Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மார்டின் குரோவ்: டி20 போட்டிகளின் முன்னோடி!

மொத்த இந்தியாவும் கொண்டாடும் ஐ.பி.எல் போட்டிகளுக்கும், இன்று கிரிக்கெட் உலகமே காத்துக்கிடக்கும் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கும் ஆரம்பம் ஒற்றை மூளையிலிருந்து வந்ததென்றால் நமக்கே ஆச்சரியமாக இருக்குமல்லவா? ஆம்,  புற்றுநோய் தாக்கி இன்று மரணமடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ்தான் டுவென்டி20 போட்டிகளுக்கெல்லாம் முன்னோடியாய் கருதப்படுபவர்.

உலகின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் மார்டின் குரோவின் கிரிக்கெட் பயணம் 1982 முதல் 1995 வரை நீண்டது. என்னதான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவரது மனம் இவ்விளையாட்டின் நினைவோடேயே இருந்தது. கால்பந்து, பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே முடிவடைய, கிரிக்கெட் மட்டும் ஐந்து நாட்களும், ஒருநாள் போட்டிகள் ஏழு மணி நேரமுடனும் விளையாடப்படுவது ரசிகர்களுக்கு சலிப்பைத் தந்துவிடும் என்று குரோவ் கருதினார். இதனால் 1997- ம் ஆண்டு ‘கிரிக்கெட்மேக்ஸ்’ என்ற புதிய முறை  கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார் குரோவ்.

ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களில் விளையாடும் இப்போட்டியில்தான் இன்றைய ‘ஃப்ரீ ஹிட்’டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ரன்களை இரட்டிப்பாக்கும் மேக்ஸ் ஜோன், நான்கு ஸ்டம்புகள் என பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் விதிகளை அமைத்து, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்தில் முதல் தரப் போட்டிகள் இம்முறையில் விளையாடப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தங்கள் கவுன்டி போட்டிகளில் இம்முறையை சிறு மாற்றங்களோடு அறிமுகப்படுத்தியது. அதுவே இன்றைய டுவென்டி 20 போட்டிகள். இன்று நாம் கொண்டாடும் பிக்-பேஷ், ஐ.பி.எல் போட்டிகளில் எல்லாம் இந்த மாமனிதனின் சிந்தனைக் குழந்தைகள்தான்.

அதோடு மட்டும் கிரிக்கெட் மீதான அவரது காதல் முடிந்துவிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு, தனது 49-வது வயதில் மீண்டும் முதல் தரப் போட்டிகளில் விளையாட விரும்பினார் குரோவ். கிரிக்கெட் வீரரான தனது தந்தை விளையாடிய கோர்ன்வால் அணிக்காக விளையாட ஆயத்தமானாலும் அவை காயங்களால் தடைபட்டன. அதற்கு முன்பு 2011-ல் சில நிதி திரட்டும் போட்டிகளில் அவர் விளையாடினார்.இரு தவறுகள்

இன்று நியூசிலாந்தின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் பிரெண்டன் மெக்குல்லத்தின் சாதனைகளை அன்றே படைத்திருப்பார் குரோவ். 300 ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை 1991லேயே படைத்திருப்பார் அவர். வெல்லிங்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் 299 ரன்களிலிருந்த அவர், ரனதுங்காவிடம் கேட்சாகி 1 ரன்னில் முச்சதத்தை தவறவிட்டார். பின்னர் 2014ல் அதே மைதானத்தில் மெக்குல்லம் அச்சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.


1992 உலகக்கோப்பையின் போது,  மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில், வாசிம் அக்ரம், இம்ரான் கான், முஸ்தாக் அகமது ஆகியோர் உள்ளடங்கிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு 83 பந்துகளில் 91 ரன் குவித்தார் குரோவ். நியூசிலாந்து அணி 262 ரன்கள் சேர்க்க, குரோவிற்கு காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தார் குரோவ். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வெல்ல,  முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“எனது வாழ்நாளில் நான் நினைத்து வருந்துபவை இரு தவறுகள்தான். அந்த உலகக்கோப்பை அரையிறுதியும், 299ல் கேட்சானதும்தான். அந்தத் தவறுகள்தான் என் மனதில் ஆழமாக இறங்கி என் நோயை மேலும் கொடுமைப்படுத்துகிறது போல” என சமீபத்தில் தனது பழைய சோகங்களைப் பகிர்ந்திருந்தார் குரோவ்.


குரோவ், இவ்விளையாட்டை தனது உயிரினும் மேலாய் மதித்தவர். நியூசிலாந்து கிரிக்கெட்டை உலக அரங்கில் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் சென்றவர். முன்னாள் கேப்டன் ஃபிளெமிங், ராஸ் டெய்லர் போன்ற பல வீரர்களுக்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். இன்று அவரது மறைவானது நியூசி கிரிக்கெட் அணிக்குப் பேரிழப்பாகும். 2015 உலகக்கோப்பையையாவது நியூசிலாந்து அணி வெல்ல வேண்டுமென்ற அவரது கனவும் கரைந்து போக, இந்த டுவென்டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்து அணி வெல்வதே இருபது ஓவர் போட்டிக்கு வித்திட்ட குரோவிற்குச் செய்யும் கடைசி மரியாதையாக இருக்கும். அதன் மூலமாகவேனும் அந்த ஜாம்பவானுடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.

மு.பிரதீப் கிருஷ்ணா
( மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close