்டமைக்க வேண்டும். எனது தாய்நாட்டு அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பளித்து கவுரவித்த தென்ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு 12 இன்னிங்ஸ்களில் வெறும் 251 ரன்களை மட்டுமே ஹாசிம் ஆம்லா அடித்துள்ளார். சராசரி 22.81 ஆகும். ஹாசிம் ஆம்லா தலைமையில் தென்ஆப்ரிக்க அணி 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகளில் தோற்றதுடன், 6 ஆட்டங்களில் சமனும் கண்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ