Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிர்ச்சியில் சிடேன்: புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய ரியல்மாட்ரிட்டுக்கு தடை!

உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணி, இன்னும் ஓராண்டு காலத்திற்கு எந்தப் புதிய வீரர்களையும் வாங்கக் கூடாது என்று சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தடை விதித்துள்ளது. மைனர் வீரர்களை ஒப்பந்தம் செய்ததில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி ரியல் மாட்ரிட் அணிக்கும், மாட்ரிட்டை மையமாகக் கொண்ட லா லிகாவின் மற்றுமொரு பெரிய அணியான அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பார்சிலோனா அணிக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு அது சமீபத்தில் தான் நிறைவடைந்தது.



விதிமுறைகள் மீறப்பட்டதா?

கால்பந்தைப் பொருத்தவரையில் வீரர்கள் அணிகள் மாறுவது என்பது நமக்கு சாதாரண விஷயமாகத் தோன்றும். ஆனால் அதற்குப் பல விதிமுறைகள் உண்டு. அவ்வீரர் விளையாடப்போகும் நாடு, அவருக்கு வேலை செய்யும் உரிமம் வழங்க வேண்டும். வீரரை வாங்கும் அணி, அந்த வீரரின் பழைய ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல சிக்கல்கள் உண்டு. மற்ற வீரர்களை விடவும் மைனர் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான விதிமுறைகள் தான் அதிகம். இந்நிலையில் தான் 2005 முதல் 2014 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்த விதிமுறைகளை மீறி 39 வீரர்களைக் கையெழுத்திட்டதாக ரியல் மாட்ரிட் அணி மீது குற்றம் சாட்டியது ஃபிஃபா. மைனர் வீரர்களின் தந்தைகளுக்கு ஸ்பெயினில் வேலை செய்யும் உரிமம் இல்லை, சர்வதேச டிரான்ஸ்ஃபர்களுக்கான சான்றிதழ்கள் சரியானதாக இல்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. அதே குற்றச்சாட்டு அத்லெடிகோ அணி மீதும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு அணிகளும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. மேலும் தங்கள் மீதான தடையை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்யவுள்ளன.



என்ன செய்தார் ஜிடேன்?

தற்போது ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜிடேனின் நான்கு மகன்களும் ரியல் மாட்ரிட்டின் இரண்டாம் தர அணியிலும், சிறுவர் அணியிலும் விளையாடி வருகின்றனர். விதிமுறை மீறி ஒப்பந்தம் செய்யப்பட்ட மைனர் வீரர்கள் பட்டியலில் அவர்கள் நால்வர் பெயரும் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2000 ஆண்டு முதல் ரியல் அணிக்காக ஜிடேன் விளையாடி வருகிறார். அவர் விளையாடிய கடைசி காலகட்டத்திலேயே, அவரது முதல் மகன் ரியல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் “அவர்களை ஒப்பந்தம் செய்ததில் எந்த விதிமுறையும் நடக்கவில்லை. ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை மிகவும் தவறானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்கிறார் ரியல் மாட்ரிட் அணியின் உரிமையாளர் ஃபியோரன்டினா பெரெஸ்.

ரியல் மாட்ரிட் அணிக்கு 3 லட்சம் யூரோக்களும், அத்லெடிகோ அணிக்கு 6 லட்சம் யூரோக்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மற்றும் அடுத்த ஜனவரி மாதங்களில் வரும் டிரான்ஸ்ஃபர் விண்டோக்களில் வீரர்களை இரு அணியாலும் வாங்க முடியாது. இந்தத் தடை தொடரும் பட்சத்தில் இரு அணிகளும் 2007-2008 தொடர் வரை எந்த வீரரையும் ஒப்பந்தம் செய்ய முடியாது.

 



யாருக்கு பாதிப்பு?

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவ்விரு அணிகளியும் விட ஐரோப்பாவின் மற்ற முன்னணி அணிகள் தான் பெரும் வயித்தெரிச்சலில் உள்ளன. இந்தத் தடை முடியும் வரை யாரையும் வாங்க முடியாது என்பதால் அவ்விரு அணியும் தங்களது முன்னணி வீரர்களை விற்க வாய்ப்பில்லை. மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், மான்செஸ்டர் சிட்டி போன்ற பல அணிகளும் அவ்வணி வீரர்களை மடக்கிப் போடக் காத்திருந்தன. மான்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோ மற்றும் பேலேவையும், செல்சி அணி கிரீஸ்மேன், மார்டினஸ் மீதும் பெரும் குறியாய் இருந்தன. இந்தத் தடையால் பிற அணிகளின் ஆசையும் காற்றில் கரைந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்போது நடந்து கொண்டிருக்கும் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்பதால் பணபலம் கொண்ட ரியல் மாட்ரிட் அணி, மற்ற அணிகளின் வீரர்களை வலைத்துப்போட முயற்சிக்கலாம். பல நாட்களாய் ஹசார்ட், ஸ்டோன்ஸ், டீ கீ போன்ற வீரர்கள் மீது ரியல் அணி கண்ணாய் இருந்து வருவதால், அவ்வீரர்கள் விளையாடி வரும் செல்சி, எவர்டன். மேன்செஸ்டர் யுனைடெட் போன்ற அணிகள், தங்களின் சிறந்த வீரர்களை இழக்ககூடுமோ என்ற பீதியில் உள்ளனர்.

இரு அணிகளுக்கும் விதிக்கப்பட்ட இந்தத் தடையானது, அவ்விரு அணிகளை மட்டுமல்லாது மொத்த கால்பந்து உலகையும் பாதித்துள்ளது என்பதே உண்மை. மேல்முறையீட்டில் வெற்றி பெறுவார்களா இல்லை தடையால் உடைபட்டுப் போவார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ