Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேகி சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டவருக்கு ரூ. 2 கோடி, வீடில்லாதவருக்கு ரூ. 3.5 கோடி!

ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை அணிக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதையடுத்து, தற்போது புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை அணியின் கேப்டனான தோனி, தற்போது புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அண்மையில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது சென்னை அணிக்காக முன்னர் விளையாடி வந்த பவன் நெகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

தற்போது 23 வயது நிரம்பிய நெகி, இடது கை பந்துவீச்சாளர்.  அத்துடன் 6-வது 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, அதிரடியாகவும் விளையாடக் கூடியவர். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 10 ஆட்டங்களில் விளையாடி 116 ரன்களை எடுத்தார். அபாரமான ஸ்ட்ரைக் ரேட், அதாவது 158. அது போல் 6 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். சென்னை அணியில் தோனி விக்கெட்டை பறிகொடுத்துவிட்டால், அவருக்கு பிறகு, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு இளம் வீரராகத்தான் பவன் நெகி இருந்தார்.  விஜய் ஹசாரே டிராபிக்கான போட்டியில், டெல்லி அணிக்காக நடப்பு சீசனில் 170 ரன்களை எடுத்ததோடு,  16 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இதனை கருத்தில் கொண்டுதான் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர்,  பவன் நெகியை மற்றொரு அணி எடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இவருக்கு அடிப்படை விலை ரூ.30 லட்சம்தான். தோனியின் விருப்பத்தால்தான் பவான் நெகியை ரூ. 8.5 கோடிக்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பவன் நெகி, மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது டெல்லியில் சாதிக் நகரில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அதுபோல் க்ருனால் பாண்டியா என்ற வீரரும் மும்பை அணியால் ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை  கடந்த ஆண்டு மும்பை அணி,  அவரது அடிப்படை விலையான ரூ. 10 லட்சத்திற்கு  ஏலம் எடுத்தது. ஆனால் இந்த ஏலத்தில் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவை ரூ. 2 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது.  வருடத்திற்கு 356 நாட்களும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவது இந்த சகோதரர்களின் வழக்கம். காலை,  மதியம் உணவாக இருவரும் சாப்பிட்டது  5  ரூபாய் மேகிதான்.  அதையும் மைதானத்திலேயே தயார் செய்து கொள்வது  வழக்கமாம்.

 ராஜஸ்தானை சேர்ந்த நந்து சிங்கின் அடிப்படை விலை ரூ. 10 லட்சம்தான். தற்போது 20 வயதே நிரம்பிய அவரை,  மும்பை அணி  ரூ.3.2 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. இவரும் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். இவரது தந்தை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அபாரத் திறமை இவருக்கு உண்டு. இதில் 5 முறை 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசி பிரமிக்க வைத்திருக்கிறார். இந்த தொகையில் முதலில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவதுதான் நந்துவின் முதல் கனவாம்!

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ