Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் முதல் பெண் சூமோ ஹேத்தல் தேவ்!

சூமோ போட்டிகளில் ஒரு பெண், அதுவும் இந்தியாவை சேர்ந்தவர் உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆம். நம்புங்கள். 26 வயதான மும்பையின் ஹேத்தல் தேவ்தான் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சூமோ வீராங்கனை. சூமோ மற்போர் என்றவுடன், நம் எண்ணங்கள் எல்லாம், ஜப்பானிற்கு கடத்தப் பட்டுவிடும். இரண்டு பேர் ஒரு வட்டத்திற்குள் சாவகாசமாக நின்று கொண்டிருக்க,  நடுவர் கொடியசைத்தவுடன், ஒருவரோடு ஒருவர் மற்போர் புரிவார்கள்.

ஆட்டத்தின் விதிமுறை? மற்ற விளையாட்டுகளோடு ஒப்பிடும்போது மிகவும் எளிமையானது.. போட்டியில் வெல்ல இரண்டே வழிகள்தான். ஒன்று, எதிராளியை வட்டத்திற்கு வெளியே தள்ளிவிட வேண்டும். இன்னொரு வழி, அவர் உள்ளங்காலைத் தவிர, உடலின் ஏதேனும் ஒரு பாகத்தை தரையில் முழுவதுமாகப் பட வைக்க வேண்டும். பொதுவாக சூமோ மற்போரின் முக்கியப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நடைபெறும்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய விளையாட்டு என்று கூறி, பெண்களை கலாச்சாரத்தைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்திருக்கும் நம் சமுதாயத்தில்,  ஹேத்தல் தேவ் எனும் மும்பை பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக, தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று உலகின் சிறந்த சூமோ வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். சிறுமிகள் என்றால் பார்பி பொம்மைகளோடுதான் விளையாடுவார்கள், சின்ட்ரெல்லா கதைகள்தான் கேட்பார்கள் போன்ற எண்ணங்களை சிறு வயதிலிருந்தே உடைத்தவர். சிறுமியாக இருந்த போது கூட ஆக்ஷன் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பாராம் ஹேத்தல்.

26 வயதே ஆகும் இவருடைய பயணம் 2007-ம் ஆண்டு தொடங்கியது. உடம்பைக் கட்டுக் கோப்பாக பார்த்துக் கொண்டும், உடலின் வலிமையை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என தன் கவனத்தை சிதற விடாமல் இருக்கிறார். முதலில் இவருக்கு ஆர்வம் வந்தது ஜூடோ விளையாட்டில்தான். இவருடைய குரு, பல முறை ஜப்பானிற்கு சென்று வர,  அதன் விதிமுறைகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள கொள்ள, அதில் இவருடைய கவனம் முழுவதும் திரும்பியது.

தனக்கு நிதி நெருக்கடிகள் இருந்தும், இந்தியாவின் அடையாளமாய் எஸ்தோனியா, போலாந்து, தாய்வான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

2009 -ம் ஆண்டு தாய்வானில் நடந்த உலக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் சேர்க்கப் படாத விளையாட்டுகளுக்கு அதுதான் ஒலிம்பிக் என்று கூறலாம். அதில் மித இடைப் பிரிவில், ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இந்திய விளையாட்டு அமைச்சகம் சூமோவை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு விளையாட்டு என்று  கண்டு கொள்ளாவிட்டாலும், ஹேத்தலின் திறமையை பல்வேறு வெளிநாடுகள் கண்டு வியந்து வருகின்றன.

வாழ்த்துக்கள் ஹேத்தல்!

மு.சித்தார்த், கோ.இராக விஜயா
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ