Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிர வைக்கும் பி.பி.சி : கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்!

கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட முக்கிய டென்னிஸ் தொடர்களில், மேட்ச் பிக்சிங் நடைபெற்றிருப்பதாக அதிர வைக்கும் தகவல்களை பி.பி.சி. வெளியிட்டுள்ளது. உலக தரவரிசையில் முதல் 50 இடத்திற்குள் இருக்கும் வீரர்களில், 16 பேர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருப்பதாக பி.பி.சி. நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு போலந்து நாட்டில் நடந்த ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில்,  அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் வசல்லோ ஆர்கியூலோவுடன்,   ரஷ்யாவின் மற்றொரு வீரர் நிகோலோ டெவிடென்கோ விளையாட மறுத்தார். இதையடுத்து பஸ்பீட் நியூஸ் மற்றும் பி.பி.சி. நிறுவனங்கள் புலனாய்வு  விசாரணை மேற்கொண்டது. தற்போது ஐரோப்பாவில் டென்னிஸ்,  அதிகளவு சூதாட்டம் நடைபெறும் விளையாட்டாக மாறி வருவதாக தெரிய வந்துள்ளது.

கவுரவமிக்க விம்பிள்டன் போட்டியிலும்,  3 ஆட்டங்களில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.  மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வீரர்களில்,  அமெரிக்க ஓபன் சாம்பியன் மற்றும் விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியனும் ஒருவர்.

போட்டித் தொடங்கும் முன், ஹோட்டல் அறைகளில் தங்கும் வீரர்களை சூதாட்டக்காரர்கள் சந்தித்து டீல் பேசுகின்றனர். ஒரு போட்டிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்குகின்றனர்.

ரஷ்யா மற்றும் இத்தாலியில்தான் டென்னிசில் அதிகளவு சூதாட்ட பணம் புழங்குகிறது. ஸ்கோர்களை மையமாக வைத்து பெட்டிங் வைக்கப்படுகிறதாம். இதில் விம்பிள்டன் மற்றும் பிரென்ச் ஓபன்களும் அடக்கம்.

ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய ஒரு வீரர்,  முதல் செட் முடிந்த பின் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக கூறப்படுகிறது.

டென்னிசை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் 70 வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2008-ம்  ஆண்டு பி.பி.சி.,  28 டென்னிஸ் வீரர்களுக்கு மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்பு இருப்பதாக ஆண்கள் டென்னிஸ் போட்டியை நடத்தி வரும் ஏ.டி.பி. அமைப்பிடம் அறிக்கை அளித்திருந்தது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐரோப்பாவை பொறுத்தவரை டென்னிஸில்தான் அதிகளவு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய விளையாட்டு பாதுகாப்பு அமைப்பு,  கடந்த ஆண்டில் நடந்த 50 ஆட்டங்களை கண்காணித்ததில் இது தெரிய வந்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ