Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1)

சிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி.

முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது.  உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில்,  ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என அறுதியிட்டு எவராலும் சொல்ல முடியாது என்பதைத்தான்.

"எப்போதுமே போட்டி நடக்கும் தினத்தில்,  ஏதாவதொரு அணியில், ஏதாவதொரு பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு அன்றைய தினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வெற்றி திசை மாறிவிடும்'' என்கிறார்  ஐந்து உலகக் கோப்பைக்கு இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய மகேந்திர சிங் தோனி. பிட்ச் தன்மை, பார்ம் என்பதையெல்லாம் தாண்டி,  ஒரே ஒரு ஓவர் கூட போட்டியின் ரிசல்ட்டை மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளதால் டி20 உலகக் கோப்பையில் அனல் தெறிக்கும்.  சூப்பர் 10க்கு தகுதி பெற்ற எட்டு அணிகளின் பிளஸ், மைனஸ்களையும்,  உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு எவ்வளவு  என்பதை விரிவாக இந்த மினி தொடர் பேசும். இன்று இங்கிலாந்து அணியை பற்றி பார்ப்போம்.

இங்கிலாந்து

கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு,  பல முக்கிய வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டு டிரெண்டி இளைஞர்களோடு புது அணியாக பார்ம் ஆகியிருக்கிறது இங்கிலாந்து அணி. அதிரடி சரவெடி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்துக்கு பிளஸ். ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இரண்டு தொடக்க வீரர்களுமே மிகவும் அபாயகரமான வீரர்கள்.  அலெக்ஸ் ஹேல்ஸ் பக்கா டி20 ஸ்பெஷலிஸ்ட். எப்பேர்பட்ட பவுலர்களையும் திறம்பட சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த ஹேல்ஸ்,  தற்போது பார்மில் உள்ளதால், டி20 போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைக்கும் என நம்புகிறது இங்கிலாந்து. ஜோ ரூட், இயான் மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோரும் சிக்ஸர் பிரியர்கள் என்பதால் டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாராவது ஓரிருவர் முழுவீச்சோடு விளாச ஆரம்பித்தால் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கும்.

வலுவான பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்திடம் இருந்தாலும், முக்கிய சூழ்நிலைகளில் திடீரென ஒட்டு மொத்தமாக நிலைகுலையும் பழக்கம் இங்கிலாந்திடம் இருக்கிறது. இதனால், தொடர்ச்சியாக நல்ல கன்சிஸ்டென்சி இல்லாமல் தடுமாறி வருகிறது இங்கிலாந்து அணி. பெண் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அசத்தக் கூடியவர்கள். பவுலிங்கில்தான் இங்கிலாந்து அணி சோடை  போய்விடுகிறது. அணியில் பிளங்கட் தவிர்த்து சீனியர் பந்துவீச்சாளர்கள் இல்லை. டாப்லி, ஜோர்டான் போன்றவர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். இந்திய பிட்சில் சுழற்பந்துதான் எடுபடும் என்பதால் மொயின் அலி, அடில் ரஷித் ஆகிய இரண்டு மெயின் சுழற்பந்து வீச்சாளர்களையுமே நம்பி இருக்கிறது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து 2010 உலகக் கோப்பையை வென்றதை தவிர மற்ற அனைத்து தடவையும் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது. சிறந்த வீரர்களை அணியில் கொண்டிருந்தாலும் பெரிய தொடர்களில் விளையாடும் போது சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக மார்தட்டும் இங்கிலாந்து அணி,  இதுவரை ஒருதின உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு 2019 ஒருதின உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. இம்முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என வெறியில் உள்ளது. அதற்கு முன்னோட்டமாக டி20 உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன்.

2014 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் வலுவான அணியாக மாறி இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது. எனினும், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறும் ஒன்பது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது இங்கிலாந்து அணி. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவதற்கு போதிய பயிற்சி அவசியம். போதுமான பயிற்சிகள் இல்லாததால் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே  இங்கிலாந்து அணியால் இறுதிபோட்டி பக்கமே வர முடியும்.

இங்கிலாந்து இடம் பெற்றிருக்கும் பிரிவில் கடுமையான போட்டி இருக்கும். தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. மற்ற மூன்று அணிகளையும் விட டி20 போட்டிகளில் சிறிது வலு குறைந்து காணப்படுவதால், ஒவ்வொரு லீக் போட்டியையுமே நாக்அவுட் போட்டியாக எண்ணி முழு திறமையை காண்பித்தால் இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. உலகக் கோப்பை தொடர்களில் வழக்கம்போல் தேமேவென தோற்று வெளியேறுமா அல்லது கோப்பையை வென்று மற்ற அணிகளுக்கு ஷாக் கொடுக்குமா இங்கிலாந்து அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ