Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா?

2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.


ஒரே ஒரு ஊருக்குள்ளே


      “டெல்லி கிரிக்கெட்டில் முன்னேறுவது மிகக் கடினம். போராடிக்கொண்டே இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் போராட்டமே எனது ஆக்ரோஷத்திற்கு ஒரு காரணம்” என்று அன்மையில் குறிப்பிட்டிருந்தார் கோலி. அதே போராட்டக்களத்திலிருந்து போராடி வந்தவர் தான் ரிசாப் பன்ட். ஹரித்துவாரில் பிறந்து ராஜஸ்தானால் புறக்கணிக்கப்பட்டு, இறுதியாக டெல்லியில் தனக்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டார் பன்ட். இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிசாப் கில்லியின் தீவிர ரசிகர். கம்பீர், உன்முக்த் சந்த், பாடியா போன்ற நட்சத்திரங்கள் நிறைந்த டெல்லி அணியால்கூட, பன்டின் திறமையை ஒதுக்கிவிட முடியவில்லை. அணியில் தொடக்க வீரர்கள் நிறைந்திருந்தாலும், பன்ட் தொடக்க வீரராக இருந்தாலும், அவரை அணியில் சேர்த்தது டெல்லி அணி. தனக்கென தனி பேட்டிங் ஸ்பாட் இல்லாவிட்டாலும் இறக்கிய இடத்திலெல்லாம் பொருப்புடனே விளையாடினார். விளையாடிய நான்கு ரஞ்சி இன்னிங்ஸ்களில், நான்காவது வீரராக, மூன்றாவது வீரராக, ஆறாவது வீரராக மாற்றி மாற்றி இறக்கப்பட்டாலும், ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 108 ரன்கள் எடுத்து அசத்தினார்.எப்படி வேண்டுமானாலும் ஆடுவேன்

      கிரிக்கெட்டைப் பொருத்த வரையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சேவாக் எல்லா வகைப் போட்டியிலும் அதிரடியாய் விளையாடுவார். ரஹானேவோ நிதானமாய் விளையாடுவார். ஆனால் மிகச்சொற்ப வீரர்கள் மட்டுமே அந்தந்த போட்டிகளுக்கு ஏற்றார்போல் தங்கள் ஸ்டைலை மாற்றிக்கொள்வர். ஆட்டத்தின் சூழ்நிலை தான் அவர்களுக்கான ஸ்டைல். மைக் ஹஸ்ஸிக்குப் பிறகு அப்படியான ஒரு வீரராக வலம் வருபவர் விராத் மட்டுமே. விராத்தின் இந்தச் சிறப்பு கூட ரிசாப்பின் ஆட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஜூனியர் உலகக்கோப்பையில் நியூசிக்கு எதிராக தொடக்கத்தில், விக்கெட்டுகள் மளமளவென சரிய, நிதானமாய் விளையாடினார் ரிசாப். கொஞ்சமும் அவசரம் இல்லாமல், பெரிய ஷாட்களுக்கு ஆசைப்படாமல், விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து, ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். ஆனால் அதற்கடுத்த ஆட்டத்திலோ, நேபாளத்தைப் பொளந்துகட்டி ஜூனியர் கிரிக்கெட்டின் அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்தார் பன்ட்.

      ஒரு முழுமையான வீரருக்கான சிறப்பு, அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது தான். அப்படி தங்களை செதுக்கிக்கொள்ள முடியாதவர்கள் பின்னடைவையே சந்திக்கிறார்கள். தங்கள் ஸ்டைலை மாற்றிக்கொள்ள முடியாததால்தான் டெஸ்ட் அணியில் ரெய்னாவாலும், ஒருநாள் அணியில் புஜாராவாலும் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால் ரிசாப் பன்ட், ஒரு முழுமையான பேட்ஸ்மேனாகவே தெரிகிறார். 18 வயதே ஆனாலும், அவரது ஆட்டத்தில் மெச்சூரிட்டி இருக்கிறது. பந்துகளை மிகச்சரியாகத் தேர்ந்தெடுத்தே ஆடுகிறார். பவுன்டரி சிக்சரில் மட்டும் கவனம் செலுத்தாமல், கோலியைப் போலவே ஒன்று, இரண்டு என ஓடியோடி ரன்கள் சேர்ப்பதிலும் வல்லவராய்த் திகழ்கிறார் ரிசாப்.

ஒரு கூட்டுப் பறவைகள்

      ஆட்டத்தில் மட்டுமல்ல பேச்சிலும் விராத்தையே பிரதிபலிக்கிறார் ரிசாப். நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி அணியால் 1.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் பன்ட். இதைப் பற்றி வேறு எவரிடம் கேட்டிருந்தாலும், “அதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவேயில்லை. எனக்கு எனது அடுத்த ஆட்டம் தான் முக்கியம்” என்று பிலாசபி பேசியிருப்பார்கள். ஆனால் பன்ட் அதற்கு நேர்மார். “ஆம் இதைப்பற்றி நான் வெகுநாட்களாக யோசித்திருந்தேன். நம் திறமையை வெளிக்காட்ட களம் வேண்டுமல்லவா” என்று ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டாகப் பேசுகிறார். நேபாளத்திற்கு எதிராக அதிவேக சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ரிசாப், காலிறுதியில் நமீபியாவுக்கு எதிராக சதமடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தைத் தவறவிட்ட கோலி, அதன்பின் இரண்டு சதங்களை சொல்லியடித்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை – அதானே எல்லாம்


      கோலியின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவர்மீது வைத்திருந்த நம்பிக்கை. டிராவிட், காலிஸ் போன்ற ஜாம்பவாங்களையெல்லாம் கழட்டி விட்டாலும் விராத்தைத் தக்கவைத்தது அவ்வணி. அந்நம்பிக்கை அஸ்திராமாக்கிய கோலி, சாதனைகளைத் தகர்த்தெரிந்தார். ரிசாப்பின் மீது டேர்டெவில்ஸ் அணி வைத்துள்ள நம்பிக்கை ஐ.பி.எல் ஏலத்திலேயே வெளிப்பட்டது. இதுவரை எந்தவொரு 19 வயதுக்குட்பட்ட வீரருக்கும் கொடுக்கப்படாத தொகையான 1.9 கோடியை வழங்கி அவரை வசப்படுத்தியுள்ளது டெல்லி அணி. தொடர்ந்து சொதப்பிவரும் டெல்லி அணியை தனது ஆட்டத்தால் மீட்கும் பட்சத்தில் நிச்சயம் கோலி தொட்ட உயரத்தை பன்டாலும் தொட முடியும்.

      2008 ஜூனியர் உலகக்கோப்பையில் 6 ஆட்டங்களில் 235 ரன்கள் குவித்திருந்தார் கோலி. ஆனால் ரிசாப்போ 5 ஆட்டங்களிலேயே 1சதம், 2 அரைசதம் உட்பட இதுவரை 266 ரன்கள் எடுத்துள்ளார். இவரைவிட மூன்று வீரர்கள்(இந்தியாவின் சர்பராஸ் கான் உட்பட) இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்திருந்தபோதும், ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் ஈர்ப்பது ரிசாப் தான். இவர் இந்தியாவின் எதிர்காலம் என்று இப்பொழுதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறத் தொடங்கிவிட்டனர். தோனிக்குப் பிறகு, இந்தியாவின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. சஹா, நமன் ஓஜா போன்றோர் தற்காலிக தீர்வு தந்தாலும், அக்கேள்விக்கான நிரந்தர பதிலாக விளங்குகிறார் ரிசாப். நேர்த்தியான ஆட்டம், போட்டிக்குத் தகுந்தாற்போல் பேட்டிங்கை மாற்றிக்கொள்ளும் சிறப்பு, எந்த இடத்தில் இறங்கினாலும் நன்றாக விளையாடும் தன்மை – இவையெல்லாம் சேர்த்து நிச்சயம் இந்திய அணியில் இப்பொழுதே இவருக்கான இடத்திற்கு துண்டைப் போட்டுவிட்டன.

      

வரும் 14ம் தேதி நடக்கவிருக்கும் ஜூனியர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பலரின் கண்களும் ரிசாப்பின் மீதுதான் இருக்கும். அப்போட்டியில் மட்டும் தனது திறமையை ரிசாப் நிரூபித்திவிட்டால் போதும் ஜூனியர் கோலி என்று தேசமே கொண்டாடிவிடும். எத்தனை வீரர்கள் வேண்டுமானால் மூவர்ணக்கொடியுள்ள உடையணிந்து விளையாடலாம். ஆனால் ஒருசிலரால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும். வந்துவந்து போன பல இளம் வீரர்களுக்கு மத்தியில், இந்தியாவின் வருங்காலமாகவே தெரிகிறார் ரிசாப் பன்ட். விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா…

 
மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிக்கையாளர்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ