Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களத்தில் கலக்கும் கோலி; கரையில் தவிக்கும் கோலி!

டந்த 2008-ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி அது.  அதுவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கியதில்லை. ஆனால், அன்று களமிறங்க வேண்டிய காட்டாயம்  அந்த கோலிக்கு இருந்தது.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  ஆறு போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசினார்.

அந்த தொடரில்  218 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார் கோலி. ஆனால் கோலி என்றவுடன், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று நினைத்துவிட வேண்டாம். அவரை விட 42 நாட்கள் இளையவரான, அதே அணியில்  இணைந்து, அந்த உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த தார்வார் கோலி இது.

அந்த உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் வெறும் 5 பேர் மட்டும்தான்.  அதில் இருவர் அட்ரஸே இல்லை. ஒருவர் அபினவ் முகுந்த், இன்னொருவர்  சவுரப் திவாரி. மணீஷ் பாண்டே  8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தேசிய அணிக்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.

இந்த இடத்தில்தான் ராகுல் டிராவிட் ஒரு முறை சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

“ கடந்த 1991-ம் ஆண்டு  19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்துதான் நான்  தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் எங்கள் அணியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது நான் ஒருவன்தான். தேசிய அணியில் இடம் பிடிப்பது கடினமான விஷயம். அப்படியே இடம் கிடைத்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்வது கடினம்.'' - ராகுலின் இந்த வார்த்தைகள் எத்தனை சத்தியமானது  என்பதற்கு தார்வாரின் கிரிக்கெட் வாழ்க்கையே சிறந்த உதாரணம்

தார்வார் கோலியும் மலேசிய உலகக் கோப்பை போட்டியில், மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு அசத்தலான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தினார். முதல் ஆட்டத்தில் 40 ரன்கள்; அதற்கடுத்த இரு போட்டிகளிலும் அரை சதம். தொடர்ந்து  காலிறுதியிலும் அரை சதம் என தொடக்கம் நன்றாகவே இருந்தது.  அப்படியிருந்தும் அவர் வெளிச்சத்திற்கு வராத காரணம் என்ன?  உண்மையை சொல்லப் போனால் ஐ.பி.எல்.தான்.

கடந்த 2008-ம் ஆண்டுதான்  ஐ.பி.எல் போட்டிகள் பிரபலமடையத் தொடங்கியிருந்தது. அதிரடி வேட்கையில் ரசிகர்கள் மூழ்கி கிடந்தனர். நம்ம ஹீரோ தர்வார் கோலியும்  ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் சுருண்டு போனார். அந்த அணிக்காக   2 இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள்தான் அடித்திருந்தார். அதே சமயம் நம்ம டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அதிரடி ஆட்டத்துக்கு மாற்றி தொடங்கியிருந்தார். 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி, 12 இன்னிங்ஸ்களில் 165 ரன்கள் எடுத்திருந்தார்.

நிதான ஆட்டத்தை கடைபிடிக்கும் தார்வார் கோலியால், பொழுதுபோக்கை  மையமாகக் கொண்ட ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக தார்வார் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த முறை 2 இன்னிங்ஸ்களில் 2 ரன்களே எடுத்தார். தார்வார் கோலியின் ஐ.பி.எல். வாழ்க்கை இத்துடன் முடிந்து போனது. அதே வேளையில் விராட் கோலி,  இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 246 ரன்கள் குவித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தார். 

இதே காலக்கட்டத்தில் ஐ.பி.எல்.லில் சோபித்தால்தான் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற தேர்வாளர்களின் மனநிலையும் வளர்ந்திருந்தது.  ஐ.பி.எல்.லில் சோடை போனதால் தேர்வாளர்கள் தார்வார் பக்கம் பார்வையை திருப்பவில்லை. அதனால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தார்வாரின் கனவும் சிதைந்து போனது.

விராட் கோலியும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடக் கூடியவர் அல்ல. பந்தை அனாவசியமாக உயரே தூக்கி அடிக்கமாட்டார். பெரும்பாலும் கிரவுண்ட் ஷாட்கள்தான் . ஓடியாடி குருவி போல  ரன்  சேர்ப்பதில் குறியாக இருந்தவர்தான். முதல் இரு ஐ.பி.எல் தொடர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 105 மற்றும் 112 தான். தன்னை நிரூபித்து அணியில் நிலைநிறுத்திக் கொள்வதே அவரது முதல் நோக்கமாக இருந்தது.

ஆனால் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார். மூன்றாவது சீசனில் அவரது ஸ்டிரைக் ரேட் 144-ஐ தொட்டது. அடுத்த ஆண்டு டிராவிட், காலிஸ் போன்றவர்களையெல்லாம் காலி செய்த பெங்களூர் அணி,  விராட்டை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. 2010க்கு  பின்னர் விராட்டின்  விஸ்வரூபத்திற்கு பாகிஸ்தான் ரசிகர் கைது செய்யப்பட்டதே சிறந்த உதாரணம்.

தன்னைத் தானே மெருகேற்றிக்கொள்ளும் திறன்தான் இன்று சிலரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதீத காதலும் அர்ப்பணிப்புணர்வும் கொண்டவர்களே அதிகம் சாதிக்கிறார்கள். திறமை இருந்தும், அவை இரண்டும் இல்லாதவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.

தொடக்கப்புள்ளி ஒரே இடத்தில்தான். ஒரு கோலி முயற்சிக்காரர். இன்னொரு கோலி மாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ளவில்லை. ஒருவர் ஏணியில் ஏறினார். இன்னொருவர் சறுக்கினார். இருவருமே உதாரணங்கள்தான், காரணங்கள்தான் வெவ்வேறானவை!

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close