Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி20: கடைசி பந்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!

பெங்களூர்: உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 6-வது தொடரில் தற்போது சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் குரூப்-1, குரூப்-2 என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. சூப்பர்-10 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குரூப்-2ல், நேற்றிரவு நடந்த ‘நாக்-அவுட்’ போன்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 18 ரன்களிலும், தவான் 23 ரன்களிலும் வெளியேறினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் 5 ஓவர்களில் இந்தியா 27 ரன்களே எடுத்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூரின் 6-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்த போது தான் ரசிகர்களுக்கு ஆனந்தம் பிறந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்த ஓவரில் ரோகித் சர்மா (18 ரன், 16 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆக, அடுத்த ஓவரில் ஷிகர் தவானும் (23 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த கோலி, ரெய்னா ஜோடி அணி நிதானமாக ரன் சேர்த்தது. கோலி 24 ரன்களும், ரெய்னா 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 15.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எட்டியது. கடைசி 5 ஒவர்களில் வங்கதேச வீரர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய அணி ரன் குவிக்க திணறியது. இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் மிதுன் 1 ரன்னில் வெளியேறியபோதும், அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

தமீம் இக்பால், சபீர் ரஹ்மான், சஹிப் அல் ஹசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், வங்கதேச அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி ஒவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஹிம் 2 மற்றும் 3 பந்துகளை பவுன்டரிக்கு விரட்டினார்.

இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 4 மற்றும் 5 பந்துகளை சிறப்பாக வீசிய பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்க்க, கடைசி பந்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 2 ரன்களே தேவைப்பட்டது.

கடைசி பந்தை பவுன்சாராக பாண்டியா வீச, ரன் ஒட முயன்ற வங்கதேச வீரரை, தோனி சிறப்பாக செயல்பட்டு ரன் அவுட் செய்தார். இதனால் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட இந்தியா தனது கடைசி லீக்கில் வருகிற 27-ந்தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ