Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரை பறிக்கும் கிரிக்கெட் பந்து... ஹெல்மெட்டுடன் களம் இறங்கிய முதல் நடுவர்!

கேன்பராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நடுவர் ஜான் வார்டு ஹெல்மெட் அணிந்துகொண்டு ஆட்டத்தில் பங்கேற்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பங்கேற்பது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸின் அகால மரணத்துக்கு பிறகு,  கிரிக்கெட் போட்டிகளில் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளினால் இவ்வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு  பஞ்சாப்பிற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே நடந்த  ரஞ்சி கோப்பை போட்டியின்போதும் ஜான் வார்ட்தான் நடுவராக பங்கேற்றார். அப்போது பந்து இவர் தலையில் பட்டு நிலை குலைந்து, தடுமாறி  விழுந்தார். பின்னர் தானே எழுந்து ஆம்புலன்சில் ஏறி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அந்த பந்தை வீசியவர் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் பரீந்தர் சரன் ஆவார்.

அந்த சமயத்தில் நல்லவேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. இதனால்தான் இன்றைய போட்டியில் அவர் முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் போட்டுக் கொண்டு வேலை பார்க்கிறார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு,  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெரார்ட் அபூத் முதல் முறையாக ஹெல்மெட் அணிந்து வந்து பிக் பாஷ் டி  20 போட்டியில்  நடுவராக பங்கேற்றார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த விஜய் ஹஸாரே தொடரின்போது,  நடுவர் பாஸ்சிம் பதக் ஹெல்மெட் போட்டு பணியாற்றினார். ஆனாலும் சர்வேதேச போட்டியில் நடுவர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வந்தது இதுவே முதல் முறையாகும்.

வீரர்களைப் போலவே நடுவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டபல் ஏற்கனவே கூறியுள்ளார். இதன்படி தற்போது ஆஸ்திரேலிய நடுவர் ஜான் ஹெல்மெட்டைக் கையில் எடுத்துள்ளார்.

அடிபட்ட பிறகு வருத்தப்படுவதை காட்டிலும் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லதுதானே என்று கூறுகிறார் ஜான் .

பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றுதான். அதுவும் டி 20 போட்டிகள் வந்த பிறகு நடுவர்கள் பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனினும் மற்ற அம்பயர்கள் இதை பின்பற்றுவார்களா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-எஸ். கே.பிரேம் குமார்

(மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ