Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி இந்திய கிரிக்கெட்டிற்கு கங்குலிகள்தான் தேவை!

டந்த அக்டோபரில்,  தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இந்தியா வாஷ்-அவுட் ஆகாமல் தப்பிக்கக் காரணம் மழையும் ஈடன் கார்டன் மைதானமும்தான். ஆடுகளம் ஈரமாகவே இருந்ததால், ஒரு பந்து கூட போடப்படாமல் ரத்தானது அப்போட்டி.

உலகின் மிகப்பிரபலமான மைதானங்களில் ஒன்றான ஈடன் கார்டன்,  அன்றிலிருந்து விளையாட லாயக்கற்ற மைதானம் என்ற அவப்பெயரை சம்பாதித்தது. கடந்த சனிக்கிழமை நடந்த கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் அப்படியொரு பிரச்னையை சந்திக்கவிருந்தது. தரம்சலாவிலிருந்து மாற்றப்பட்ட இப்போட்டியை மீண்டும் அச்சுறுத்தியது மழை. முன்பைக் காட்டிலும் கனமழை. மைதானம் முழுக்க ஈரம். மொத்த தேசமும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி,  நடக்குமா நடக்காதா என்ற பதட்டம். அப்போதுதான் களம் கண்டார் கொல்கத்தா இளவரசர் என அழைக்கப்படும் கங்குலி. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அவரது அபார செயல்பாட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிகச்சிறப்பாக தயாரானது ஆடுகளம். பேட் இல்லாவிடிலும் ஈடனில் தான் ஒரு ஹீரோ என்பதை கங்குலி சொல்லாமல் சொல்ல, கிரிக்கெட் வல்லுநர்களெல்லாம் தாதாவைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.


இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி ரத்து செய்யப்பட்டு சரியாக ஒரு வாரம். மறைந்த ஜக்மோகன் டால்மியா வகித்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் அமர்கிறார் கங்குலி. தனது கோட்டையான ஈடன் மைதானத்திற்குண்டான அவப்பெயர் நீடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாக 4 சூப்பர் சப்பர் இயந்திரங்கள், மைதானத்தில் இருக்கும் புற்களை நவீன முறையில் அகற்றும் இயந்திரங்கள் என பலவும் வாங்கப்பட்டன. மைதான நீரை அகற்றும் கருவிகள் மட்டுமல்லாது, மைதானத்தை மூடும் கவர்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றவும் புதிய கருவிகள் வாங்கப்பட்டன. மழை பொழிந்ததும் புதிய ஊதப்பட்ட கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மழை நின்ற அடுத்த நொடியே நீரை அகற்றும் வேலை பரபரப்பாக தொடங்குகிறது. பெங்கால் கிரிக்கெட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒரு மனிதன், ஏ.சி.அறையில் அமர்ந்து வேலை வாங்கிக்கொண்டு இருக்காமல், களத்திற்குள் புகுந்தார். களத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் ஆராய்ந்து பணிகளை துரிதப்படுத்தினார். போட்டி நடக்கும் என்று வேண்டுமானால் அனைவரும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் மைதானம் இப்படி ரெடியானது கண்டு மொத்த கிரிக்கெட் உலகமும் வாயடைத்துத்தான் போனது.


கங்குலி கோபக்காரர்தான். எதிரணியினர் விரும்பாதவர்தான். ஆனால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஏராளம். சூதாட்டப் புகாரால் நொந்து போயிருந்த இந்திய அணியை, கிரிக்கெட்டின் கடவுள் சச்சினால் கூட நிமிர்த்த முடியவில்லை. ஆனால் தனது தீர்க்கமான மனப்பக்குவத்தால் அனைத்திலிருந்தும் அணியை மீட்டு, வெற்றிப்பாதைக்கும் இட்டுச் சென்றவர் கங்குலி. நேதாஜி பிறந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ தலைமைப்பண்பு என்பது இயல்பாகவே இவரோடு பிணைந்திருந்தது. வெளிநாட்டு மண்ணில் திணறிய அணியை,  தென்னாப்பிரிக்க உலகக்கோப்பையில் ரன்னர் ஆக்கினார். கேப்டன்ஷிப் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்தவர் கங்குலி. தனது ஆப் சாடு ஷாட்களுக்காகவும், யுவராஜ், ஜாகிர் போன்ற இளம் வீரர்களை நட்சத்திரம் ஆக்கியதற்காகவும், லார்ட்ஸ் மைதானத்தில் அட்டகாச கொண்டாட்டத்திற்காகவும் கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய பக்கத்தில் இவருக்கு இடமுண்டு.


நமக்கு கங்குலி தேவை. ஆனால் எப்படிப்பட்ட கங்குலி? அசால்டாக அவுட் அஃப் தி ஸ்டேடியம் சிக்சர் அடிக்கும் கங்குலியோ, அட்டகாச கேப்டன்ஷிப்பால் அட்ராசிட்டி செய்யும் கங்குலியோ வேண்டாம். கிரிக்கெட்டை ஆளும் நிலையிலிருந்து அவ்விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் கங்குலிதான் இப்போதைய தேவை. ஸ்ரீநிவாசன், சரத் பவார் போன்ற தொழிலதிபர்களாலும் அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை காலங்களுக்கு கிரிக்கெட் சங்கங்கள் ஆளப்பட வேண்டும்? தங்கள் சுய லாபத்திற்காக ஐ.பி.எல் அணியை வைத்துக்கொண்டு சூதாட்டம் செய்பவர்கள் கையில் சிக்கினால் இவ்விளையாட்டு என்னவாகும்?

மழை என்றவுடன் மைதானத்தில் புகுந்து வேலை செய்ய இவரைப்போல் எந்த கிரிக்கெட் சங்கத்தலைவர் முன்வருவார்? அவர்களுக்கு முக்கியம் பதவிதானே. விளையாட்டின் வளார்ச்சி பற்றி யாருக்கு இங்கு அக்கறை. சூதாட்டப் புகார் வெடித்தால் பதவியை ராஜினாமா செய்யவும், தனக்கு அதில் தொடர்பில்லை என்று சொல்லவும் மட்டும்தானே இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். அச்சூதாட்டத்தை ஒழிக்க நினைப்பவர் இங்கு உண்டா? பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் வளர்ச்சி இனி எப்படி இருக்க வேண்டுமென்று நாம் சொல்லத் தேவையில்லை. ஆனால் மற்ற கிரிக்கெட் சங்கங்கள்? மற்ற 28 மாநில கிரிக்கெட் சங்கங்கள், இந்திய கிரிக்கெட் சங்கம் என மொத்தம் 29 கிரிக்கெட் சங்கங்கள் இனி என்ன செய்யப்போகின்றன? இனியும் தொழிலதிபர்களின் கீழும், அரசியல்வாதிகளின் பிடியிலுமே இருந்து சாதியையும் அரசியலையும் விளையாட்டினுள் புகுத்திக்கொண்டே இருக்க நாம் அனுமதிக்கப்போகிறோமா?

ஓய்வுபெற்ற வீரர்கள் – கிரிக்கெட் தெரிந்தவர்கள், அவ்விளையாட்டை சுவாசித்தவர்கள் அப்பதவிகளை ஏற்க வேண்டும். டிராவிட், கும்பிளே, லக்ஷமண், சிவராமகிருஷ்ணன் என எத்தனோயோ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் பி.சி.சி.ஐ -யின் பிடிக்கு தலையாட்டிக்கொண்டு கமென்டரி மட்டும் செய்துகொண்டிருக்காமல், மைக்கை வீசிவிட்டு தத்தமது மாநிலங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஆனால் எல்லோராலும் அதை செய்துவிட முடியாது. அதற்கு தீர்க்கமான, இறுதியான, எதிர்த்துப் பேசக்கூடிய, தட்டிக் கேட்கக்கூடிய ஆளாக இருக்க வேண்டும். எளிதாக சொன்னால் கங்குலி போல இருக்க வேண்டும். இல்லாவிடில் நம் நாட்டு அரசியல் முன்பு அவர்களால் எதையும் செய்ய முடியாமலேயே போய்விடும்.

இவ்விளையாட்டைக் காப்பாற்ற கிரிக்கெட் வீரர்கள் நிர்வாகத்திற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் இப்போது போன்ற சூதாட்டப் புகார்களெல்லாம் தாக்காமல் விளையாட்டு நெறியை காக்கவும்,  உண்மையான திறமைகளை முழுமையாகக் கண்டறியவும் முடியும். கங்குலி அதற்கொரு மிகச்சிறந்த உதாரணம். தாதா ராக்ஸ்!

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ