Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்து ராஜாவுக்கு இன்று பிறந்த நாள் : ரொனால்டோ மதுவுக்கு 'நோ 'சொல்லிவிடுவது ஏன்?

 மூன்று முறை உலகின் தலைசிறந்த வீரருக்கான ‘பல்லான் டி ஓர்’ விருது ரொனால்டோவுக்கு இன்று பிறந்த தினம். களத்தில் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்தாலும் ரொனால்டோ ஒரு கல்லுக்குள் ஈரம்.

ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வரும் 31 வயதான ரொனால்டோ, போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா நகரில் பிறந்தவர்.நவீன கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்கள் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் முட்டி மோதிக்கொள்ள, இருவரும் களத்தில் சாகசங்கள் நிகழ்த்துபவர்கள். இருவருக்குமென தனிச்சிறப்புகள் உண்டு. மெஸ்ஸியை விட ரொனால்டோவிற்கும்,ரொனால்டோவைவிட மெஸ்ஸிக்கும் சில தனித்துவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இருவரையும் மிகவும் வேறுபடுத்திக் காட்டும் குணம் ‘ஆக்ரோஷம்’.

சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் மெஸ்ஸி தோனி மாதிரி அமைதி . ரொனால்டோ கோலி மாதிரி பட் பட் என தெறித்து விடுவார்.எதிரணி வீரர் மட்டுமின்றி நடுவர்களிடம் கூட மோதல் போக்கை கடைபிடிப்பார்.  இதனாலேயே பலர் அவரை வெறுப்பதுண்டு. ஆனால் சி.ஆர் 7க்குள் மறுபக்கத்தை தெரியாதவர்கள்தாக் அவரை வெறுப்பார்கள்.

ரொனால்டோ ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். 11 வயதில் குடிபழக்கத்தினால் தந்தையை   இழந்தவர். அதனால் இன்று வரை மதுவை தொடுவதில்லை. எந்த பார்ட்டிக்கு சென்றாலும் மதுவுக்கு மட்டும் நோ செல்லிவிடுவார்.

தனது 14 வயதில் ஆசிரியை தன்னை அவமானப்படுத்தியதற்காக பள்ளியிலிருந்து நின்று கொண்டார் ரொனால்டோ. அன்று முதல் கால்பந்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். தனது 15-வது வயதில் சீரற்ற இதயத் துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். எந்த ஒரு விளையாட்டு வீரரையும் காலி செய்து விடும் இந்த நோயை வென்று  தனது விடாமுயற்சியால் மீண்டவர் ரொனால்டோ.

* விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் உடலெங்கும் ‘டாட்டூ’க்கள் குத்தியிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் ரொனால்டோவின் உடலில் எள்ளளவும் வண்ணங்கள் இருக்காது. ஏனெனில் வெளிநாடுகளில், பச்சை குத்திக்கொண்டபின் அவர்கள் சில மாதம் ரத்தம் கொடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கமுடைய ரொனால்டோ, அது பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டாட்டூக்கள் குத்திக்கொள்ளவே இல்லை.

*** ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கை ஸ்போர்டிங் லிஸ்பன் அணியிலிருந்து தொடங்கியது. உள்ளூர் கிளப் போட்டியில் ரொனல்டோ விளையாட, வீரர்கள் தேர்வுக்கு வந்த ஸ்போர்டிங் லிஸ்பன் அணியினர், “இப்போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் ஒரே ஒரு வீரரை மட்டும் நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்று கூறினர். அப்போட்டியில் ரொனால்டோவின் அணி 3 கோல்கள் அடித்து வென்றது. முதல் கோலை ரொனால்டோவும், அடுத்த கோலை அவரது நெருங்கிய நண்பர் ஆல்பர்ட் ஃபான்ட்ராவும் அடித்திருந்தனர். அதன்பின்னர் ஃபான்ட்ரா கோலை நோக்கி பந்தைக் கடத்திச் சென்றார். கோல்கீப்பர் மட்டுமே இருந்த நிலையில் எளிதில் கோலடிக்கும் வாய்ப்பு. ஆனால் பந்தை ரொனால்டோவிற்கு பாஸ் செய்து அவரை கோலடிக்கச் செய்தார். ரொனால்டோ கேட்டதற்கு,  “உண்மையிலேயே என்னைவிட நீ தான் திறமைசாலி” என்று சொன்ன அந்த நண்பனை,  இன்று வரை கவனித்து வருகிறார் ரொனால்டோ. அந்த நண்பர்  வாய்ப்பு இல்லாமல் வாழ்க்கையில் தடுமாறினாலும், அவருக்கென வீடும், ஏனைய வசதிகளும் செய்து கொடுத்து தனது நன்றியை செலுத்தி வருகிறார்.

*** 2004 சுனாமிக்குப் பின்னர், ரொனால்டோ பெயர் இருந்த ஜெர்சி அணிந்த சிறுவன் ஒருவன் , ஒரு வாரம் உயிருக்குப் போராடி வந்தான். அதைப் பார்த்த ரொனால்டோ, இந்தோனேஷியா சென்று அந்த மக்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டிக் கொடுத்தார்.

 **** 2004 சுனாமிக்குப் பின்னர், ரொனால்டோ பெயர் இருந்த ஜெர்சி அணிந்த சிறுவன் ஒருவன் , ஒரு வாரம் உயிருக்குப் போராடி வந்தான். அதைப் பார்த்த ரொனால்டோ, இந்தோனேஷியா சென்று அந்த மக்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டிக் கொடுத்தார்.

*** 2012-ம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவச் செலவிற்கு உதவினார். பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்ட காசா பகுதிக் குழந்தைகளின் படிப்பிற்காக, தான் வாங்கிய உயரிய விருதான ‘கோல்டன் ஷூ’வை ஏலத்தில் விட்டு ஒன்றரை மில்லியன் யூரோக்களை அளித்தார் சி.ஆர்.7


*** தனது சொந்த ஊரான மதீராவிலுள்ள மருத்துவமனையில் ‘புற்றுநோய் மையம்’ அமைப்பதற்காக 1 லட்சம் பவுண்டுகளை வழங்கினார் ரொனால்டோ.

*** 90 நிமிட ஆட்டமான கால்பந்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த உலகின் ஒரேயொரு வீரர் ரொனால்டோ தான். முதல் நிமிடத்திலும் கோல் அடித்துள்ளார். 90வது நிமிடத்திலும் கோல் அடித்துள்ளார். இந்தச் சிறப்பு கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, மரடோனா ஆகியோருக்குக் கூட கிடைக்காத ஒன்று.

*** ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அந்த அணி , மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு அளித்த தொகை சுமார் 131.6 அமெரிக்க டாலர்கள்! அப்போது அதுவே உலக சாதனையாகவும் இருந்தது. இன்று ஒரு ஆண்டிற்கு ரொனால்டோ சம்பாதிக்கும் தொகை 21 மில்லியன் யூரோக்கள். இதுவே கால்பந்து வீரர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச ஊதியம் ஆகும்.


ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் செய்யப்பட்ட ஒரே ஆண், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர், லா-லிகாவில் அதிக ஹாட்ரிக் கோல்கள் போன்ற சாதனைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் ‘கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார் ரொனால்டோ.

*** ஃப்ரீ-கிக்கில் கோலடிப்பதில் ரொனால்டோ வில்லாதி வில்லன். அவரது ஒவ்வொரு ஃப்ரீ கிக்கும் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் பாயும். என்ன நடக்கிறது என்று கோல்கீப்பர் சுதாரிப்பதற்குள் பந்து வளைக்குள் புகுந்து விடும்.

பந்தை தலையால் முட்டி கோலடிக்க வீரர்கள் வெகு தூரம் குதிப்பார்கள். அதிலும் ரொனால்டோவை விஞ்ச ஆளில்லை. ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் தரையிலிருந்து 44 செ.மீ உயரம் மேலே எழும்புவார் ரொனால்டோ. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு சராசரி கூடைப்பந்து வீரரே அவ்வளவு உயரம் குதிக்க மாட்டார்கள்.

*** உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக்கில், இதுவரை 89 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் ரொனால்டோ. ஒரு தொடரில் அதிக கோல்கள்(17), 5 க்கும் மேற்பட்ட சீசன்களில் 50 மேற்பட்ட கோல்கள் அடித்தது என ரொனால்டோவிற்கே உரித்தான சாதனைகள் பல.
 


* ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை, யூஃபா சூப்பர் கப், கிளப் உலகக்கோப்பை போன்ற அனைத்து கோப்பைகளையும் ஒரு வீரர் வெல்வது என்பது அளப்பரிய சாதனை. ஆனால் ரொனால்டோ அதையும் தாண்டி, அந்தக் கோப்பைகளையெல்லாம் இரு வேறு அணிகள் சார்பில் வென்றுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் என இரு அணிகளுக்காகவும் ரொனால்டோ அந்த கோப்பைகளை வென்றுள்ளார்.

அவரை பலரும் கல் நெஞ்சக்காரன் என்று நினைக்கலாம். ஆனால் அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரொனால்டோ 80 கோடி அளவிற்கு நிதியுதவி செய்துள்ளார். அந்த வகையில் ரொனால்டோ ஒரு சூப்பர் ஹீரோதான்.

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close