Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4)

பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை  இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை வென்றால் எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள்.

இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பத்து முறை மோதியுள்ளன. பத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது. உலகக் கோப்பை என்றாலே இந்தியாவிடம், பாகிஸ்தான்  தோற்றுவிடும் என மக்கள் எண்ணுகிறார்கள்,  இதுவரை ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக, " இந்த உலகக்கோப்பையில் இந்தியாவையும் வெல்வோம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று சாம்பியனும் ஆவோம்" என சூளுரைத்து இந்தியா வந்திருக்கிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.



பாகிஸ்தான் வீரர்களின் விருப்பம் சாம்பியன் ஆவதே என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் அணி பஞ்சராகி கிடப்பதே கலவர நிலவரம். பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய தலைவலியே பேட்டிங் டிப்பார்ட்மெண்ட் தான்.  சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை முழுவதும் டாப் ஆர்டர் விக்கெட்டுகள்  சீட்டுக்கட்டுகள் போல சரிந்ததால், பாகிஸ்தானால் கவுரமான ரன்களை கூட குவிக்க முடியவில்லை. தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால் விராட் கோலியின் ஜெராக்ஸ் போல இருக்கும் அஹமத் சேஷாத்தை அணிக்கு திரும்ப அழைத்திருக்கிறார்கள்.  தற்போதைய  பாகிஸ்தான் அணியில் சிறந்த பேட்ஸ்மேன் சேஷாத்.  பிசிஎல்லில்  அபாரமாக விளையாடிய  சார்ஜீல் கான்,  ஆசியக் கோப்பைகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. சர்ஜீல் மற்றும் முகமது ஹபீஸ் முழு பார்முக்கு வந்துவிட்டால்  டாப் ஆர்டர்  வலுவாகும் என கருதுகிறது பாகிஸ்தான்.


அஃப்ரிடிதான் இந்த முறையும்  கேப்டன். இந்தியாவுக்கு எப்படி ஃபினிஷிங்க்கு  தோனியோ, அதே போல  பாகிஸ்தானுக்கு  அஃப்ரிடி.

தொடக்க வீரராக ஒருகாலத்தில்  உலகிலேயே அபாயகரமான பேட்ஸ்மேனாக  வலம் வந்த அஃப்ரிடி இப்போது பவுலராக மாறிவிட்டார். சுழற்பந்து வீச்சில் அப்ரிடி கில்லி.  உலகிலேயே டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது இவர்தான். 94 போட்டிகளில் 93 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பதினாறு வயதில் அணிக்கு விளையாட வந்த அஃப்ரிடிக்கு இப்போது வயது முப்பத்தாறு.  டி20 போட்டிகளில் இதுவரை சராசரியாக அஃப்ரிடி ஒரு ஓவருக்கு  மிகச்சிக்கனமாக 6.58 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறார்.  சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் இந்திய மண்ணில் அஃப்ரிடி கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கில் அஃப்ரிடியின்  ஸ்ட்ரைக் ரேட் 148.  பாகிஸ்தான் அணியில் எந்த வீரர் எப்போது சிறப்பாக விளையாடுவார் என யாராலுமே கணிக்கவே முடியாது. கன்சிஸ்டன்சி இல்லாத அணி பாகிஸ்தான்.

அஃப்ரிடி தற்போது ஏழாவது அல்லது எட்டாவது நிலையில்தான் பேட்டிங்கில் களமிறங்குகிறார். இரண்டு மூன்று ஓவர்களுக்கு அஃப்ரிடி களத்தில் இருந்தாலே, பாகிஸ்தான் மிகப்பெரிய ஸ்கோரை  எட்டிவிடும். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் டக் அவுட் அல்லது முதல் ஐந்தாறு பந்துகளிலேயே அவுட்டாகி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  "நான்  கடைசி கட்டத்தில் 20-30 ரன்கள் குவித்தால் அணிக்கு  மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பேட்டிங்கிலும்  ஜொலிப்பேன்" என பேட்டி  தட்டியிருக்கிறார்  அஃப்ரிடி.



பாகிஸ்தான் அணியில்,  பேட்டிங்கை பொறுத்தவரை மிகப்பெரிய பலமே நடுவரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள்தான். உமர்  அக்மல், சர்ஃப்ராஸ் அகமது, சோயப் மாலிக்  ஆகியோர்  நல்ல பார்மில் இருக்கிறார்கள். டாப் ஆர்டர் கொஞ்சம் ரன்களை சேர்த்து கொடுத்தால் நடுவரிசை வீரர்களும், அஃப்ரிடியும்  வெளுத்துக்கட்டி ரன்களை குவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  டி20யை பொறுத்தவரையில்  உலகின் அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர்கள் பலர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். முகமது ஆமீர், சமி,  ஏழடி உயரம் இருக்கும் முகமது இர்பான், வகாப் ரியாஸ் என செம ஸ்ட்ராங் பந்துவீச்சு வரிசையை கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த உலகக்கோப்பையில் முகமது அமீரின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு அணியும் தனித்தனி திட்டங்களை வகுத்து வருகின்றன.

 



இந்தியா,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கும் பிரிவில்தான் பாகிஸ்தானும் இருக்கிறது. இதில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் சமீபத்தில் விளையாடிய போட்டிகளில்  தோல்வியையே தழுவியிருக்கிறது  பாகிஸ்தான். வழக்கமாக டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் எப்போதுமே சிறப்பாக விளையாடும். இதுவரை நான்கு முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற சிறப்பு பாகிஸ்தானுக்கு உண்டு. ஆனால் இம்முறை முழு வீச்சுடன் விளையாடாமல்  ஒரு போட்டியில்  சொதப்பினாலும் , அரையிறுதிக்கு தகுதி பெறுவதே கடினம்தான். எனவே சூப்பர்10 ல், ஒவ்வொரு போட்டியையுமே நாக்-அவுட் போட்டி கணக்காக கருதி விளையாடி வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கே தகுதி பெறமுடியும்.

பாகிஸ்தான் அணியின்  பெரிய பிரச்னையே பந்துவீச்சு எடுபட்டால் பேட்டிங்கில் சொதப்புவதும், பேட்டிங் எடுபட்டால் பந்துவீச்சில் சொதப்புவதும்தான். எனவே வீரர்கள் ஒன்றிணைந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் கலக்க ஆரம்பித்தால்  பாகிஸ்தான் கண்டிப்பாக மீண்டும் உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதை நாம் மறுக்கமுடியாது.
 

- பு. விவேக் ஆனந்த்

வடிவமைப்பு - ராஜு முருகேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close