Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆபத்தானதா பூம்ராவின் பவுலிங் ஸ்டைல்?

“இந்தியாவின் டெத் பவுலிங் சரியில்லை. கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவதால்தான் தோற்க நேருகிறது”. ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் தோற்ற பிறகு இந்திய அணிக் கேப்டன் தோனி கூறும் டெம்ப்ளேட் ரீசன் இதுவாகத்தான் இருக்கும். தோனி மட்டுமல்ல, முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே இதைத்தான் கருதினர். அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட. புவனேஷ்வர், மோஹித், ஈஷ்வர் பாண்டே, ஸ்ரன் என எத்தனையோ பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன்கிடைக்காத நிலையில், இந்திய பவுலிங்கிற்குக் கிடைத்த பிரம்மாஸ்திரம்தான் ஜாஸ்பிரீத் பூம்ரா.

2013-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக இவர் அறிமுகமானபோது, அதுவரை வெறும் 10 முதல் தரப் போட்டிகளில்தான் விளையாடியிருந்தார். வித்தியாசமான, விநோதமான பவுலிங் ஸ்டைல். இவர் சாதிப்பாரா என்று நினைக்கையிலேயே பெங்களூர் அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து கலக்க, திறந்தது இந்திய அணிக்கான கதவு.

ஆஸ்திரேலியாவுடனான கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி அனைவரையும் பிரமிக்க வைத்தார் பூம்ரா. முதல் ஸ்பெல்லில் அற்புதமான லைனில் பந்துவீசி ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்தியவர், டெத் ஓவர்களில் ஆஸ்திரேலியர்களை ஆட்டம் காண வைத்தார். தொடர்ந்து அணிவகுத்த யார்க்கர்களால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணற, ஒரு சிறந்த பவுலராக தன்னை முதல் போட்டியிலேயே நிலைநிறுத்தினார் பூம்ரா.


அதன்பிறகு இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டி20 போட்டிகளில்,  அனுபவ வீரர் நெஹ்ராவோடு இனைந்து அற்புதமாக பந்துவீசினார். அட்ரெஸ் இல்லாமல் இருந்த இந்திய டெத் பவுலிங்கை அட்டகாசமாக மாற்றியது இந்தக் கூட்டணி. இன்று இந்திய அணியின் மிகமுக்கிய பவுலராய் உருவெடுத்துள்ள பூம்ராவை,  அனைவரும் கவனிக்க இன்னொரு முக்கியக் காரணம் அவரது பவுலிங் ஸ்டைல். தனது முழங்கையை வளைக்காமல் அப்படியே பந்தை ரிலீஸ் செய்யும் பூம்ராவின் ஸ்டைல், கிரிக்கெட்டிற்குப் புதிது. அதுவே இவருக்குப் பலமும் கூட. ஆரம்ப காலத்தில் சரியாக பந்துவீச சிரமப்பட்டாலும், பின்னாட்களில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். பார்க்கும் நமக்கு இந்த பந்தவீச்சு முறை புதிதாகவும், ஆச்சரியாமாகவும் இருந்தாலும், இதனால் சில பிரச்னைகளும் வரலாம் என்று கருதப்படுகிறது.

வித்தியாசமாகப் பந்து வீசியே பிரபலமானவர் இலங்கையின் டி20 கேப்டன் மலிங்கா. அச்சுறுத்தும் வேகத்தாலும், யார்க்கராலும் பயமுறுத்தும் இவரது கைகள் பக்கவாட்டில் நீண்டுதான் பந்தை ரிலீஸ் செய்யும். முழங்கைகள் மடங்காது. என்னதான் இந்தப் பந்துவீச்சு அவருக்கு விக்கெட்டுகளை அள்ளிக் குவித்தாலும், முதுகை அதிகமாக வளைப்பதாலும், கால்களுக்கு அதிக அழுத்தம் தரப்படுவதாலும் அடிக்கடி காயத்தால் அவதிப்பட நேர்ந்தது. தொடர்ந்து அனைத்துவகைப் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து தனது 26வது வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா. அவர் மட்டுமல்ல ஷான் டெயிட், ஸ்டெயின், போன்ற பல சர்வதேச வீரர்களின் கிரிக்கெட் பயணமும் இப்படியான காயங்களால் பாதித்துள்ளன.

இப்படி பூம்ராவின் பவுலிங் ஸ்டைலும் வித்தியாசமாக இருப்பதால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் காயத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத். ஐக்கிய அரபு எமிரேட் அணியின் பயிற்சியாளரான அவர், “பூம்ரா நல்ல திறமைசாலிதான். கடைசி கட்ட ஓவர்களை நன்றாக வீசுகிறார். ஆனால் அவரது இந்த விநோதமான பவுலிங் ஸ்டைலால் அடிக்கடி காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படி பந்துவீசுவதற்கு உடலை மிகவும் வருத்திக்கொள்ள வேண்டும். அதனால் அவர் எவ்வளவு காலம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியும் என்று தெரியவில்லை” என்று கூறினார்.

அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தம் உண்டு. பாலாஜி, முனாஃப் போன்ற பல பந்து வீச்சாளர்களை காயத்தின் காரணமாகவே பறிகொடுத்துள்ளது நம் அணி. வேகப்பந்துவீச்சாளார்கள் காயத்தால் அவதிப்படுவது சகஜம் என்பதால், இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தையும் காயத்திற்கு நாம் பலிகொடுத்துவிடக் கூடாது. உருமாற்றம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கு, பூம்ரா போன்ற வீரர்கள் தான் துருப்புச்சீட்டு. அவர்களை பாதுகாப்பது நம் கிரிக்கெட் வாரியத்தின் கடமை. ஆண்டு முழுவதும் இவரை கிரிக்கெட் விளையாட வைத்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் பாதிப்புகள் இருக்கும். இந்திய தேசிய அணியின் நலன் கருதி, ஐ.பி.எல் போட்டிகளில் இவரை அடிக்கடி பயன்படுத்தி காயத்துக்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும். பணத்தையும் புகழையும் தாண்டி யோசிக்க வேண்டிய விஷயம் இது.

-மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்