Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ?

சிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக்  கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர்  ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான்.

சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள்,  முதல் முறையாக  'ஏ.பி.டி ... ஏ.பி.டி...'  என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்ததை பார்த்து இந்திய வீரர்களே மிரண்டனர். சமூக வலைதளங்களில் அனுதினமும் டிவில்லியர்ஸ் புகழ் பாட ஆரம்பித்தனர். எங்கிருந்து திடீரென டிவில்லியர்ஸ்க்கு இவ்வளவு ரசிகர்கள் முளைத்தார்கள்? ஒருநாள் போட்டியில்,  முதல் சதம் அடிக்க நான்காண்டுகள் எடுத்துக் கொண்ட டிவில்லியர்ஸ் இன்று உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்.

கிரிக்கெட்டில் சாதனைகள் படைப்பதில் சாதனையாளர் என சச்சினை வர்ணிப்பார்கள். தற்போதைய  கிரிக்கெட் உலகில் எக்கச்சக்க சாதனைகள் புரிந்து சரித்திரம் படைத்து வரும் வீரர்களில் நம்பர் ஒன் டிவில்லி யர்ஸ்தான். தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள் இரண்டிலும் எட்டாயிரம் ரன்னை கடந்த ஒரே வீரர் டிவில்லியர்ஸ் மட்டுமே. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் சராசரி 50 ரன்களுக்கு மேல் வைத்திருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்களில் டிவில்லியர்ஸும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக்ரேட் 100 வைத்திருக்கும் ஒரே வீரர், ஒருதின போட்டியில் வேகமாக 50 ரன்னை கடந்த ஒரே வீரர், வேகமாக 100 ரன்கள் எடுத்த ஒரே வீரர், வேகமாக 150 ரன்கள் எடுத்த ஒரே வீரர், அதிக சிக்சர்கள் விளாசியவர் என டிவில்லியர்ஸ் படைத்த சாதனைகள் எக்கச்சக்கம்.

டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடுபவர் மட்டுமல்ல,  அணியின் தேவைக்கேற்ப மிக மெதுவாக விளையாடச் சொன்னாலும் அப்பணியை சிறப்பாகச்  செய்வார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக,  ஆஸ்திரேலியாவிலேயே தென்னாப்பிரிக்காவை தோல்வியில் இருந்து காப்பாற்ற,  220 பந்துகளில் 33 ரன்களை அடித்தவர் டிவில்லியர்ஸ். கடந்த ஆண்டு  டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில்,  297 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்து, பிளாக்கத்தான் இன்னிங்ஸ் விளையாடினார்.

டிவில்லியர்ஸ் ஒரு ஏலியனாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் அவ்வப்போது கலாய்ப்பார்கள். ஏனெனில்  யாருமே செய்யாத பல சாதனைகளை அசால்ட்டாக செய்வார் ஏ.பி.டி. கோல்ப், ரக்பி, பேட்மிட்டன், டென்னிஸ், நீச்சல் என அத்தனை விளையாட்டுகளிலும் பள்ளியில் படிக்கும்போதே கில்லியாக இருந்திருக்கிறார் டிவில்லியர்ஸ்.

14 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி கிரிக்கெட் அணியில் இருந்த டிவில்லியர்ஸ்,  அதன் பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான  தேசிய ஹாக்கி அணியில் இடம்பெற்றது ஒரு சிறிய  உதாரணம். தென்னாப்பிரிக்க அணியின்  ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, ஹாக்கி வேண்டாம் என ரக்பி விளையாட சென்றுவிட்டார். ஆப்பிரிக்க நாட்டின் முன்னணி அணியொன்றில்,  18 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி போட்டியில் விளையாடியிருக்கிறார் ஏ.பி.டி.  படிப்பிலும் டிவில்லியர்ஸ் செம பிரில்லியண்ட்டாம்.

'எங்கய்யா இருந்த இவ்வளவு நாளா...?'  என பின்னாளில் அணைத்துக்கொண்டது தென்னாப்பிரிக்க அணி. தற்போது தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு தின அணியின் நிரந்தர கேப்டன் டிவில்லியர்ஸ்.

சர்வதேச கிரிக்கெட்டில்  முதல் 78 டெஸ்ட் இன்னிங்ஸில்,  ஒருமுறை கூட டக்அவுட் ஆனதே இல்லை, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் அடித்தவர், தென்னாப்பிரிக்கவுக்காக விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக 98 போட்டிகளில் பங்கேற்றவர் என டெஸ்ட் போட்டிகளில் டிவில்லியர்ஸ் படைத்த சாதனைகள் தனிப்பட்டியல். டெஸ்ட் மற்றும் ஒருதின தரவரிசை இரண்டிலும் நம்பர் ஒன் இடத்தில் கிட்டத்தட்ட 2  ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த ஒரே வீரர், ஒருதின போட்டிக்கான தரவரிசையில் ஏறக்குறைய கடந்த மூன்றரை ஆண்டுகளாக நம்பர் ஒன் வீரராக இருப்பவர் டிவில்லியர்ஸ்.

ஸ்போர்ட்ஸில் எப்படி  ஆல்ரவுண்டரோ, அதே போல கிரிக்கெட்டிலும் ஆல்ரவுண்டர் டிவில்லியர்ஸ்.  தென்னாப்பிரிக்க அணியில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இரண்டாமிடம் ஏ,பி.டிக்குத்தான். கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேட்ச் பிடித்தவர்கள் பட்டியல், சிறந்த ரன் அவுட் செய்தவர்கள் பட்டியல் ஆகியவற்றிலும் இடம் பிடித்திருக்கிறார் ஏ.பி.டி.  இது தவிர தென்னாப்பிரிக்காவின் கேப்டனாகவும், பகுதி நேர பந்துவீச்சாளராகவும் சாதித்திருக்கிறார்.

'அதெப்படி அத்தனையும் சாதிக்கிறீர்கள்?' என கேட்டால் குறும்பாக ஒரு சிரிப்பு சிரிப்பார் டிவில்லியர்ஸ். கடந்த வாரத்தில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்க ஒருதின தொடரில்,  தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டது, அடுத்த மூன்று போட்டியில் ஏதாவதொன்றில் தோற்றாலும்,  தொடர் பறிபோய் விடும் என்ற நிலையில் இருந்து மீண்டு வந்து,  தென்னாப்பிரிக்கா தொடரை வென்று சாதனை படைத்து, கடைசி ஒருதின போட்டியில் ஒரு கட்டத்தில் 22/3 என தத்தளித்த அணியை மீட்டு சதமடித்து, இறுதிவரை களத்தில்  இருந்து வெற்றியை தேடித்திருக்கிறார் டிவில்லியர்ஸ்.


டிவில்லியர்ஸ் பேட்டிங் உத்தி  மிகவும் அற்புதமானது. டிவில்லியர்ஸை ஏமாற்றும் அளவுக்கு பந்து வீசியோ அல்லது அவரே தவறான ஷாட் அடித்தோ அவுட்டானால்தான் உண்டு, அவருக்கு 'வீக் ஸோன் ' கிடையாது. உலகின் ஆல் டைம்  தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் சக வீரர் ஸ்டெயினை ஐபிஎல் போட்டி ஒன்றில்,  கடைசி ஓவரில் நொறுக்கித்தள்ளிய ஷாட்கள் இன்றும் கண்ணுக்குளேயே இருக்கிறது. அந்தப்  போட்டிக்கு பிறகு ஸ்டெயினின்  மனஉறுதி தகர்ந்தது, அதன் பின்னர் தான் ஸ்டெயின் பந்துவீச்சை பல பேட்ஸ்மேன்கள் பதம் பார்க்க ஆரம்பித்தனர்.

டிவில்லியர்ஸ்,  கால்களை வேகமாகவும் நுணுக்கமாகவும் நகர்த்துவார். இதனால்தான் எந்த பவுலராக இருந்தாலும், உலகில் இருக்கும் எப்படிப்பட்ட மைதானமானாலும் வெளுத்துக் கட்டுகிறார். கடந்த இந்திய சுற்றுப் பயணத்தில், சுழல்பந்துக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வீரர்களே திணறியபோதும்,  மூன்று சதம் அடித்து சாதனை செய்தார். இந்திய அணிக்கு எப்படி தோனியோ, அதுபோல தென்னாப்பிரிக்காவுக்கு டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸ் களத்தில் இருக்குவரை பவுலர்கள் வயிற்றில் புளி கரையும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்,  களத்தில் இருந்தால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று விடுவார் ஏ.பி.டி.

டிவில்லியர்ஸுக்கு இருக்கும் தற்போதைய ஒரே ஆசை தென்னாப்பிரிக்க அணி உலககோப்பை வாங்க வேண்டும் என்பதுதான். கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து கண்கலங்கிய டிவில்லியர்ஸை,  பார்த்து ரசிகர்களே கண்கலங்கிவிட்டார்கள்.

சச்சின் ஓய்வு பெற்றபோது இந்தியாவே மௌனத்தில் மூழ்கியது. உலகம் முழுவதும்  சச்சினின் ஓய்வுதான் முதல் பக்கக் செய்தி. 20-ம் நூற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்றால், 21-ம் நூற்றாண்டின் உலகமே வியக்கும் சிறந்த வீரர் டிவில்லியஸ்தான் என்பதில் சந்தேகமில்லை. டிவில்லியர்ஸ் பல சாதனைகள் படைக்க இந்த 32 -வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவோம்.


- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ