Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள்

ழ்மையானவர்கள் நிறைந்த  ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து,  தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு,  இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை  தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில்  டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என  தகவல்கள் கசிகின்றன. அதற்கு மூன்று   முக்கியமான காரணங்களை முன் வைக்கிறார்கள்.

 1. வயது முதிர்ச்சி

 தோனிக்கு வரும் ஜூலை மாதத்தோடு 35 வயது நிறைவடையப்போகிறது. அடுத்த உலகக்கோப்பை போட்டிகள் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. தோனி ஒருவேளை உலகக்கோப்பை விளையாடினால் அவருக்கு 38 வயதாகியிருக்கும். கிரிக்கெட்டில் 38 வயது என்பது மிக மிக முதிர்ச்சியானது. அது மட்டுமல்ல தற்போது டாப் ஃபார்மில் இருக்கும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, அஷ்வின், தவான், அஜின்க்ய ரஹானே, ரெய்னா  ஆகியோர் 27-28 வயதில் இருக்கிறார்கள். இவர்கள் 2019 உலககோப்பை விளையாடும் சமயத்தில் 30 வயதை கடந்தவர்களாக இருப்பார்கள் என்பதால், இவர்களில் யாராவது ஒருவருக்கு உலககோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாகும் பெருமை கிடைத்தால் கூட,  அது 30 வயதில் தான் நடக்கும். 30 வயதை கடந்த சீனியர் வீரர்களை மெல்ல மெல்ல ஓரங்கட்டிவிட்டு தற்போது  ஃப்ரெஷ்ஷான இளம்படையை உருவாக்கிய தோனி, 38 வயது வரையிலும் கேப்டனாக தொடர வேண்டும் என விரும்பமாட்டார். கேப்டனாக அவர் எக்கச்சக்கமாக சாதித்து விட்டார் எனவே அவரே விலகிவிடுவார் அதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.


2. புது அணி.. புது கேப்டன்


இந்திய அணிக்கு அடுத்த ஒருதின தொடர்,  வரும் ஜூன் மாதத்துக்கு மேல்தான் நடக்கவுள்ளது. இனி இலங்கை, ஆசிய கோப்பை, உலககோப்பை, ஐபிஎல் என வரிசையாக டி-20 போட்டிகளை மட்டுமே விளையாடவுள்ளனர் இந்திய வீரர்கள். உலகக் கோப்பை அணியை தயார் படுத்துவதற்கு வரும் ஜூன் மாதம் முதல் முற்றிலும் ஃபிரெஷ்ஷான அணியை உருவாக்க பி.சி.சி.ஐ  திட்டமிட்டுள்ளது. ஃபிரெஷ்ஷான அணி மட்டுமின்றி, புது கோச், புது கேப்டன் போன்றோரும் இருந்தால் நல்லது என பிசிசிஐ  மட்டுமல்ல  கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களும் கூட விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதால், தோனியை விலகச் சொல்லி பிசிசிஐ கேட்டுகொள்வதற்கு முன்னர்,  அவராகவே விலகிவிடுவார் என்கின்றனர்.


3. மோசமான ஃபார்ம், சொதப்பல் கேப்டன்ஷிப்

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் தோனிக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது. கடந்த முறை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக ஆஸி. மண்ணில் தான் ஓய்வை அறிவித்தார் தோனி. தற்போது இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றுவிட்டது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 5-0 என வொயிட்வாஷ் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. தோனியால் முன்பு  போல பெரும்பாலான போட்டிகளில் அதிரடி ஃபினிஷராக செயல்பட முடிவதில்லை.

டிசம்பர் 2014-ல் இருந்து, ஜனவரி 2016 வரை தொடர்ந்து தோனி  தலைமையேற்ற தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியும், இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழந்ததும் அடங்கும். அதே சமயம் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது, அது தவிர டெஸ்ட் போட்டிகளில் நம்பர்  ஒன் இடத்துக்கும் இந்திய அணி உயர்ந்துள்ளது. தொடர் தோல்வியால்  ரசிகர்களும் வெறுத்து போயிருக்கின்றனர்.

தன்னால் இந்திய அணிக்கு பெரிய பயன் இல்லை என்றால் தோனி உடனடியாக விலகிவிடுவார். டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஓய்வு அறிவித்ததை போல இம்முறையும் அறிவிக்கக் கூடும் . இதுதான் கடைசி ஒருதின போட்டி என அறிவிக்காமல், போட்டி முடிந்ததும்,  லெட்டர் மூலம் அதிரடியாக ஓய்வு அறிவிப்பது தோனி ஸ்டைல். இன்னும் இரண்டு நாட்களில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 உலககோப்பை தொடங்கவுள்ளதால், இப்போதைக்கு ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார் என்றும்,  4 மாதங்கள் கழித்து தோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்று விளையாடுவதுதான் தோனியின் கடைசி ஒருதின போட்டியாக இருக்கக்கூடும். எனவே தோனியின் இன்னிங்ஸை மிஸ் செய்து விடாதீர்கள்!.


- பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close