Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போ புறக்கணிச்சாங்க.. இப்போ ஃபீல் பண்றாங்க!

ஹானே, ஷான் மார்ஷ், அஷ்வின், மோரிஸ், பூம்ரா என எண்ணற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி மோரிஸ், போலிங்கர் போன்று அதிகம் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களின் வாழ்க்கையும் ஐ.பி.எல் லிற்குப் பிறகு மாறியுள்ளது. ஆனால் வெளிச்சத்திலிருந்த எத்தனையோ வீரர்கள்,  ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்துள்ளது.

தொடக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்கள், பின்னர் போன ஏலத்தில் இலங்கை வீரர்கள் என இரு நாடுகளே ஏறக்குறையப் புறக்கணிக்கப்பட்டன. தமீம் இக்பால், பிரெண்டன் டெய்லர், கெவின் ஓ பிரையன் போன்ற அசோசியேட் நாடுகளைச் சார்ந்த வீரர்கள்,  டி20 போட்டிகளில் சாதிக்கும் திறமையிருந்தும் முற்றிலும் புறக்கணிக்கவே பட்டனர். ஷகிப் அல் ஹசன், டெண்டோஷேட் தவிர்த்து அனைவருக்கும் அந்த நிலைமைதான். ஒரு சில ஏலங்களில் சில உச்ச நட்சத்திரங்களே பல காரணங்களுக்காக விலை போகாமல் இருந்துள்ளனர். ஐ.பி.எல் லின் மோஸ்ட் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலே 4வது ஐ.பி.எல் ஏலத்தில் ஏலம் போகவில்லை. நேனசுக்கு பதிலாகத்தான் அணியில் இணைந்தார். இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த முறை டாப் ஃபார்மில் இருக்கும் வீரர்களே ஐ.பி.எல் அணிகளால் ஏலம் எடுக்கப்படவில்லை. நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் கலக்கிக்கொண்டிருக்கும் சில வீரர்கள், இந்த ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. யார் அவர்கள்?

உஸ்மான் கவாஜா – ஆஸ்திரேலியா

ஒரு காலத்தில் அணியில் இடம்பிடிக்கவே அல்லாடியவர். கிரிஸ் ரோஜர்சின் ஓய்விற்குப் பிறகு வந்தபோது ரோஜர்ஸ் போல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்று ஹெய்டனின் லெவலில் விளையாடிக் கொண்டிருக்கிறார் இந்த இடது கை பேட்ஸ்மேன். டெஸ்டில் உச்சகட்ட பொறுமை என்றால், டி20யில் நேர்மார். இவ்வுலகக்கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் 143 ரன்கள் குவித்துள்ள இவர், ஒரு போட்டியில் சராசரியாக 6 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இவர் ஆடிய வேகத்தைப் பார்த்து மொத்த தேசமும் சற்று மிரண்டுதான் போனது. குறிப்பாக பஞ்சாப், புனே போன்ற அணிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களுக்கு சிறு பஞ்சமே உள்ளது. இவ்வருட பிக் பேஷ் தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டும் விளையாடி 2 சதம், 2 அரை சதம் உட்பட 345 ரன்கள் அடித்து,  உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பிய இவரை ஐ.பி.எல் அணிகள் பார்க்க மறந்தது ஏனோ?கிறிஸ் ஜோர்டான் - இங்கிலாந்து

ஸ்டெயின், மோர்கல் போன்ற பிரசித்தி பெற்ற வீரராக இல்லாவிடிலும்,  நிச்சயம் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடியிருக்க வேண்டிய வீரர் இவர். ஆண்டர்சன், ப்ராடு போன்றோர் இல்லாத அனுபவமற்ற இங்கிலாந்து பவுலிங்கை ஆச்சர்யப்படும் வகையில் சிறப்பாக வழிநடத்துகிறார் ஜோர்டான். முதலிரு போட்டிகளில் சோபிக்கவில்லை என்றாலும்,  அடுத்த மூன்று போட்டியிலும் தூள் கிளப்பியுள்ளார் ஜோர்டான். அந்த மூன்று போட்டிகளிலும் இவரது எகானமி 7ஐ தாண்டவில்லை. இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்து வரும் ஜோர்டன்,  கண்டிப்பாக ஐ.பி.எல் லில் ஹிட் அடித்திருப்பார். இறுதி ஓவர்களில் இவர் வீசும் யார்க்கர்கள் கண்டிப்பாக எப்பேற்பட்ட பேட்ஸ்மேனையும் ஆட்டம் காண வைக்கும். நியூசிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்,  12 டாட் பால்கள் வீசி வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, பலம் வாய்ந்த அந்த பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்ததே அவர் திறமைக்குச் சான்று.

மார்டின் குப்தில் - நியூசிலாந்து

உலகக் கோப்பைப் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த ஒரு வீரர் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. அதுவும் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கிறார் குப்தில். இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடிய அனுபவம் இல்லாததால்தான் இவரை அணிகள் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்ல, தனது பேட்டால் அவர்களது பற்களை உடைத்துள்ளார் குப்தில். பிரெண்டன் மெக்குல்லம் இல்லாத குறையை தனது தோளில் சுமந்து கொண்டு, இந்த உலகக்கோப்பையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 140 ரன்கள் குவித்துள்ள இவர்,  பாகிஸ்தானுடன் ஆடிய ஆட்டம் யப்பப்பா..!

பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சு, அப்ரிடியின் அனுபவ சுழல் என எதையும் விட்டுவைக்காமல் 48 பந்துகளில் 80 ரன்களைக் குவித்தார் குப்தில். கடந்த ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் குவித்திருந்தார் குப்தில். பாகிஸ்தானுடனான அந்த ஆட்டத்திற்குப் பிறகு, “குப்திலை ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்காத அணி உரிமையாளர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்று ட்வீட் செய்திருந்தார் நம் ரவீந்திர ஜடேஜா. அதைப் பார்த்த அனைத்து அணி உரிமையாளர்களும் அதையேதான் ஃபீல் பண்ணியிருப்பார்கள்.தமீம் இக்பால்

மிகச்சிறிய நாடான வங்கதேசத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே அதிகம் நிராகரிக்கப்பட்டவர். இந்த உலகக்கோப்பையில் 6 இன்னிங்ஸ்களில் 1 சதம், 1 அரை சதம் உட்பட 295 ரன்கள் குவித்துள்ள இவரின் சராசரி 73.75. இந்த உலக்கக்கோப்பைத் தொடரில் இவரது ஸ்டிரைக் ரேட் 142.51. அதிரடிக்குப் பேர் போன இவர்,  இதுவரை நிராகரிக்கப்பட்டதன் காரணம் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதல்தான். ஆனால் இந்த உலகக்கோப்பை மூலம் தன் மீதான அந்தக் கருத்தை உடைத்தெறிந்துள்ளார் தமீம். இந்த ஏலத்தின்போது அவரது அடிப்படைத் தொகை வெறும் 50 லட்சம் மட்டுமே. ஸ்டாயினிஸ், ஹேண்ட்ஸ்கோம்ப் போம்ற ஊர்பேர் தெரியாத வீரர்களை எடுத்தவர்கள் இவரது பெயரையும் பரிசீலித்திருக்கலாம். ஷேவாக் போல முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்கி விடும் இவரை நிச்சயம் ஐ.பி.எல் அணிகள் மிஸ் செய்துவிட்டன.

இதுபோல் சுலைமான் பென், பிலாந்தர், ஈலியாட் போன்ற வீரர்களும் மிஸ்ஸிங். இவர்கள் இல்லாதது பெரிய அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை என்ற போதும், அந்நால்வர் இல்லாதது உண்மையிலேயே கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சிதான். இவர்களெல்லாம் ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றிருந்தும் ஏலம் எடுக்கப்படாதவர்கள். இதேபோல் ஜேசன் ராய், சேன்ட்னர், வில்லி போன்றோரின் பெயர் ஏலத்திலேயே இல்லை. இந்த உலகக்கோப்பையில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்துவிட்டபடியால் , நிச்சயம் அவர்களை மிஸ் செய்வோம். பாகிஸ்தானுக்கு எதிராக குப்தில் 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்ததும் ஜெயவர்தனே,  “ இந்த ஐ.பி.எல் தொடரில் சிலபல வீரர்களுக்குக் காயங்கள் ஏற்படக் காத்திருக்கின்றன. அப்படி நிகழ்ந்தால்,  அந்த வீரர்களுக்குப் பதில் அவ்வணி குப்திலை ஒப்பந்தம் செய்யும். அடிபடுபவர் பவுலராக இருந்தாலும் குப்திலை ஒப்பந்தம் செய்யலாம்” என்று கூறியிருந்தார்.

இந்த திறமையான வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க அப்படி ஒருசிலருக்குக் காயம் ஏற்படட்டும் என்று நாமும் அவரைப் போலவே வேண்டிக்கொள்வோம்!

மு.பிரதீப் கிருஷ்ணா
( மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ