Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த அரசு வேலையை உதறிய டெல்லி வாழ் தமிழர்!

ஐ.ஐ.டி யில் படிப்பு, மிகச்சிறந்த வேலை, சொகுசான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தேசத்தில் தன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருக்கும் ஓர் விளையாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆறுமுகம் என்ற டெல்லி வாழ் தமிழர்.

தான் நேசித்த ஹாக்கி விளையாட்டுக்கு,  இளைஞர்களிடையே ஆர்வமில்லாததாலும், சீரான பயிற்சி இல்லாததாலும், அவ்விளையாட்டு அழிந்து வருவதை தாங்கிக்கொள்ள மனமில்லாமல், ‘ஆயிரம் ஹாக்கி கால்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் மூலம்,  நாடு முழுவதும் 110 பள்ளிகளில் சுமார் 4,500 சிறுவர், சிறுமியருக்கு ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார் ஆறுமுகம்.

ஹாக்கி மீதான ஆறுமுகத்தின் காதல் அளப்பரியது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும்,  தொடர்ந்து மும்பை ஐ.ஐ.டி யில் முதுகலைப் பட்டமும் பெற்ற ஆறுமுகம், டெல்லியில் பணியாற்றி வந்தார். எட்டு முறை  ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணி,  கடந்த 2008-ம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிற்குத் தகுதி பெறாமல் போக, மனம் பொறுக்காத ஆறுமுகம், ஹாக்கி விளையாட்டை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஹாக்கி மீதான காதல்

ஹாக்கி விளையாட்டிற்காக தான் பார்த்து வந்த வேலையை உதறிய ஆறுமுகம், ‘ஹாக்கி சிட்டிசன்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். தன்னைப் போலவே ஹாக்கியில் ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அப்படி உருவானதுதான் 'ஓராயிரம் ஹாக்கி கால்கள்' ( OTHL - One thousand hockey legs) என்ற அமைப்பு.

முதல் கட்டமாக, 11 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு அடிப்படை ஹாக்கி பயிற்சிகள் அளித்து, விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். அதன்படி முதலில் டெல்லி, கான்பூர், கொல்கத்தா, சென்னை, புதுவை என ஐந்து நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது.  ஆரம்பத்தில் பல பள்ளிகள், மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி அளிக்க மறுப்பு தெரிவித்தன.  ஆனால் தொடர்ச்சியான ஈடுபாட்டால், இந்த 5   நகரங்களில் மட்டும் 110 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாணவர்கள் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

   

தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசு பள்ளிகளின் மீதே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். பள்ளி மைதானங்கள் மட்டுமின்றி பொது மைதானங்களையும் தேர்ந்தெடுத்து,  அவற்றை பயிற்சிக்கு ஏற்ற வகையில் தயார் செய்து, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். சிறுவர்களுக்குப் பயிற்சியளிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கான பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார் ஆறுமுகம். இவரது நோக்கத்தை அறிந்துகொண்டு,  ஒருசில பயிற்சியாளர்கள் சம்பளம் பெறாமலேயே பயிற்சியளித்தாலும், ஒருசிலருக்கு சம்பளம் தரவேண்டிய நிலையுள்ளது. அவர்களுக்காக தனது சொந்த பணத்திலேயே சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஆறுமுகம். இப்பொழுது ஒருசில ஸ்பான்சர்கள் கிடைத்திருப்பதால்,  மேலும் சில பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஓ.எச்.டி.எல். பயிற்சியோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கான ஹாக்கி தொடர்களையும் நடத்தி அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருகின்றனர்.


விளையாட்டு ஒழுக்கம் தரும்

ஹாக்கி விளையாட்டு குறித்து ஆறுமுகம் கூறுகையில்,  “இந்தியாவிற்கென்று ஹாக்கி வரலாற்றில் ஒரு சரித்திர இடமுண்டு. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிகூடப் பெறமுடியாமல் போனதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இதைத் தொடங்கியபோது பல பள்ளிகளும், தன்னார்வ நிறுவனங்களும் தொடக்கத்தில் நம்பவில்லை. ஆனாலும் எங்களது பணியை பார்த்து, தற்போது அவர்கள் மாணவர்களை அனுமதிக்கின்றனர்.

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒழுக்கத்தைக் கற்றுத்தரும். பல சிறுவர்கள் ஆரம்பத்தில் சீரியசாக இருக்க மாட்டார்கள். ஆனால் போகப்போக அவர்களது கவனமும், ஒழுக்கமும் அதிகரித்துவிட்டது. சிறுவர்கள் பள்ளிகளில் வெறும் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டுவந்து, அவர்களட் திறமையை வளர்க்க வேண்டும். ஹாக்கியில் இந்தியா இழந்த இடத்தைப் பிடிக்கும் வரை எங்கள் லட்சியம் ஓயாது’ என்கிறார் ஆறுமுகம்.

உலகிலேயே தற்போது எந்த அமைப்பும் ‘ஹாக்கி இயர்புக்’ வெளியிடுவதில்லை. சில புகழ்பெற்ற ஐரோப்பிய நிறுவனங்கள் கூட இதில் தோல்வியடைந்த நிலையில் சுமார் 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஹாக்கி இயர்புக் வெளியிட்டு வருகிறார் ஆறுமுகம். அதுமட்டுமின்றி ஆசியாவிலேயே முதன்முறையாக பெண்கள் ஹாக்கி பற்றிய ‘கிளிம்ப்சஸ் ஆஃப் வுமன்ஸ் ஹாக்கி’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பற்றி இவர் எழுதிய கட்டுரை இன்று 11ம் வகுப்பி சி.பி.எஸ்.இ ஆங்கிலப் புத்தகத்தில் பாடமாய் இடம்பெற்றுள்ளது.



                 


கொடிகட்டிப்பறந்த விளையாட்டைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் ஆறுமுகத்திற்குத் தேவை பாராட்டுகள் அல்ல. ஆதரவுக் கரங்கள்தான். 2016 ரியோ ஒலிம்பிக் இல்லாவிட்டால்லும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது இந்திய ஹாக்கி அணி, இழந்த நன்மதிப்பை மீட்க வேண்டும். அதற்கு ஆயிரம் கால்கள் என்ன, லட்சம் கால்களை உருவாக்க காத்திருக்கும்  ஆறுமுகத்திற்கு வாழ்த்துக்கள்...சக் தே இந்தியா!!!
 


-மு,பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ