Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நானும் ரவுடி தான்! - மிரட்டல் அடி அடித்த ஆப்கானிஸ்தான்

சமீபகாலமாக  இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸி , நியூசி என பெரிய நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள்  'ஒன்சைடு கேம்' ஆக சுவாரஸ்யமின்றி முடிந்து விடுகிறது. ஆனால் இன்னும் 'கத்துக்குட்டி'யாகவே அறியப்படும் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய ஒரு நாள் தொடரை, போராடி வென்று 'திரில்' வெற்றியை ருசித்திருக்கிறது.

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும்  ஜிம்பாப்வே ஆகிய அணிகள்,  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி.

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடர் - ஒரு  பார்வை...

முதல் ஒரு நாள் போட்டி


ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது,  ஆப்கானிஸ்தான் அணியின் பவுலர் அமீர் ஹம்சா பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், மளமளவென விக்கெட்டுகளை இழந்து,  82 ரனுக்கு ஆல் அவுட் ஆக,  49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.


இரண்டாவது ஒரு நாள் போட்டி

முதலில் பேட்டிங் பிடித்த ஜிம்பாப்வே, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 253 ரன்கள் குவித்தது. இதையடுத்து சேசிங்கில் களமிறங்கியது ஆப்கன். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் முஹமது சேஷாத் நிலைத்து நின்று கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெறவைத்தார்.133 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், எட்டு சிக்சர் உதவியுடன் 131 ரன்கள் எடுத்தார். ஒருதின போட்டிகளில் ஆப்கன் வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

மூன்றாவது ஒரு தின போட்டி

இரண்டு போட்டிகளை வென்று 2-0 என ஆப்கன் முன்னிலை வகிக்க,  ஜிம்பாப்வே சற்று அதிர்ச்சியானது. மூன்றாவது போட்டியை வெல்லாவிட்டால் தொடரை இழக்க  நேரிடும் என்பதால், ஆக்ரோஷமாக விளையாடியது ஜிம்பாப்வே. முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள்தான் எடுத்தது ஜிம்பாப்வே அணி. எனினும் மனம் தளராமல் பவுலிங்கில் அசத்தியது. லுக் ஜோங்வே ஐந்து விக்கெட்டுகளை அள்ள, வெறும் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கன்.


 


நான்காவது ஒரு தின போட்டி

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 226 ரன்களை எடுத்தது. மூன்றாவது போட்டியை போலவே நான்காவது போட்டியிலும் அபாரமாக பந்து வீசி,  ஆப்கனை 161 ரன்களுக்கு சுருட்டியது ஜிம்பாப்வே. ஜிம்பாப்வே பவுலர் சிபாபா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் தொடரை சமன் செய்தது ஜிம்பாப்வே


ஐந்தாவது ஒரு தின போட்டி

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. மசகட்சாவின் அபார சதத்தின் உதவியால் 248 ரன்களை குவித்தது ஜிம்பாப்வே. சேசிங்கில் ஆப்கானிஸ்தான் சோடை போய்விடும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். 146 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஆப்கன். அப்போதுதான் குல்பதன் நபி, ஆப்கனின் தோனியாக மாறி வெளுத்துக்கட்ட ஆரம்பித்தார்.

ஆப்கன் வெற்றிக்கு கையில் இரண்டு விக்கெட்டுகள் மீதமிருக்க, கடைசி ஓவரில் பத்து ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் இரண்டு ரன், அடுத்த பந்தில் ஒரு வைடு மற்றும் பவுண்டரி, அதற்கடுத்த பந்தில் இரண்டு ரன், நான்காவது பந்தில் சிக்சர் அடித்து, மிச்சம் இரண்டு பந்துகளை வைத்து ஆப்கானிஸ்தானுக்கு தொடரை வென்று தந்தார் குல்பதன் நபி. இந்த போட்டியில் 68 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஆறு சிக்சர் உதவியுடன் 82 ரன்கள் விளாசி, அணிக்கு வெற்றியை தேடித்தந்த நபிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. ஆப்கனின் சாதனை வெற்றியை ஆப்கானிஸ்தான் நாடே கொண்டாடிவருகிறது.
 



 மிரட்டும் ஆப்கானிஸ்தான்


கிரிக்கெட் விளையாடும் நாடுகளில்  தற்போது அயர்லாந்துக்கு அடுத்தபடியாக ஆப்கான்ஸ்தானும் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த உலகக்கோப்பையில் ஓரளவு சிறப்பாகவே விளையாடியது ஆப்கன். கத்துக்குட்டி அணியான ஆப்கன்,  கிரிக்கெட் உலகில் மேன்மேலும் முன்னேறி பல சாதனைகள் படைக்கட்டும்.


- பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close