Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசிகர்களுக்கு நிம்மதி : ஓவர்களுக்கிடையே விளம்பரமில்லாத கிரிக்கெட்!

ந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டுதான் எல்லாம். கிரிக்கெட் நடந்தால் அனைத்தையும் மறந்து தொலைகாட்சி முன்னால் அமர்ந்து விடும் இந்த வழக்கம், பி.சி.சி.ஐ.க்கு பணத்தை கொட்டோ கொட்டெவென்று  கொட்ட வைத்தது. ஸ்டார் முதல் நியோ வரை அனைத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும்  இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடரென்றால், அதன் உரிமத்தை பெற  குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமானது.

இதற்கிடையே  இந்திய கிரிக்கெட்டை சீரமைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, தனது பரிந்துரைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.அதில் ஒன்று, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது ஓவருக்கு இடையே வரும் இடைவெளியின் போது, விளம்பரங்கள் ஒளிபரப்பக் கூடாது என்பதுதான். 

அதே வேளையில், தேனீர் இடை வேளை, உணவு இடைவேளை போன்றவற்றின் போது விளம்பரம் ஒளிபரப்ப எந்த தடையும் தேவையில்லை என்றும் லோதா கமிட்டி தெரிவித்துள்ளது. சில சமயங்களில் விக்கெட் விழும் சமயங்களில் கூட, விளம்பரங்கள் ஒளிபரப்பாவது உண்டு. சில சமயங்களில் பந்துவீச்சாளர் ஓடி வரும் போது கூட விளம்பரங்கள் கட்டம் கட்டி ஒளிபரப்புவது உண்டு. இதுவெல்லாம் நிச்சயம் ரசிகர்களுக்கு  எரிச்சலை  ஏற்படுத்தும் விஷயங்கள் என்று லோதா கமிட்டி தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

லோதா கமிட்டியின் இந்த பரிந்துரையினால் பி.சி.சி.ஐ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், பி.சி.சி.ஐ கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். ஒருநாள் போட்டியென்றாலும் டெஸ்ட் போட்டியென்றாலுm குறைந்தது 90 ஓவர்கள் வீசப்படும். ஓவர்  இடைவெளியின் போதுதான், போட்டியை ஒளிபரப்ப உரிமம் பெற்ற நிறுவனங்கள் விளம்பர வருவாய் ஈட்ட முக்கிய காரணமாக இருக்கும்.

கிரிக்கெட் விளையாட்டில் உள்ள, இந்த ஓவர் இடைவெளி காரணமாகத்தான் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் கிரிக்கெட் உரிமத்தை பெற முட்டி மோதிக் கொண்டன. இந்தியாவில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற, இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அதே வேளையில் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு போட்டிகளில், இடைவேளையில் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப முடியும்.

ஆனால் தற்போது லோதா கமிட்டியின் இந்த பரிந்துரை அமலுக்கு வரும் பட்சத்தில் பி.சி.சி.ஐ கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதே வேளையில் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியாக போட்டியை ரசிக்க வழிவகை ஏற்படும்.


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ