Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சினுக்கு கைதட்ட சொன்ன அப்பாக்கள், இவர்களை அறிமுகப்படுத்தியதுண்டா?

மூன்று போட்டிகள்... மூன்றிலும் 290க்கும் மேற்பட்ட ரன்கள். ஆனால் மூன்றிலும் தோல்வி. இதற்குக் காரணம் மோசமான பந்துவீச்சு என்று தோனி சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. இப்போது மட்டுமல்ல, கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் விளையாடிய காலம் தொட்டு இந்திய பந்துவீச்சு என்பது இப்படித்தான்.

கவாஸ்கர், சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிவிடும்  இந்திய அணியால், வாசிம் அக்ரம் போலவோ அல்லது பேட்ரிக் பேட்டர்சன் போலவோ ஒரு பந்துவீச்சாளரை உருவாக்க முடியாமல் போவது ஏன்? என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை. கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற விளையாட்டுகளிலும் ஒரு ஜாம்பவான்களை உருவாக்க முடியாதது ஏன்? இதற்காக இந்திய விளையாட்டு அமைச்சகத்தையும் தேர்வுக் குழுவை மட்டும் குற்றம் சொல்வது சரியா? இல்லவே இல்லை. விளையாட்டு பற்றிய அடிப்படையே இங்கு தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
 
 


“வாங்கப்பா நாம விளையாடலாம்” என மகன் கேட்டதும் பிளாஸ்டிக் பேட்டை அதன் கையிலும், பிளாஸ்டிக் பந்தை தன் கையிலும் எடுத்துக்கொண்டு மணிக்கணக்காக விளையாடும் தந்தைகள், இங்கே  கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எத்தனை முறை கேட்ச் கொடுத்தாலும் அதை விட்டுவிட்டு, மகனுக்கு  பந்துபோட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வது  இந்திய அப்பாக்களின் குணம். மகன் அடித்த பந்த இரண்டு அடியைத் தாண்டினாலே ‘சிக்ஸ்’ என்று கூறி உற்சாகப்படுத்தியும் மகிழ்வார்கள்.

ஆனால் இங்கேதான் நமது அப்பாக்கள் தவறு செய்கிறார்கள்.  தந்தைகளின் தேவையெல்லாம் மகனுடைய சின்ன சின்ன சந்தோஷங்கள். எத்தனை அப்பாக்கள் மகனிடம் பந்தைக் கொடுத்து, பவுலர் என்றொரு வேலையும் கிரிக்கெட்டில் இருக்கிறது என்று  சொல்லி வளர்த்திருப்பார்கள்.  சச்சினைக் காட்டி அவருக்கு கைதட்டச் சொன்ன தந்தை, கபில்தேவை காட்டி  அவருக்கு ஒரு சபாஷ் போட சொன்னதுண்டா? இருக்கவே இருக்காது.

இல்லை கிரிக்கெட்டைத் தவிர்த்து வேறு பல விளையாட்டு இந்த உலகில் உண்டென்று சொல்லி சொல்லி வளர்த்தது உண்டா?  பின்னர் எப்படி சர்வதேச தரம் வாய்ந்த  ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவில் இருந்து உருவாகி வருவார்?


ஒருவேளை விக்கெட் வீழ்ச்சியின் அடிப்படையில் கிரிக்கெட்டில் வெற்றி தீர்மானிக்கப்பட்டால்? நிச்சயம் இந்தியாவில் அக்ரமையும் மிஞ்சும் பந்துவீச்சாளர்கள் வரிசையாய் உருவாகி வந்திருப்பார்கள்.  தந்தைகள் அனைவரும் பேட்டைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பந்தை தங்கள் மகன் வசம் கொடுத்துவிடுவார்கள். இது தந்தையாக இருப்பவர்களின் குணம். இந்தியாவில் தந்தைகள்தான் தனது மகன் என்னவாக மாற வேண்டுமென்பதை தீர்மானிக்கிறார்.  தந்தைக்களின் மனநிலை மாறினால்தான், மாற்றங்கள் ஏற்படும்.

எத்தனை இளைஞர்கள் இன்று அஸ்வின், ஹர்பஜன் ஆகியோர் புகைப்படங்களை ஃபேஸ்புக் புரொஃபைல் போட்டோவாக வைத்துள்ளனர். தோனி, கோலி, சச்சின் என பேட்ஸ்மேன்கள் தானே அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். கிரிக்கெட் போட்டி பற்றிய  பேனர்களில் கூட  சச்சின், தோனி படங்கள்தானே இடம் பெறுகின்றன.

தமிழக வீரர் அஸ்வினின் புகைப்படம் கூட நம்மூர் பேனர்களில் பார்க்க முடியாது.  தோனி பார்ம் அவுட் ஆனால் நாம் அவரை குற்றம் சொல்ல சில மாதங்களாவது எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இசாந்த் ஷர்மாவோ, ஐம்பாதாவது ஓவரை வீசி முடித்த அடுத்த நொடியே டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பலியாகிவிடுகிறார். பவுலர்களுக்கான அங்கீகாரம் இங்கு இல்லாதபோது அவர்களால் 100 சதவிகிதம் சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள்?
 

அணியின் 11 இடங்களை நிரப்பத்தானா பந்துவீச்சாளர்கள் ? இயற்கையாகவே நமது பந்துவீச்சாளர்களின் திறன் குறைவு தான். நம் ஊரில் பவுலர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களும்  குறைவு தான். நமது  தேர்வாளர்களும் மோசம் தான். அரசியல் சித்து விளையாட்டும் இங்கு இருக்கிறது.

சிறுவயதிலேயே “நானொரு ஜாகிர் கான் ஆவேன்” என்று சொல்லும் குழந்தைகள் எத்தனை பேர்? “நான் முகம்மது சமியின் ரசிகன்” என்று சொல்லும் இளைஞர்கள் எத்தனை பேர்? சிந்தித்துப் பாருங்கள். வெற்றி ஒன்று தான் நம் நோக்கமா? பரீட்சையில் மதிப்பெண்ணும், கிரிக்கெட்டில் ரன்னும்தான் முக்கியமா? ஒவ்வொரு வீரரையும் ஆதரிப்போம். ஒவ்வொரு விளையாட்டையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.

சச்சின், அக்ரம் மட்டுமல்ல, தந்தைகள் மனது வைத்தால் இந்தியாவில் ஒரு ஃபெடரரையும் மெஸ்ஸியையும் கூட உருவாக்க முடியும். மற்ற அணிகளை பாருங்கள் மக்களே .... மாறுங்கள் மக்களே!

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ