Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.45 ஆயிரம் கோடி ஊழல்: உருளும் யுவ்ராஜ், ஹர்பஜன் தலைகள்!

ரட்டை மடங்கு லாபம் தரப்படும் எனக்கூறி சுமார் ஐந்தரைக் கோடிப் பேருக்கு நிலங்களை விற்று சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. பியர்ல்ஸ் குரூப் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரே நிலத்தை பலருக்கும் விற்று ஏமாற்றியுள்ளது. இந்நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு மொகாலியில் நிலத்தை பரிசாகக் கொடுத்திருப்பதால் அவர்களை சி.பி.ஐ விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தையை நிர்வகித்துவரும் செபி அமைப்பு, பியர்ல்ஸ் குரூப் என்ற நிறுவனத்தை, சில தவறான நடவடிக்கைகள் காரனமாக, கடந்த 2013ம் ஆண்டு முதல் கண்காணித்து வந்தது. சுமார் ஐந்தரைக் கோடி முதலீட்டாளர்களுக்கு நிலங்கள் விற்றதில் முறைகேடுகள் இருப்பதாக அறிந்த உச்ச நீதிமன்றமும் கடந்த பிப்ரவரியில் இந்நிறுவனம் மீது சி.பி.ஐ விசாரணையை அமைத்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிர்மல் சிங் பங்கூ கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்ந்து அந்நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வேறு சிலரும் கைதாகினர். இரட்டை மடங்கு லாபம் தரும் என்று கூறி ஒரு மனையை விற்றுவிட்டு, அதே மனையை பின்னர் வேறு சிலருக்கும் இந்நிறுவனம் விற்றுள்ளது. லட்சக்கண்க்கான மக்கள் இந்நிறுவனத்தால் மோசடி மோசடி செய்யப்பட்டுள்ளனர்.



யுவராஜ், ஹர்பஜனிடம் விசாரனை?

இந்நிறுவனம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்களுக்கு நிலங்களை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளது. அவற்றுள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்கின் பெயர்கள் அடங்கும். இந்த இருவருக்கும் பியர்ல்ஸ் நிறுவனம் மொகாலியில் நிலங்களை அன்பளிப்பாக அளித்துள்ளது. நட்பு அடிப்படையிலா இல்லை தொழில் ரீதியில் அன்பளிப்பு அளிக்கப்பட்டதா என  தெரியவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இவ்விரு வீரர்களிடமும் சி.பி.ஐ இந்த ஊழல் சம்பந்தமாக விசாரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனமானது சில ஆண்டுகள் முன்பு கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கு ஸ்பான்சராக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி 2011ம் ஆண்டு நடந்த இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரையும் இந்நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது.



பிரெட் லீக்கும் தொடர்பு?

ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்துள்ளார். இந்நிறுவனத்தை ஆஸ்திரேலியாவில் பிரபலமடையச் செய்வதற்காக பிரெட் லீயைத் தூதுராக ஒப்பந்தம் செதுள்ளனர். இதனால் இந்த ஊழல் தொடர்பாக பிரெட் லீயும் விசாரிக்கப்படலாம் என்று சி.பி.ஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. யுவராஜ் மற்றும் ஹர்பஜன் ஆகியோருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் சி.பி.ஐ கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திடம் நிலத்தை அன்பளிப்பாகப் பெற்ற மற்ற கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடங்கிய பட்டியலையும் சி.பி.ஐ தயாரித்து வருகிறது.

1996ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியா முழுவதும் தற்போது 1 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தைத் தொடங்கிய நிர்மல் சிங் பங்கூ தொடக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பால் விற்றவராம்.

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் வெடித்த சில வாரங்களிலேயே இந்திய கிரிக்கெட் வீரர்களை சம்பத்தப்படுத்திய இன்னொரு ஊழல் புகார் வெடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ