Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கை இல்லை, நம்பிக்'கை' உண்டு: கிரிக்கெட்டில் அசத்தும் அமீர்

;குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ ஏதோ ஒரு சிறிய பிரச்சனை. “வாழ்கையே முடிந்துவிட்டது, எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கவேண்டுமா, நான் என்ன பாவம் செய்தேன் இதையெல்லாம் அனுபவிக்க, இது என்ன மாதிரி டிசைன் ஆண்டவா” என எத்தனை எத்தனை விதங்களில் புலம்பி தீர்த்து நிலைகுலைந்து போகிறோம் நம்மில் பலர். ஆனால், வாழ்க்கையில் அவ்வப்போது வீசும் சோதனை புயல்களையும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் கடந்து சாதனைகள் படைத்து சுற்றி இருப்பவர்களையும் ஆனந்த வியப்பில் ஆற்றும் சிலரும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். தன் இரண்டு கைகளையும் ஒரு கொடூர விபத்தில் இழந்த ஒரு இளைஞர் தன் கனவான கிரிக்கெட் விளையாட்டை இன்னும் விளையாடி வருகிறார், அதுவும் சிறந்த முறையில் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.



ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்னாக் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர் ஹுசைன். எட்டு வயது சிறுவனாக இருந்தபோது தன் சகோதரனுக்கு உணவு கொடுப்பதற்காக சென்ற அமீர் தன் தந்தையின் தொழிற்சாலையில் இருந்த மரம் அறுக்கும் இயந்திரத்தில் தெரியாமல் கைகளை விட்டுக்கொண்டார். அதன் பின்னர் நடந்த கோர விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். மூன்று வருடங்கள் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்த அமீரை காப்பாற்ற அவரின் தந்தை அவரின் தொழிலை விட்டு நிலத்தை கூட விற்கவேண்டி இருந்தது. இதனால் பலரும் இவரை சாடவே, ‘மகனை இழந்து நிலபுலம் வைத்திருந்து நான் எதற்காக வாழ வேண்டும்’ என்று பதிலளித்த அமீரின் தந்தை தான் அமீரின் முழு பலமும். இயல்பான பள்ளியில் சேர்க்கப்பட்ட போது ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் அமீர். எனினும் இவை எதுவுமே அமீரை பின்னுக்கு தள்ளவில்லை. வாழ்க்கை வழி நெடுக்க பிரச்சனைகளை அனுப்ப அவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி உந்திக்கொண்டே முன்னேறியுள்ளார் அமீர்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சிறு வயதிலிருந்தே தன்  கனவாக இருந்த கிரிக்கெட்டை ஏன் தொடரக் கூடாது என்று யோசித்திருகிருக்கிறார். யோசனையுடன் நின்றுவிடவில்லை. அதற்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளார். விளைவு, இன்று அவர் வாழும் பகுதியில் அமீர் தான் சிறந்த பவுலர் மற்றும் பேட்ஸ்மேன். இவர் பேட்டை தன் கழுத்துக்கும், தோள்பட்டைக்கும் இடையே வைத்து பிடித்து விளையாடுவதை பார்க்கும் எவருக்கும் இவர் மேல் பரிதாபத்திற்கு பதில் மரியாதை தான் வருகிறது. பந்துகளை வீசுவதற்கு தன் கால்களை உயர்த்தி கைகளை போல பயன்படுத்திகொள்கிறார். இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவர் மாநிலத்தின் ஊனமுற்றோர் கிரிக்கெட் அணியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கிரிக்கெட் மட்டுமல்லாமல் நீச்சல், துணிகளை தானே துவைத்துக் கொள்வது, தன்  வேலைகளை தானே பார்த்துக்கொள்வது என அசத்தும் அமீர் அவர் ஏரியாவின் ஆதர்ச நாயகனும் கூட. சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்சியாய் சிரிக்கவைத்துக் கொண்டு  சாதனைகள் மூலம் தன் குடும்பத்தை பெருமையடைய செய்திருக்கும் அமீருக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.

-கோ. இராகவிஜயா
மாணவப் பத்திரிக்கையாளர்

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ