Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான இங்கிலாந்து பெண்!

டெர்பிசெயரைச் சார்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பான சாவ்லி அன்ட் லாங் ஈடன் ஆண்கள் கிரிக்கெட் அணி,  ராச்செல் ஹோப்கின்ஸ் என்ற பெண்ணை தனது இரண்டாம் தர அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

இதன் மூலம்,  250 ஆண்டு கால டெர்பிசெயர் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் அணியை வழிநடத்தப்போகும் முதல் பெண் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ள ஹோப்கின்ஸ், வெற்றிக்குப் பாலினம் ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபித்துள்ளார். இதுவரை ஆண்கள் அணியை மிகவும் சொற்ப பெண்கள் மட்டுமே வழிநடத்தியுள்ளனர். அந்தப் பெருமை தற்போது ஹோப்கின்சுக்கும் கிடைத்துள்ளது.

கிரிக்கெட்டில் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டாலும், சமீபகாலங்களாக பெண்களின் பங்களிப்பு ஆடவர் கிரிக்கெட்டிலும் அதிகரித்துள்ளது. தொடக்கத்திலே பல பெண்கள் கிளப் போட்டிகளில் ஆடவர் அணியில் விளையாடியுள்ளனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியமளித்தது ஐ.சி.சி.

அதற்கடுத்து பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது இந்நிகழ்வு. சுமார் 8 வயது முதல் டெர்பிசெயர் அணிக்காக விளையாடிவரும் 23 வயதான ஹோப்கின்ஸ்,  ஒரு ஆல்ரவுண்டர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் சாவ்லி அன்ட் லாங் ஈடன் ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வந்துள்ளார். 55 போட்டிகளில் விளையாடி 1171 ரன்களும், 43 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் ஹோப்கின்ஸ்.

பெண்களுக்கு வழிகாட்டி

ஆண்கள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ஹோப்கின்ஸ்.

“கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது உண்மையில் அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது. இது என்னை எனது கம்ஃபோர்ட் சோனிலிருந்து வெளியே கொண்டுவந்துள்ளது. களத்தில் விளையாடுகையில் நானும் ஓர் ஆணாகிவிடுவேன். ஆனால் ஆண்கள் அணியை வழிநடத்துவது என்பது சற்றுக் கடினமான ஒன்றுதான். இருந்தாலும் அதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று பூரிக்கிறார் ஹோப்கின்ஸ்.

“பல ஆண்டுகளாக டெர்பிசெயர் அணிக்காக விளையாடிவரும் ஹோப்கின்ஸ்,  டெர்பிசெயர் பெண்கள் அணியினருக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவர் ஒரு சிறந்த வழிகாட்டியும் கூட. அதனால்தான் அவரை சாவ்லி அன்ட் லாங் ஈடன் ஆண்கள் கிரிக்கெட் அணியின் இரண்டாம் தர லெவனுக்கு கேப்டனாக நியமித்துள்ளோம். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தும் அவர்,  தனது புதிய பொறுப்பிலும் திறம்பட செயலாற்றுவார்” என்று நம்பிக்கையாகச் சொல்கிறார் அணியின் சேர்மேன் ஆன்ட்ரூ ஜேம்ஸ்.

ராச்செலை முன்னிறுத்தி பலரும் தன்னைக் கேலி செய்வதாகச் சொல்கிறார் அவரின் தந்தையும், டெர்பிசெயர் அணியின் முன்னாள் கேப்டனுமான நிக் ஹோப்கின்ஸ். “உன்னை விடவும் ராச்சல் சிறப்பாக விளையாடுவார் என்று பலரும் என்னை கிண்டல் செய்வார்கள். இனி அந்தக் கிண்டல்கள் அதிகரிக்கும்” என்று சிரிக்கிறார்.

2017-ம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை,  டெர்பிசெயரில் நடத்துவதற்கு  மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளுக்கு பெரும்பங்காற்றியுள்ள ஹோப்கின்ஸ், டெர்பிசெயர் அணியின் பயிற்சிக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

பெண்கள் நினைத்தால் எதுவும் சாதிக்கலாம் என்பதற்கு ஹோப்கின்ஸ் ஒரு மிகப்பெரிய உதாரணம். பாலினம் விளையாட்டிற்கு ஒரு தடையே இல்லை என்று நிரூபித்துள்ளது இந்நிகழ்வு.

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ