Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செய் நன்றி மறக்காத ஆஷிஸ் நெக்ரா : வறுமையில் வாடிய குருநாதருக்கு வீடு வாங்கி கொடுத்தார்!

தினாறு  வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வு அது. எந்தப் பள்ளியிலிருந்து அதிகம் பேர் தேர்வாகிறார்கள் என டெல்லி பப்ளிக் பள்ளிக்கும் சேவியர் பள்ளிக்கும் நடந்த மோதலிலும் அரசியலிலும் ஒருவருக்கு கிடைத்தது நிராகரிப்பு . பிர்லா பள்ளியை சேர்ந்த, அந்த பேட்ஸ்மேனுக்கு மனதில் இது தீராத வலியை ஏற்படுத்தியது. அந்த வலிதான் இன்று அவரை டெல்லியின் தலைசிறந்த கிரிக்கெட் கோச்சராக மாற்றியும் காட்டியுள்ளது. உஸ்தாத்ஜி என்று கிரிக்கெட் வீரர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர்தான் தராக் சின்ஹா.

“இவர் எந்தவொரு வீரரையும் புறக்கணித்ததில்லை. எவரையும் கொண்டாடவும் மாட்டார்” என்கிறார் இவரது மாணவரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரருமான ஆகாஷ் சோப்ரா. இவர் மட்டுமல்ல,  ராமன் லம்பா, சுரிந்தர் கண்ணா, அஜய் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், ஷிகர் தவான் என பல இந்திய வீரர்களும் இவரது குருகுலத்தில் இருந்து வந்தர்வள்தான்.

போட்டி நாட்களில் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து ஆட்ட நுணுக்கங்களை  வகுப்பார் சின்ஹா. கிரிக்கெட் விளையாட்டையே உயிர்மூச்சாக நினைத்த இவர் ஒருபோதும் பணத்தைப் பற்றி யோசித்ததில்லை. ஒருசமயம் டெல்லியின் தேவ் கல்லூரியிலிருந்து கிரிக்கெட் பயிற்சியாளாராக பணியாற்ற, இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் கல்லூரியில் பியூன் வேலை மட்டுமே காலியாக இருந்ததால், ரூ. 110 சம்பளத்தில் பியூன் என்றே ரெக்கார்டில் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்தார். சொற்ப சம்பளத்தை பற்றி யோசிக்கவில்லை. அந்த  கல்லூரி அணியை தொடர்ந்து 10 ஆண்டுகள் சாம்பியனாக  வலம்வர செய்தார். அவர் பணியில் இருந்த வரை அந்த அணியை யாராலும் அசைக்க முடியவில்லை.


வீரர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பதுதுன் தாரக் சின்ஹாவின் தாரக மந்திரம். ஒரு முறை ரஞ்சி போட்டிக்காக ஜார்ஹண்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஐ.பி.எல் போட்டியில் ஆடிய சில வீரர்கள், அந்த அணிகளின் தொப்பிகளை  அணிந்து பயிற்சியில் ஈடுபடுவதை பார்த்தார் சின்ஹா. மற்ற வீரர்களுக்கு இது ஒருவகையில் சலனத்தை உண்டாக்கும் என யோசித்து உடனடியாக “அனைவரும் ஜார்க்கன்ட் அணியின் தொப்பியைத் தான் அணிய வேண்டும்” என்று உத்தரவிட்டார். சமத்துவம்தான் வெற்றிக்கு வித்திடும் என்பது இவரது நம்பிக்கை.


பெண்களையும் ஊக்குப்படுத்தினார்
 

வீரர்கள் மட்டுமின்றி  மட்டுமின்றி வீராங்கனைகளையும் சரிசமாக உருவாக்கினார் சின்ஹா. இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஞ்சும் சோப்ராவைச் பட்டை தீட்டியவரும்  இவர்தான். “ கிரிக்கெட் மீதான அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. 40 ஆண்டுகளாய் கிரிக்கெட்டை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றால் நான் இந்த இடத்திலெல்லாம் இருந்திருக்க மாட்டேன்” என்று உருகிறார் அஞ்சும் சோப்ரா”. 2001ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் சின்ஹா. இவரது பயிற்சியில் தான் இந்திய மகளிர் அணி முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரை (தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக) வென்றது. பயிற்சியாளருக்கான பேட்சை அஞ்சும் சோப்ரா அவருக்குக் கொடுத்த போது, தனது சிஷ்யையிடமே அதனை வாங்கிய மகிழ்ச்சியில் கண் கலங்கினாராம் தராக் சின்ஹா.


தொடர் புறக்கணிப்புகள்

16 வயதில் டெல்லி கிரிக்கெட் அணியில் தொடங்கி, சின்ஹாவைப் புறக்கணித்தவர்களின் பட்டியல் மிக நீளம். ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக் கோப்பையை வென்று தந்த போதும், கிரிக்கெட் போர்டு அவரை வெளியேற்றியது. டெல்லி கிரிக்கெட் சங்கமோ இவரை முழுதும் புறக்கணித்துத் தள்ளியது. வறுமையில் வீடு கூட இல்லாமல் தவித்தவருக்கு, ஆசிஷ் நெஹ்ரா தான், தனது குருதட்சனையாக அவருக்கு வீடு ஏற்பாடு செய்து தந்துள்ளார். ஓரிரு வெற்றியாளர்களை உருவாக்கியவர்களுக்கெல்லாம் ‘துரோணாச்சாரியார்’ விருது வழங்கும் விளையாட்டு அமைச்சகமும் இவரை அங்கீகரிக்கவில்லை. கேடிச், காலிஸ் என்று நேற்று ஓய்வு பெற்ற வீரர்களையெல்லாம் பயிற்சியாளராக்கும் ஐ.பி.எல் அணிகள் ஏன் இவரைப் போன்ற இந்திய முத்துக்களைப் பயன்படுத்தக்கூடாது?

தன்னை அங்கீகரிக்காததைப் பற்றியோ, விருதுகள் வழங்காததைப் பற்றியோ தராக் சின்ஹா வருத்தம் கொள்ளவில்லை. “ஒரு வீரருக்கு இருக்க வேண்டியது மூன்று ‘டி’க்கள் தான். டெடிகேஷன்(அர்ப்பணிப்பு), டிடர்மினேஷன்(மன உறுதி) மற்றும் டிசிபிளின்(ஒழுக்கம்). விளையாட்டை விட அதைத் தான் எனது மாணவர்களுக்கு அதிகம் கற்றுத் தருகிறேன். ஒருசில வீரர்களுக்கு நண்பர்களாய் இருக்கவேண்டும். ஒருசிலருக்கு ஆசிரியராகவும், ஒருசிலருக்கு நாம் பெற்றோராகவும் இருக்க வேண்டும். நான் என் மாணவர்களுக்கு அப்படித்தான். என் மாணவர்கள் ஒவ்வொருவரையும் ‘உங்களால் இந்திய அணிக்கு விளையாட முடியும்’ என்று சொல்லி நம்பிக்கை ஏற்படுத்துவேன். என்றாவது ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போனது. அப்படி யாருடைய கனவுகளும் கலையாமலிருக்க நான் உதவி செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு விருதும் பாராட்டுகளும் கிடைக்காததைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. பெவிலியனில் இருந்து  வெளியேறி மைதானத்திற்குள் செல்லும்போது நான் இன்னும் இளமையடைகிறேன். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை நான் நேசித்த விளையாட்டிற்காக சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.

யார் யாருக்கோ பத்ம விருதுகளை வழங்கும் அரசு திறமைசாளிகளை மறந்து விடுகிறது!

மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ