Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)

நாள்-  ஏப்ரல் 6, 2014
இடம்-  வங்கதேச நாட்டின் மிர்பூரில் உள்ள  ஷீர் பங்களா நேஷனல் ஸ்டேடியம்
சம்பவம்  - 2014 உலககோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், செம ஸ்ட்ராங்காக ஃபைனல் வந்த இந்திய அணியை அசால்ட்டாக  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி.
 

அந்த நாள்தான் இலங்கை அணி கடைசியாக சிறந்த பெர்ஃபார்மென்சை வெளிப்படுத்திய நாள். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கு முகம்தான். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற பிறகு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல வளைய வருகிறது இலங்கை அணி. புதிதாக அணிக்குள் வந்துள்ள இளைஞர்கள் நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடினாலும், தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். இதனால் இலங்கை அணியானது,  கத்துக்குட்டி அணிகளை கூட மிக கடுமையாக போராடிதான் வெல்கிறது.

கடந்த உலககோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக 14 டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறது இலங்கை அணி. அதில் பத்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சாம்பியன் திடீரென சோடை போனதற்கு காரணம் சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஓய்வு மட்டுமல்ல, பல முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயமும்தான். இலங்கை அணிக்கு கோப்பையை வாங்கித்தந்த மலிங்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை அணியில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் மலிங்கா. ஆனால் அணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்கவில்லை. மலிங்கா ஒரு வேளை விளையாடாமல் போனால் இலங்கை அணிக்கு  பேரிழப்பு ஏற்படும், ஏனெனில் கேப்டன்சி மட்டுமின்றி  இறுதி ஓவர்களில் நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.



இலங்கை அணி பேட்டிங்கில் தில்ஷனையும், சந்திமாலையும் பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் இருவருமே நல்ல கன்சிஸ்டன்சியுடன்  விளையாடுவதில்லை என்பதால் நல்ல தொடக்கம் கிடைப்பதில்லை.  நடு வரிசையில் விளையாடும் வீரர்கள்  சிக்ஸர்கள், பவுண்டரிகளை  விளாசுவதில் மட்டுமே ஆர்வம் காண்பிக்கின்றனர். எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடுவதில்லை. இதனால் சரியான பார்ட்னர்ஷிப் அமைவதில்லை என்பதால் 150  ரன்களை எடுப்பதற்கே சிரமப்படுகிறது இலங்கை அணி. சேஸிங்கில் இலங்கை அணி  எப்போதுமே வீக் என்பதால் பேட்ஸ்மேன்கள் திட்டமிட்டு விளையாடாத  பட்சத்தில் ரன்கள்  குவிக்க முடியாது.

 

 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் இலங்கை அணி கலவையாக இருக்கிறது.  புற்கள் நிறைந்த மைதானத்தில் மட்டுமே வேகபந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுகிறார்கள். அணியில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் சோடை போயிருக்கிறது வேகபந்து டிப்பார்ட்மென்ட். இந்திய மைதானங்கள் சுழற்பந்துக்கு சாதகமானவை என்பதால் சுழற்பந்து வீச்சை பெரிதும் நம்பியிருக்கிறது இலங்கை அணி. இலங்கை அணியின் முக்கிய ஆயுதம் சுழற்பந்து வீச்சாளர் ரெங்கனா ஹெராத்.

இலங்கை அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. இலங்கை அணிக்கு இருக்கும் ஒரே பிளஸ் இலங்கை இடம்பெற்றிருக்கும் பிரிவு தான். தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய  மூன்று அணிகளுமே சுழற்பந்துக்கு திணறுவார்கள். அதுவும் இந்தியா போன்ற மைதானங்களில் அக்ஸ்ரசிவ் மனப்பான்மையுடன் விளையாடவிட்டால் சுழற்பந்தில் வரிசையாக அவுட்டாகி நடையை கட்டவேண்டியதுதான். மற்ற மூன்று அணிகளுக்கு இருக்கும் வீக்னெஸ்தான் இலங்கை அணிக்கு இப்போது  இருக்கும் ஒரே பிளஸ்.



இலங்கை அணி பொதுவாக  டி20 உலககோப்பையில் சீரான முறையில், சிறப்பாக விளையாடக்கூடிய அணி. இதுவரை நடந்த ஐந்து உலககோப்பை தொடரில் மூன்று முறை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற ஒரே அணி இலங்கை மட்டுமே.  உலககோப்பையில் அதிக போட்டிகளை இதுவரை வென்றுள்ளதும்  இலங்கை அணி தான். வராலாறு இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும்  முக்கிய வீரர்களின்  அவுட் ஆப் பார்ம் காரணமாக இந்த உலககோப்பையை இலங்கை வெல்வதற்கான வாய்ப்பு தற்போதைய நிலையில் குறைவு தான். எனினும் மற்ற அணிகளின் வீக்னெஸ்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரையிறுதி வரை முன்னேறிவிட்டால் அதன் பின்னர் நாக்அவுட் போட்டிகளில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் எனும் சூட்சமம் தெரியும் என்பதால் இலங்கை அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

- பு.விவேக் ஆனந்த்

வடிவமைப்பு -
ராஜு முருகேசன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ