Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாக்அவுட் நாயகன் முகமது அலி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?

ளம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலியின் பிறந்த தினம் இன்று. தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும்  முகமது அலி, அடிப்படையில் அமைதியை விரும்புவர்.

வியட்நாம் போரை எதிர்த்ததற்காக தடை செய்யப்பட்டாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாதவர். மருத்துவர்களே கைவிட்டாலும் தனது மனோபலத்தால் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் நடந்த சில ருசிகர சம்பவங்கள் இங்கே

சைக்கிள் திருடனால் குத்துச்சண்டை வீரராக மாறியவர்


1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் காசியஸ் மார்செலஸ் கிளே. இதுதான் முகமது அலியின் இயற்பெயர். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்ததிலேயே ஊறியிருந்தது. அலியின் 12வது வயதில், அவரது சைக்கிளை ஒருவன் திருட முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தியுள்ளார்.

நொடி நேரத்தில் பல குத்துகள் விட்ட அலியைப் பார்த்த ஜோ மார்டின் என்ற ஒரு போலீஸ்காரர், அவரிடம் விசாரிக்க, “அந்தத் திருடனை துவம்சம் செய்ய வேண்டும்” என முகமது அலி கூறியுள்ளார்.  அவரது திறமையைப் பார்த்து வியந்த மார்டின், அலியை  குத்துச்சண்டையின் பக்கம் திசை திருப்பி, அவரே பயிற்சியாளராகவும் இருந்தார். சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்லாமல் பேருந்துடன் ஓடியே முகமது அலி பள்ளிக்கு செல்வாராம்.

ஆட்டோகிராப் போட மறுக்காதவர்


1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றுள்ளார் அலி.

ஆனால் அவரோ, “ இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று கோபமாகக் மறுத்துவிட மனம் நொந்துவிட்டாராம் அலி. தன்னைப் போல எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று கருதிய அலி யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் வீசினார்


1960ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அமெரிக்காவில் கறுப்பர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக் கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது. ஒலிம்பிக் போட்டி முடிந்த நாட்டிற்குத் திரும்பிய அலி, “நான் இந்நாட்டிற்காக தங்கப் பதக்கம் வாங்கி வந்துள்ளேன். நான் இப்போது ஹோட்டலில் உணவு சாப்பிட போவேன்” என கூறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று காபி கேட்டுள்ளார்.

“நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண்   பதில் அளித்தார். இதனால், கடும் கோபமடைந்தார் முகமது அலி. சண்டையிட்டு வெளியேறிய முகம்மது அலி,தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த  பதக்கத்தை நான் அணிய விரும்பவில்லை” என்றும் முகமது அலி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

போரை எதிர்த்த அகிம்சைவாதி

1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில், அமெரிக்க படையினருக்காகப் போரிட முகமது அலி மறுத்தார். பலமுறை எச்சரிக்கப்பட்டும், “போர் என்பது தனது மத கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறி மறுத்தார் அலி. இதனால் அவரது ஹெவி வெயிட் பட்டம் பறிக்கப்பட்டது. குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் அவருக்குத் தடை விதித்தன. அதுமட்டுமின்றி
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட்டும் பறிக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை முகமது அலி.

தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறாமல் சுமார் 42 மாதங்கள் தான் நேசித்த குத்துச்சண்டை ரிங்கில் கால் வைக்காமல் ஒதுங்கியே இருந்தார். போருக்கு எதிரான இவரது நிலைப்பாடு மார்டின் லூதர் கிங்கையே ஊக்குவித்ததாக அவர் கூறியுள்ளார். சுமார் மூன்றரை ஆண்டு காலம் குத்துச்சண்டடை பக்கமே தலை வைத்து படுக்காமல் வைராக்கியமாக இருந்து காட்டினார் அலி. பின்னர் களம் கண்ட பிறகு முகமது அலியிடம் சற்றும் வேகம் குறையவில்லை.

சொல்லி அடிக்கும் கில்லி

முகமது அலி போட்டிக்கு முன்னரே, எதிராளிகளை தனது சொற்களால் தாக்கத் தொடங்கிவிடுவார். ஒருமுறை நடப்பு சாம்பியன் சோனி லிஸ்டனுடன் போட்டியிட்டார் அலி. போட்டிக்கு முன்பாக “லிஸ்டன் ஒரு கரடி. அவரை வென்ற பிறகு ஒரு மிருக காட்சி சாலையை அவருக்குப் பரிசளிப்பேன் என்று
கூறினார் அலி. சொன்னதைப் போலவே லிஸ்டனை பொளந்து கட்டினார் அலி.

லிஸ்டனுக்கு மருத்துவ உதவி செய்த அவரது மருத்துவர்கள், அவரது கிளவுசில் மருந்தைத் தடவிவிட, அது பட்டதும் அலியின் பார்வை மங்கியது.  லிஸ்டன் இதற்கு முன்பும் பலமுறை இப்படி பல வீரர்களை சூட்சுமமாக வீழ்த்தியுள்ளார். எரியும் கண்களில் கண்ணீரோடு விளையாடிய அலி, கோபத்தை தனது பன்ச்களில் காட்டி லிஸ்டனை நிலைகுலைத்து நாக்-அவுட் முறையில் வென்றார். தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அலி நாக்-அவுட் முறையில் முகமது அலி  தோற்றுள்ளார் .
மரணத்தை வென்று வருகிறார்
 

குத்துச்சண்டையின் போது, பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்கு   தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. கடந்த  2013ல் கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்ட அலி, ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூற, அதையும் தாண்டி வந்தார் அலி.  அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு. சிறுநீரகக் கோளாறு , என பல நோய்கள் அலியை வதைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் மரணத்தாலும் இன்னும் அலியை வெல்ல முடியவில்லை!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close