Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரலியாவை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ரும் புதன்கிழமையிலிருந்து,  டி20 உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளான அரை இறுதிப் போட்டிகள் துவங்க உள்ளன. ஆனால் இந்தியாவிற்கு நாக் அவுட் சுற்று நாளையே துவங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இப்போட்டியை வென்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிச் சுற்றை எட்டிப்பிடிக்க முடியும். கேப்டன் தோனி அணியை மாற்றுவதில் விருப்பம் இல்லாதவர் என்றாலும்,  இந்தத் தொடரில் இதுவரை சிறப்பான‌ ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில்,  இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்தால் வலிமை பொருந்திய ஆஸி அணியை வீழ்த்தலாம்.

முதல் போட்டியில் நியூசியிடம் பேரடி வாங்கிய இந்திய அணி,  பின்னர் விஸ்வரூபம் எடுக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான எளிய இலக்கை விரட்டிய போதே தடுமாறியது. கத்துக்குட்டி வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றி பெற்றது. யுவராஜ், ரெய்னா, தவான் போன்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். பலமான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸியை வீழ்த்த வேண்டுமானால் கட்டாயமாக சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டியுள்ளது. அதில் முதன்மையானது ஹர்பஜனை அணியில் சேர்ப்பது.

ஹர்பஜன் ஏன் வேண்டும்?

கொஞ்சம் வேடிக்கையான முடிவுதான். ஆனால் மிகவும் வெற்றிகரமான முடிவாக இது அமையக்கூடும். அஸ்வின்-ஜடேஜா வெற்றிக் கூட்டணியை உடைக்க முடியாது. பிறகு யாருக்குப் பதிலாக, இவரை ஆடும் லெவனில் சேர்ப்பது? ஹர்பஜனை சேர்ப்பதற்கு நாம் பலியாக்க வேண்டிய ஆள் ஹர்டிக் பாண்டியா. நமக்குக் கிடைத்துள்ள நம்பிக்கையான ஆல் ரவுண்டர்தான். ஆனால் பலம் வாய்ந்த ஆஸியை வெல்ல,  ஹர்பஜனின் அனுபவம் மிக முக்கியமானது. இப்போட்டி நடக்கும் மொஹாலி மைதானம் கண்டிப்பாக பேட்டிங்கிற்கு சாதகமானதாகவே இருக்கும். பாண்டியாவின் பந்துவீச்சு நம்பகத்தன்மையாக இல்லை. வங்கதேசத்துடனான கடைசி ஓவரில் இரு பவுண்டரிகள் கொடுத்ததுமல்லாமல்,  புல் டாஸ் பந்துகளாக வேறு போட்டுத் தள்ளினார். பேட்டிங்கில் அவர் நம்பிக்கை அளித்தாலும் ஆஸியைக் கட்டுப்படுத்த நமக்குத் தேவை அனுபவமான பந்துவீச்சே.சரி ஹர்பஜன் அந்த இடத்தை சரியாகப் பூர்த்தி செய்வாரா? நிச்சயம் பூர்த்தி செய்வார். இதுவரை ஆஸ்திரேலியாவுடனான அவரது ஃபெர்பாமென்ஸ் பற்றி நாம் அறியாதது ஒன்றுமில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டி20 போட்டிகளிலும் அவர்களுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளார் பாஜி. இதுவரை அவர்களோடு விளையாடியுள்ள 5 டி20 போட்டிகளில்,  16 ஓவர்கள் பந்துவீசி வெறும் 83 ரன்களே விட்டுக்கொடுத்துள்ளார் ஹர்பஜன். வாட்சன், வார்னர், கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்கள் நிரம்பி வழியும் அந்த பேட்டிங் ஆர்டரைக் கட்டுப்படுத்த,  இந்த ஆப்-ஸ்பின்னரின் அனுபவம் அதிமுக்கியமானது. அதுமட்டுமின்றி இதுவரை உலகக்கோப்பை போன்ற முக்கியப் போட்டிகளில் ஹர்பஜன் சோடை போனது இல்லை. தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக 2007 டி20 உலகக்கோப்பையில்,  4 ஓவர்களில் வெறும் 24 ரன்களே விட்டுக்கொடுத்து இந்தியா வெற்றி பெற பெரும் பங்காற்றினார்.

பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்கள்,  ஆப்-ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என்பதால், வார்னர், கவாஜா ஆகியோருக்கு பாஜி நிச்சயம் சிம்ம சொப்பனமாக விளங்குவார். அதுமட்டுமின்றி பாஞ்சாபின் மொஹாலி மைதானத்தைப் பற்றி இவரை விட இன்னொருவர் நன்கு அறிய முடியுமா என்ன? பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தையும் ஹர்பஜனால் வெளிக்காட்ட முடியும். எந்த வகையில் பார்த்தாலும் நாளைய போட்டியில் ஹர்பஜனின் சேர்க்கை கண்டிப்பாக பாசிட்டிவாகவே அமையும்.


Latest Trending Videos


ரஹானே ஏன் வேண்டும்?


நம் அணியில்  மற்றொரு மாற்றம் ஓப்பனிங்கில் தேவைப்படுகிறது. ஷிகர் தவானின் ஆட்டம் நமக்கே இப்போதெல்லாம் வெறுப்பாகிவிட்டது. ஒரு போட்டியில் ஆடினால் அடுத்த ஐந்து போட்டிகளில் மொத்தமாக சொதப்புகிறார். இந்தத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளிலும் சேர்த்து வெறும் 30 ரன்களே எடுத்துள்ளார். இந்த 30 ரன்களை எடுக்க அவர் எடுத்துக்கொண்டது 40 பந்துகள். நாளைய போட்டியில் எப்படியும் 180 ரன்கள் சர்வ சாதாரணமாகப் பொழியும். அத்தகைய நிலையில் தவானின் இந்த ஃபார்ம் மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் தருவதாகவே அமையும். எப்படியும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோஹித் வழக்கம்போல் தாண்டவம் ஆடலாம். அவருக்கு சரியான முறையில் ஒத்துழைப்புத் தர வேண்டும். எனவே தவானுக்குப் பதிலாக ரஹானேவை சேர்ப்பது பற்றி தோனி பரிசீலிக்க வேண்டும். ரஹானே மெதுவாக விளையாடக் கூடியவர் என்றாலும் சீரான ஓப்பனிங் தருவார் என எதிர்பார்க்கலாம். பேட்டிங் மட்டுமின்றி பீல்டுங்கும் ரஹானேவால் பலப்படும். எனவே இந்த மாற்றமும் நிச்சயம் இந்தியாவிற்கு சாதகமாக அமையும்.

 


அனைத்தையும் விட முக்கியமாக தோனி மாற்ற வேண்டிய ஒன்று,  நம் அணியின் பேட்டிங் ஆர்டர். யுவராஜை ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு இடத்தில் இறக்கினால் அவரால் எப்படி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? அவர் முன்பு விளையாடி வந்த 4வது இடத்திலேயே மீண்டும் அவரை இறக்க வேண்டும். அதன்பிறகு ரெய்னா, தோனி என வருகையில் பேட்டிங் வரிசை சற்று பலப்படும். பூம்ராவும் நெஹ்ராவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் முகம்மது ஷமி மற்றும் புவனேஷ் ஆகியோருக்கு வாய்ப்புகள் இல்லை. அது தேவையும் படாது. இந்த சில மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் காலடி எடுத்து வைக்கலாம்.

இதையே தோனியும் ரவி சாஸ்திரியும் யோசிப்பார்களா? பாஜிக்கும் ரஹானேவிற்கும் வாய்ப்பளிப்பார்களா? இந்தியா அடுத்த சுற்றுக்குப் போகுமா? எல்லாம் நடக்கும் என நம்புவோம்!

  - மு.பிரதீப் கிருஷ்ணா

( மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close