Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை: இந்தியாவை வீழ்த்துவது உச்சக்கட்ட சவால்! -ஷேன் வாட்சன்

மொகாலி: உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அரை இறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. மேலும், இந்தியாவை வீழ்த்துவது உச்சக்கட்ட சவால் என்று ஷேன் வாட்சன் தெரிவித்து உள்ளார்.

உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடரில், குரூப்-2 பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மொகாலியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பிரதான எதிரியான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி அடையும் அணி, உலக கோப்பையை விட்டு வெளியேறும். அதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

இதுவரை நடந்துள்ள மூன்று ஆட்டங்களிலும் இந்தியாவின் பேட்டிங் மெச்சும் அளவுக்கு இல்லை. துணை கேப்டன் விராட் கோலி தவிர வேறு யாரும் அரைசதம்கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று அதிரடியான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். யுவராஜ்சிங், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வல்லமை கொண்ட ஒரு அணி. 20 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக வசப்படுத்திவிட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வரிந்து கட்டி நிற்கிறார்கள். இந்தியாவை போன்றே தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 8 ரன் வித்தியாசத்தில் தோற்ற போதிலும், அதன் பிறகு எழுச்சி கண்டு, வங்காளதேசம், பாகிஸ்தானை தோற்கடித்தது.

போட்டி நடக்கும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 3 இருபது ஓவர் ஆட்டங்களிலும் குறைந்தது 155 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 211 ரன்களை ‘சேசிங்’ செய்தது அதிகபட்சமாகும். இந்த மைதானத்தில், நியூசிலாந்து வீரர் குப்தில் அதிகபட்சமாக ஒரு ஆட்டத்தில் 80 ரன் எடுத்தார். அதற்கு அடுத்தப்படியாக ஷேவாக் 64 ரன்னும், சுமித் 61 ரன்னும் எடுத்தனர். பல்க்னெர் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஷேன் வாட்சன் கூறும்போது, ''இந்திய அணியை வீழ்த்துவதற்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிவோம். இந்தியா திறமை மிகுந்த, நம்ப முடியாத ஒரு அணி. குறிப்பாக இந்திய மண்ணில் அவர்களை சாய்ப்பது என்பது கடினமான காரியம். அந்த பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேச அணி, இந்தியாவை வீழ்த்தியிருந்தால் எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தை எதிர்கொள்வதில் இந்த அளவுக்கு நாங்கள் கவலைப்பட வேண்டியது இருந்திருக்காது.

எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து ஆடுவது உச்சக்கட்ட சவாலாகும். இந்தியாவை அதன் இடத்திலேயே வீழ்த்தினால் அது வியப்புக்குரிய சாதனையாக இருக்கும். தனிப்பட்ட முறையில் பார்த்தால், இது எனது கடைசி சர்வதேச போட்டியாகவும் இருக்கலாம்" என்று தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ