Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுவி... இனி அவ்வளவுதான் என்றவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள் ஏன்?

விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த யுவிதான்,  கடந்த  2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன். சமீபத்திய ஆஸி தொடரில் கடைசி டி20 போட்டியில்,  கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாசி 'தெறி' காட்டவும் செய்தார். 

நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் என கூறியவர்கள்,  இப்போது அவரை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இனி யுவராஜ்,  கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்ற கருத்தும் இப்போது மறைந்து விட்டது.

  

சிறுவயதில் யுவிக்கு ஸ்கேட்டிங் என்றால் கொள்ளைப் பிரியம்.  தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்றவர். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் போல யுவியும் பல விளையாட்டுகளில் பன்முகத் திறமை கொண்டவர். அவரது தந்தை, 'நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!' என வலுக்கட்டாயமாக கிரிக்கெட்டுக்குள் நுழைத்தார்.

அதிலும் கில்லி என நிரூபித்தார் யுவி. கடந்த 2007-ம் ஆண்டு  டி 20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் என பந்துவீச்சாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியவர்.

2011-ம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பே  யுவராஜை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அது தெரியமலேயே களமிறங்கினார் யுவி. லீக் ஆட்டங்களின் போதே  அவருக்கு தனக்குள் ஏதோ பிரச்னை என்பது புரிந்தது.   எனினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. புற்று நோய் உள்ளேயிருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. எனினும் அவர் ஆட்டத்தில் சோடை போகவில்லை. யுவிதான் அந்த உலகக் கோப்பையை நமக்கு பெற்றும் தந்தார். அந்த தொடரின் தொடர் நாயகனும் கூட.

போட்டி முடிந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு  நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். அனைவருக்கும் அதிர்ச்சி. இந்த இளம் வீரருக்கா இந்த பிரச்னை என கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனை.  கிரிக்கெட் உலகம் யுவிக்காக பிரார்த்னையில் ஈடுபடத் தொடங்கியது. யுவியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் கிரிக்கெட் மீதான காதல்தான் மீண்டும் அவரை மைதானத்திற்கு அழைத்து வந்துள்ளது.

புற்று நோயில் இருந்து  மீண்டு அவர் அணியில் இடம் பெற்ற போது, அவர் மீதுள்ள கரிசனத்தால் எடுத்துள்ளனர் என சொல்ல ஆரம்பித்தனர். அப்படி சொன்னவர்களுக்கெல்லாம் யுவராஜின் பேட் பதில் தக்க பதில் அளித்தது.

புற்றுநோயில் இருந்து குணமான பிறகு யுவி, முதல் ஆட்டத்தில் இறங்கியது சென்னையில்தான். களத்திற்கு யுவி வரும் போது சென்னை சேப்பாக்கமே எழுந்து நின்று வரவேற்றது. யுவி... யுவி என ஆர்ப்பரித்தது. அந்த போட்டியில் யுவியின் 'ரீஎன்ட்ரி',  சிக்சருடன்தான் தொடங்கியது. இப்போதும் யுவி ' சேப்பாக்கம் தந்த உற்சாகம்தான் தன்னை கிரிக்கெட் உலகில் மீண்டும் உலாவ வைத்துள்ளது' என நன்றியுடன் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனாலும் எல்லா கிரிக்கெட்டர்களுக்கு வரும் ஃபார்ம் அவுட்,  யுவிக்கும் வந்தது. விளைவு அணியில் இருந்து கொஞ்ச நாள் ஓரம் கட்டப்பட்டார்.  கிட்டத்தட்ட கடந்த 2015-ம் ஆண்டு முழுவதுமே அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

ஆனால் சளைக்காத யுவி,   ரஞ்சியில் கலக்கி, ஆஸி தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்தார். 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில்,  ஆஸ்திரேலிய அணி வொயிட் வாஷ் கண்டதில்லை. கடைசி டி20 போட்டியின் கடைசி ஓவரில் மட்டும் யுவி பட்டையை கிளப்பியிருக்காவிட்டால், இந்தியாவின் 'வொயிட் வாஷ்' கனவு கானல் நீராகியிருக்கும். இந்த ஒரே ஓவர் கிட்டத்தட்ட  யுவியின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றி போட்டுள்ளது.   யுவி என்றாலே அதிரடிதான் என்ற பேச்சு மீண்டும்  அடிபடத் தொடங்கியுள்ளது.

கேன்சரிலிருந்து மீண்டு பழைய வாழ்க்கையை தொடங்கவிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு முறை யுவியை நினைத்துக் கொள்ளுங்கள்!

-ச.ஸ்ரீராம்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close