Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸி சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்?

இன்றைய சூழலில் ஷேன் வாட்சன் – சுமார் 14 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகித்த இப்பெயர் இன்று முன்னாள் வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளது. பேட்டிங், ஸ்பீட் பவுலிங் என இரண்டிலும் சரிசமமாக அசத்தும் ஆல்ரவுன்டர்கள் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட‌ கருதப்படுகின்றனர். கபில் தேவ், இயான் போதம், காலிஸ் வரிசையில் தன்னையும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிலைநிருத்திக் கொண்ட வாட்சனின் கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே தொடங்கியது. ஜாம்பவான்கள் நிறைந்த ஆஸி அணியில் இடம்பிடித்து, அதை நிலைனிறுத்தி, பின்னர் தானும் ஒரு ஜாம்பவனாய் ஓய்வு பெற்ற வாட்சனின் கிரிக்கெட் பயணம் அபாரமானது. எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஓய்வு பெறுகிறார்கள் தான். ஆனால் ஒரு சில வீரர்களின் ஓய்வு தான் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய இழப்பாய் அமைகிறது. அப்படித்தான் வாட்சனின் ஓய்வும். எதனால் வாட்சனை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்வோம். இதோ இதற்காகத் தான்…


தன்னிகரற்ற ஆல்ரவுண்டர்

    பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் உலகத்தரத்தில் செயல்படும் வீரர்கள் மிகச்சொற்பமே. இனி கோலி, ரூட், ஸ்டார்க் என எத்தனை வீரர்கள் வந்தாலும் வாட்சன் போன்று ஒரு ஆல்ரவுண்டர் கிடைப்பது மிகவும் அரிதே. அதுவும் பிளின்டாப், காலிஸ் ஆகியோரின் ஓய்விற்குப் பிறகு பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களுக்கு பஞ்சமே ஏற்பட்டு விட்டது. அந்த காலியிடம் இப்பொழுது வாட்சனின் ஓய்வால் வெற்றிடமாகவே மாறியுள்ளது. 190 ஒருநாள் போட்டிகளில் 5718 ரன்கள், 168 விக்கெட்டுகள், 52 டி20களில் 1315 ரன்கள், 42 விக்கெட்டுகள் என உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் வாட்சனை நிச்சயம் கிரிக்கெட் உலகம் மிஸ் செய்யும்.

புல் ஷாட் ஸ்பெஷலிஸ்ட்

இது வாட்சனின் பிராண்டெட் ஷாட். ஒரு வீரரை வீழ்த்த யார்க்கரை விடவும் இப்போது பவுலர்கள் பயன்படுத்தும் ஆயுதம் ‘ஷார்ட் பால்கள்’ தான். இந்த பால்களில் விக்கெட்டைக் காத்துக்கொள்ளவே அனைத்து பேட்ஸ்மேன்களும் நினைப்பார்கள். ஆனால் அசால்டாக அந்த ஷார்ட் பாலை ‘புல் ஷாட்’ அடித்து பவுண்டரிக்கு விரட்டுவதில் வாட்சன் வல்லவர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பால்களை வெறுத்தால், இவர் அதனை வரவேற்று எல்லைக்கு அனுப்பி வைப்பார். உலகின் எந்த முன்னணி பவுலர் வீசினாலும் சரி, எந்த வேகத்தில் பந்து வந்தாலும் சரி, ஸ்லோ பாலோ, ஃபாஸ்ட் பாலோ, பாரபட்சமே இல்லாமல் பட்டையைக் கிழப்புவார். கொஞ்சமும் பயமில்லாமல் பவுண்டரிக்கு விரட்டப்படும் புல் ஷாட்களை, வாட்சனின் ஓய்வு கண்டிப்பாக மிஸ் செய்ய வைக்கும்.

ஸ்வீப் மன்னன்

ஸ்வீப் ஷாட்களை ஸ்டேடியத்தின் உச்சிக்கு அனுப்பும் வல்லமை வாட்சனுக்கே உரிய சிறப்பு. பந்தை சற்றும் மிஸ்டைம் செய்யாமல், கேலரியின் மேலேயே அனுப்பி விடுவார் வாட்சன். எந்த முன்னனி ஸ்பின்னராக இருந்தாலும் சரி மண்டியிட்டு சிக்சர் பறக்க விடும் வாட்சனின் அந்த ஷாட் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திவிடும். தில்ஷானின் ஸ்கூப், பீட்டர்சனின் ஸ்விட்ச் ஹிட் வரிசையில் வாட்சனின் ஸ்வீப் சிக்சும் அற்புதமான ஷாட்கள் வரிசையில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

எல்லா இடத்திலும் ராஜா

ஒரு வீரர் தனது ஆஸ்தான பேட்டிங் ஆர்டடிலிருந்து மாறினால் ரங்குவிக்க மிகவும் சிறமப்படுவார்கள். ஆனால் ஓப்பனிங் முதல் லோயர் மிடில் ஆர்டர் வரை எங்கு இறக்கிவிட்டாலும் சரி வாட்சன் கில்லி தான். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிடில் ஆர்டரில் இறங்கிக்கொண்டிருந்தவர், ஃபின்சின் காயத்தால் ஓப்பனிங் இறங்கினார். வெறும் 71 பந்துகளில் 124 ரன்கள் அவர் அடிக்க இந்திய பவுலர்கள் தினறித்தான் போனார்கள். 2013ம் ஆண்டு ஆஷஸ் போட்டியில் கவாஜா காயத்தால் விலக, 3வது வீரராக களமிறங்கினார் வாட்டோ. அப்பொழுதும் தனது திறமையை வெளிக்காட்டி 176 ரன்கள் குவித்தார். டாப் ஆர்டரில் மட்டுமல்ல, லோயர் ஆர்டரிலும் வாட்சன் வாட்சன் தான். பேட்டிங் ஆர்டர் என்றுமே அவரை பாதித்ததில்லை. எங்கு இறங்கினாலும் சரி சரவெடிதான். இப்பொடியொரு வீரரை மீண்டும் கண்டெடுப்பது மிகவும் கடினம்.

பார்ட்னர்ஷிப் பிரேக்கர்

இந்த இடத்தில் நிச்சயம் வாட்சனின் பவுலிங் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கே உரிய அனைத்துத் திறமைகளும் நிரம்பியவர் வாட்சன். ஸ்லோ பால், இன்சுவிங், பவுன்சர் என அனைத்தையும் தனது கைவசம் வைத்திருப்பார். அதையும் விட இவரிடம் உள்ல மிகப்பெரிய சிறப்பம்சம் பார்ட்னர்ஷிப்களை உடைப்பது. சிவ பூஜையில் கரடி புகுவது போல், நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் பார்ட்னர்ஷிப்பை போட்டுத்தள்ளிவிடுவார். இந்தியா போன்ற அணிகள் ஐந்தாவது பந்து வீச்சாளரைப் பயன்படுத்த யுவராஜ், ரெய்னா, பாண்டியா என அனைவரையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கெனக் கிடைத்த பொக்கிஷம் வாட்சன். இவரை நம்பி பவுலருக்குத் தர வேண்டிய ஓவரையும் சேர்த்தே கொடுக்கலாம். தந்து கடைசிப் போட்டியில் கூட வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

கம் பேக் கிங்

எத்தனை முறை அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் சரி, ஃபார்ம் அவுட் ஆனாலும் சரி மீண்டு வருவதில் வாட்சன் கில்லாடி. 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக்கிலேயே வெளியேறினார். இங்கிலாந்துடனான அடுத்த போட்டியோடு அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று நினைக்கையில் 132 பந்துகளில் 136 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் அத்தொடரின் இறுதிப்போட்டியிலும் சதமடித்து, தான் ஒரு வோர்ல்டு கிளாஸ் பிளேயர் என்பதை நிரூபித்தார்.

தொடர் நாயகன்

வாட்சன் ஒரு தொடரில் ஒருசில போட்டிகளில் மட்டும் சோபிக்கும் வீரரல்ல. ஒரு தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் தனது ஜாலத்தைக் காட்டுவார். முதல் போட்டியிலிருந்து ஃபைனல் வரை வாட்சனின் மேஜிக் தொடர்ந்து கொண்டே இருக்கும். முதல் ஐ.பி.எல் தொடரில் சாதாரன ராஜஸ்தான் ராயல்சை தனி மனிதனாக சாம்பியனாக்கிய வாட்சன் அசாத்திய திறமை ஒவ்வொரு இந்தியரும் அறிந்ததே. 2012 டி20 உலகக்கோப்பையில் ஆஸி அணி ஃபைனலுக்கே போகாத நிலையிலும் தொடர் நாயகன் விருதை வாங்கினார் வாட்சன். அந்த அளவு இருந்தது அவரது செயல்பாடு. முதல் நான்கு போட்டியிலும் ஆஸி அணி சார்பாக அதிக ரன்கள் அடித்தவர் இவரே. இவரைப் போல ஒரு நம்பிக்கை நாயகன் நிச்சயம் கிரிக்கெட்டால் மிஸ் செய்யப்படுவார்.

சண்டைகளின் சண்டியர்

எல்லாத்தையும் தாண்டி கிரிக்கெட் ரசிகர்கள் வாட்சனை மிஸ் செய்வது அவரது சண்டைகளுக்காக. பொதுவாக அவர் ஜாலியான வீரர் இல்லை தான். யாராக இருந்தாலும் சரி கோவம் வந்துவிட்டால் அதை அப்பொழுதே வெளிப்படுத்தி விடுவார் வாட்சன். கம்பீர், அஃப்ரிடி, ஜடேஜா, சாமுவேல்ஸ் என வாட்சன் மல்லுக்கட்டியவரின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். என்னதான் ஜென்டில்மேன் கேமாக இருந்தாலும் கொஞ்சமாவது ஃபயர் இருந்தால் தானே ஆட்டம் சூடு பிடிக்கும். வாட்சனின் ஓய்வு கண்டிப்பாக அந்த ஃபயரை அனைத்துவிடும்.

ரோஜர்ஸ், ஜான்சன், கிளார்க் என பல்வேறு முன்னனி வீரர்களை இழந்த ஆஸி அணிக்கு வாட்சனின் இழப்பு சாதாரன ஒன்றல்ல. ஆஸி அணியை விட கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பேரிழப்பாகும். இனியும் அவரது ஸ்வீப்களை, பில் ஷாட்களை, அந்த கோபச் சண்டைகளை இனியும் காண பிக் பேஷ், ஐ.பி.எல் போன்ற தொடர்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடும் அவருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் வெயிட்டிங்.
   

- மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close