Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியாவின் இந்த 5 அஸ்திரங்கள்?

ந்திய கிரிக்கெட் அணி, போன வருடம் ஜிம்பாப்வே தொடர் தவிர வேறெந்த ஒருநாள் போட்டித் தொடரையும் கைபற்றவில்லை. உலகக் கோப்பையில் அரையிறுதி, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடரை இழந்தது என தோனி அண்ட் கோ சறுக்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு, சில புதுமுகங்கள் மற்றும் அனுபவசாலிகள் என முழு பலத்தோடு சென்றிருக்கிறது இந்திய அணி. இது பலம் என்றாலும், சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துவது கடினம் என்பதையும் மறக்கக் கூடாது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு 5 விஷயங்கள் சாதகமாக இருக்கிறது.


தெறி பேட்டிங்

பேட்டிங்கை பொறுத்தமட்டில் இந்தியா எப்போதுமே கில்லி. ரோஹித், தவான், கோலி, ரஹானே, தோனி, மணீஷ் பாண்டே என அனைவரும் பயிற்சி ஆட்டத்தில் கலக்கி, ஆஸி ஆடுகளங்களுக்கு செட் ஆகியிருப்பது இந்திய அணிக்கு முதல் பலம். இவர்களில் யாராவது இருவர், ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ஸ்கோர் அடித்தால் கூட,  இந்தியா 300 ரன்களை தாண்டும். பயிற்சி ஆட்டத்தை வைத்து எடை போட முடியாது என்றாலும்,  அங்குள்ள சூழலுக்கு செட் ஆனது பெரிய விஷயம். அதிலும் பயிற்சி ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்ட அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. க்ரீஸை விட்டு ஒரு அடி தூரம் மேலேறி வந்து, பந்துகளை விரட்டினார்கள். இதனால் ஆஸி பந்துவீச்சாளர்களின் பவுன்சர், யார்க்கர்களை துவம்சம் செய்ய முடியும் என்ற உத்தியையே காட்டுகிறது.


பந்துவீச்சில் இளம் ரத்தங்கள்


அஸ்வின், ஜடேஜா, உமேஷ் என பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நன்கு ஆடி பழக்கமுடையவர்கள். காயம் காரணமாக ஷமி வெளியேறி இருந்தாலும் புவனேஷ் குமார், சரண் ஆகியோர் ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். பயிற்சி போட்டிகளை சிறப்பாக கையாண்ட இந்திய பந்துவீச்சாளர்கள்,  குறைவான ஸ்கோரை கூட சேஸ் செய்ய விடாமல் தடுத்தனர். அஸ்வின் துருப்பு சீட்டாக இருப்பார். புதிய பந்து வீச்சாளர்கள் பற்றி ஆஸி வீரர்களுக்கு அவ்வளவாக தெரியாது. அவர்கள் கலக்கினால் ஆஸி கண்டிப்பாக திணறும்.

 


நம்பர் 4 கேப்டன் கூல்

அணியை நிர்வகிப்பதிலும், வீரர்களை களமிறக்குவதிலும் பல ஃபார்முலாக்களை பயன்படுத்திவந்த தோனி, 3வது இடம் தவிர மற்ற அனைத்தையுமே சரி செய்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ரோஹித், தவான் கூட்டணி க்ளிக்கானால் எதிரணி காலி. தோனி, ஜடேஜா, அஸ்வின் பின்வரிசையில் கைகொடுப்பார்கள். இங்கு சிக்கலே கோலி, ரஹானேவில் யாருக்கு மூன்றாவது இடம் என்பதுதான். கோலி, ரஹானே இருவருமே 4வது இடத்தில் சறுக்குவதும், 3வது இடத்தில் சிறப்பாக ஆடுவதும் தோனிக்கு தலைவலி. கோலி, தோனி, ரஹானே என்ற ஃ பார்முலாவைதான் கடைசியில் கேப்டன் கூல் கையில் எடுப்பார் எனத் தோன்றுகிறது. ஆஸி ஆடுகளங்களில்,  கடந்த சீஸனின்போது கோலி  குவித்த ரன்கள் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். கேப்டன் கூல் பலமாக நினைப்பது 7 நபர்கள் வரை பேட் செய்வதுதான்.

ஸ்டார்கள் இல்லாத ஆஸி!

இந்திய அணி ஒவ்வொரு முறை ஆஸி செல்லும் போதும் தொல்லையாக இருப்பது ஜான்சன், ஸ்டார்க்தான் இருவருமே இந்த முறை அணியில் இல்லை. பந்துவீச்சில் கிட்டத்தட்ட ஆஸி அணி பலமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடியவர் என்றாலும்,  அஸ்வினிடம் வீழ்வது அவரது பலவீனமாக தொடர்கிறது. புதுமுக வீரர்களோடு களமிறங்கும் ஆஸி அணி வீரர்கள், பலம் வாய்ந்த இந்திய பேட்டிங்கை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கேள்வியே. மேற்கிந்திய தீவுகளுடன் வெற்றியை பெற்றிருந்தாலும், அந்த அணியில் இடம்பெற்றிருந்த பலர் இங்கு இடம் பெறவில்லை. முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் ஆஸி அணியை குறைத்து எடைபோட முடியாது. வார்னர், பெய்லி, ஸ்மித் அதிரடி காட்டினால் இந்தியாவின் பந்துவீச்சு ஆட்டம் காணும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்!


பவுன்ஸர் மற்றும் ஸ்லெட்ஜிங்

பவுன்ஸர் மற்றும் ஸ்லெட்ஜிங்- இந்த இரண்டு வார்த்தைகள் இல்லாமல் இந்திய - ஆஸ்திரேலிய தொடர் இருந்தால் சுவாரஸ்யம் இல்லாமல்தான் இருக்கும். இந்திய வீரர்களை பவுன்ஸரால் மிரட்டும் ஜான்ஸன் ஸ்டார்க் இல்லாவிட்டாலும், இந்திய அணிக்கு பவுன்சர்கள் காத்திருக்கும் என்பதில் அச்சமில்லை. ஆனால் இந்த முறை இந்திய அணியுமே அக்ரஸிவ் ஆட்டத்தைதான் கையில் எடுக்கும். கேப்டன் தோனி கூல் அணுகுமுறையை கடைபிடித்தாலும், ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார் என்றும், டெஸ்ட் போட்டிகளில் அக்ரஸிவ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே அணிதான் இங்கும் என்பதால் இந்தியாவும் இந்த முறை கோதாவில் இறங்கும் என்பதில் அச்சமில்லை. பந்துகள் பவுன்சராக எகிறினால் சிக்சர் பறக்கும், கோவப்பட்டு திட்டினால் ஸ்லெட்ஜிங்க் உறுதி. இவையெல்லாம் நாளை காலையே துவங்கி விடும்.

இதுவும் தற்பொது இந்திய அணியின் புதிய பலமாக மாறியுள்ளது. இதை போட்டியில் தவிர்க்க முடியாது என அணி மேலாளர் ரவி சாஸ்திரியும் கூறியுள்ளார்.

ஆக, ஆஸ்திரேலியாவில், இந்தியாவின் வெற்றிக்காக நாங்கள் காத்துட்டு இருக்கோம்!

- ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ