Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த 5 காரணங்களால் தான் இந்தியா தோற்றது!

நூறு கோடி இதயங்கள் நொறுங்கி போயிருக்கிறது. இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள்,   அரையிறுதியில் இந்திய அணி தோற்ற சோகத்தில் இருக்கிறார்கள். கோப்பையை கண்டிப்பாக வெல்லும் அணி  என உலகமே அடித்துச்சொன்ன போதும்,  இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரை கொடுத்து விளையாடிய கோலியாலும், மாஸ்டர் மைண்ட்  தோனியாலும் கூட இம்முறை இந்திய அணியை கரை சேர்க்க முடியவில்லை. 

வெற்றி பெறும் சமயங்களில் எப்போதுமே பலவீனமான விஷயங்களை பற்றி நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தோல்வி அடைந்தால் பலவீனங்கள் எப்போதுமே கண் முன் வந்து நிற்கும். நிறைய பாதகங்கள் இருந்தபோதும் ஒரு வேளை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் , பாதகங்கள் குறித்து  ஆராய வேண்டிய அவசியம் இருந்திருக்காது, யாரும் ஆராய்ந்திருக்கவும் மாட்டார்கள்.

சரி இந்திய அணி எப்படி சறுக்கியது எங்கே?  எப்படி,  ஏன் தோற்றது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்...

வில்லனான டாஸ் :

அரையிறுதி போட்டி முடிந்ததும்,  வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சமி பேட்டியளிக்கும்போது முதலில் சொன்ன விஷயம்,  " இந்தியாவுடனான போட்டியில் எப்படியாவது டாஸ் ஜெயித்துவிட வேண்டும் என கடைசி நிமிடம் வரை பிரார்த்தித்து கொண்டிருந்தேன்" என்பதுதான்.  நமது கேப்டன்,  "டாஸ் தோல்வி இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு"  என்றார்.  சரி,  இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராத் கோலி, தோனி போன்ற தலை சிறந்த வீரர்கள் இருக்கும்போது டாஸ் அவ்வளவு பெரிய முக்கியமா என நமக்கு சந்தேகம் எழுந்திருக்க கூடும். 

 

உண்மையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணி மோதிய அரையிறுதி போட்டியில்,  டாஸ்தான் முக்கிய நாயகன். மும்பையில் பனிப்பொழிவு இருக்கும் சமயம் இது. பனிப்பொழிவு இருந்தால் பந்து வீசுவது மிகவும் சிரமம். ஏனெனில் பந்தில் ஈரப்பதம் அதிகமானால் இலக்கு தவறும். தவிர சுழற்பந்து வீச்சுக்கு பந்து ஒத்துழைக்காது. இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சுதான் எனும்போது, பனிப்பொழிவு இந்திய அணியின் அத்தனை கேம் பிளான்களையும் காலி செய்துவிட்டது. பனிப்பொழிவு மட்டுமின்றி, மைதானமும் சிறியது என்பதால் எவ்வளவு பெரிய ரன்களையும் சேஸ் செய்யக்கூடிய பிட்ச் என்பதால், இரண்டாவதாக பேட்டிங் செய்யவே எந்தவொரு அணியும் இங்கே விருப்பப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன்,  இந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து முறையும் டாஸ் வென்று சேஸிங் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தட்டையான - லாயக்கற்ற  பிட்ச்:

2011 -ம் ஆண்டு இதே வான்கடே பிட்சில்தான் இலங்கை நிர்ணயித்த இலக்கை,  தோனியின் சிக்சருடன் சேஸ் செய்து, கோப்பையை வென்றது இந்திய அணி. இன்று அதே மைதானம்தான் வில்லனாக அமைந்தது. மும்பை வான்கடே பிட்சை பற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்கு முன்னர் சில சம்பவங்களை ஞாபகபடுத்திவிடுகிறேன்.

2014 ஐ.பி.எல்  அரையிறுதி போட்டியில் பஞ்சாப்பும், சென்னையும் மோதின. முதலில் பஞ்சாப் பேட்டிங் பிடிக்க, ஷேவாக் ருத்ர தாண்டவம் ஆடினார். 58 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சர் உதவியுடன் பஞ்சாப் 226 ரன்களை குவித்தது. நெஹ்ரா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர்  தலா நான்கு ஓவர்களை வீசி 51, 44, 48 ரன்களை விட்டுக்கொடுத்தனர். சென்னை இரண்டாவதாக பேட்டிங் பிடித்தது. ரெய்னா வெறும் 25 பந்தில் 12 பவுண்டரி, ஆறு சிக்சர்கள் விளாசி 87 ரன்கள் எடுத்திருந்தார். ரெய்னா அவுட்டாகும் போது ஸ்கோர்,  ஆறு ஓவரில் நூறு ரன்கள். சென்னை 202 ரன்கள் எடுத்தது.

 கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியுடன்,  பெங்களூரு அணி லீக் போட்டியொன்றில் விளையாடியது.  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலியும், டிவில்லியர்சும் இணைந்து  வான்கடேவில் வாண வேடிக்கை காட்டினர். கோலி 50 பந்தில் 87 ரன்கள் எடுக்க, டிவில்லியர்ஸ் மரண மாஸ் காட்டினார். வெறும் 59 பந்தில் 19 பவுண்டரி, நான்கு சிக்ஸர் என பிரித்து மேய்ந்து  133 ரன்களை குவித்திருந்தார். பெங்களூரு 236 ரன்களை குவித்தது. பும்ரா நான்கு ஓவரில் 52 ரன்னையும், ஹர்டிக் பாண்டியா மூன்று ஓவரில் 51 ரன்களையும் விட்டுகொடுத்திருந்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை சிம்மன்ஸ், அதிரடியாக விளையாடினாலும் 196   ரன்களை எடுத்து தோற்றது.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா,  இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்திருந்தது. ஒருதின தொடரில் இந்தியா- தெ.ஆ தலா இரண்டு போட்டிகளை வெல்ல,  கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் பரபரப்பான ஐந்தாவது போட்டி  மும்பையில் நடந்தது. தென்னாப்பிரிக்கா முதலில்  பேட்டிங் செய்தது. இந்தியாவின் பவுலிங்கை டீ காக் - டு பிளசிஸ் -டி வில்லியர்ஸ் கூட்டணி சிதைத்தது. மூவரும் சதம் அடித்தார்கள். டிவில்லியர்ஸ் 61 பந்தில் மூன்று பவுண்டரி, 11 சிக்ஸர்கள் விளாசி 119 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா 438 ரன்கள் என்ற இமாலாய இலக்கை எட்டியது. இந்தியா பேட்டிங் செய்யும்போது ரஹானே அற்புதமாக விளையாடினாலும் 36 ஓவர்களில் 224 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, 214 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா.

சரி இந்த உலககோப்பைக்கு வருவோம். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய முதல் போட்டியில்,  இங்கிலாந்து 182 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில்,  கெயில் 48 பந்தில் சதமடிக்க,  18 ஓவரிலேயே இலக்கை கடந்தது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்து - தென்னாப்பிரிக்காவும் இங்கேதான் மோதின. அம்லா, டீ-காக் என எல்லா பேட்ஸ்மேன்களும் விளாசித்தள்ள, 20 ஓவரில் 229 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா. ஆனால் 19.4 ஓவரில் 229 ரன்னை சேஸ் செய்தது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா,  டிவில்லியர்ஸ் விளாசலில் 209 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான்,   ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தாலும், கடைசி கட்டத்தில் அதிரடி வீரர்கள் இல்லாததால் 172 ரன்கள் மட்டும் குவித்தது.

இப்போது மும்பை  வான்கடே பிட்ச் பற்றி ஒரு தெளிவு பிறந்திருக்கும். ஆமாம்! பந்துவீச்சாளர்கள் பந்துவீசவே விரும்பாத ஒரு பிட்ச் இதுவாகத்தான் இருக்க முடியும். எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கனவு பிட்ச் என்றால் அது இதுதான். மிக சராசரியான பேட்ஸ்மேன் கூட எளிதாக ரன்களை குவிக்க முடியும். அதே சமயம் ஸ்டெயின், அஷ்வின் போன்ற உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் கூட,  இங்கே ஒரு ஓவர் கூட நன்றாக வீசமுடியாது.

உலகின் எப்பேர்பட்ட பந்துவீச்சாளராக இருந்தாலும் இந்த மைதானத்தில் ஜொலிப்பது கடினம். வேகமான 'அவுட்ஃபீல்டு' வான்கடேவில் உள்ளதால், எளிதில் பவுண்டரிகளை நோக்கி பந்துகள் ஓடும். சுழற்பந்துக்கு ஆகவே ஆகாத மட்டமான மைதானம் என்பதால்  பந்து மெதுவாக, நேராக, அழகாக பேட்டுக்கு வரும். மைதானமும் சிறியது என்பதால் சுழற்பந்து வீச்சை சிக்ஸர் அடிப்பது ஈஸி.  இதனால்தான் ஆப்கானிஸ்தானின் பகுதி நேர பந்துவீச்சாளர்களிடம் பம்மி,  122 ரன்களை கூட அடிக்க முடியாமல் சொதப்பிய  வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால்,  எளிதாக இங்கே சரமாரியாக சிக்ஸர்கள் விளாசமுடிகிறது. நல்ல உடற்கட்டுடன் பவர் ஹிட்டர்களை கொண்ட அணியானது இங்கே எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சேஸ் செய்ய முடியும். நாற்பது ஓவரில் சராசரியாக 400 ரன்களை விளாச ஏற்ற பிட்ச் இது. எனவே இது போன்ற பிட்சில் 192 ரன்னை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு தடுப்பது எந்த ஒரு வலுவான அணிக்கும்  கூட மிக மிக கடினமான காரியம்.

சொதப்பிய பேட்டிங் : -

'என்னடா இது பேட்டிங் சொதப்பலா... நல்லாதானே விளையாடினார்கள்!'  என  நீங்கள் நினைக்கக்கூடும்.  டாஸ் தோற்றுவிட்டாகிவிட்டது, எவ்வளவு பெரிய ரன்களையும் எளிதில் சேஸ் செய்யகூடிய பிட்ச் இது என இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும். ஆக இப்படிப்பட்ட பிட்சில் 230 - 250 ரன்களை இலக்காக கொண்டு,  இந்தியா விளையாடியிருக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறாக ஏழு மணிக்கே போட்டி ஆரம்பித்தது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவுதான். பனிப்பொழிவு சுத்தமாக இருக்காது என்பதால் முதல் ஆறு -எட்டு ஓவர்கள் வரை ரன்கள் குவிப்பது  சற்று எளிதான விஷயமில்லை.

முதல் இரண்டு -மூன்று ஓவர்கள் சொதப்பினாலும்,  பின்னர் ரோஹித் ஷர்மா வெகுண்டெழுந்து 31 பந்தில்  மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் விளாசி 43 ரன்களை குவித்தார்.  ரோஹித் ஷர்மா அவுட் ஆகும்போது,  இந்தியாவின் ஸ்கோர் 7.2 ஓவரில் 62 ரன்கள்.  பேட்டிங்க்குக்கு சாதகமான பிட்சில் எளிதில் சிக்ஸர் விளசக்கூடிய ரெய்னா, தோனி, பாண்டியா, மனிஷ் பாண்டே போன்ற வீரர்கள் இருந்தும்,  மெதுவாக ஒன்றிரண்டு ரன்களாக ஓடிக்கொண்டிருந்தார்கள் ரஹானேவும், கோலியும். கோலி அவ்வப்போது பவுண்டரிகளை எடுத்தாலும், ரஹானே மறந்தும் கூட பவுண்டரியோ, சிக்ஸரோ விளாச முயற்சிக்ககூட இல்லை.

எளிதான பந்துகளை கூட தட்டிவிட்டு இரண்டு ரன்களாக எடுத்து கொண்டிருந்தார் ரஹானே. ரஹானேவும்,  கோலியும் விளையாடிய ஏழு ஓவர்களில்,  வெறும் ஐந்து பவுண்டரிகள் மட்டுமே வந்தன. ஒரு சிக்ஸர் கூட இல்லை. 35 பந்துகளை பிடித்து வெறும் இரண்டு பவுண்டரிகளை மட்டும் விளாசி,  நாற்பது ரன் எடுத்துவிட்டு அவுட்டானார் ரஹானே. ரஹானேவால் ரன் ரேட் வெகுவாக குறையவே, விராட் கோலிக்கு உணர்த்தவும், ரன்ரேட்டை ஏற்றவும் தோனியே களத்தில் இறங்கினார். ரஹானே அவுட்டாகும் போது ஸ்கோர் 15.3 ஓவரில் 133 ரன்கள். அடுத்த 27 பந்துகளில் 59 ரன்களை கோலியும், தோனியும் விளாச, இந்தியா 192 ரன்களை எடுத்தது. பனிப்பொழிவு சுமாராக இருந்ததால் ஸ்லோ-பால் வீசி ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தினார்கள்  பிராவோ போன்ற  வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்.

நமக்கு சுழற்பந்து வீச்சே பிரதான ஆயுதம் மற்றும் ஏற்கனவே இந்த பிட்சில் விளையாடி அனுபவப்பட்டுள்ளோம் என்ற நிலையில், 192 ரன்கள் என்பது மிக எளிதாக சேஸ் செய்யக் கூடிய இலக்கு என்பது இந்திய வீரர்களுக்கு தெரிந்திருக்கும்.  குறைந்தபட்சம் இருபது ரன்கள் முதல்  முப்பது - நாற்பது ரன்கள் வரை  இன்னமும் இந்தியா கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். பவுலர்களால ஒண்ணுமே செய்ய முடியாத ஆடுகளத்தில் சற்று குறைவான ரன்களை எடுத்ததற்கு இந்திய பேட்டிங் வரிசையே பொறுப்பு.

மிஸ்ஸிங்  யுவராஜ் :

யுவராஜுக்கு ஏற்பட்ட காயம் அவருக்கு மட்டுமல்ல  இந்தியாவுக்கே பெரும் பின்னடைவாகிப் போனது. யுவராஜுக்கு பதிலாக களமிறங்கிய மனிஷ் பாண்டேவால் இந்திய அணிக்கு எந்த பலனும் இல்லை. இந்திய அணியில் நெஹ்ரா- பும்ரா இருவரும் நன்றாகவே பந்து வீசினார்கள். கெயில் விக்கெட்டை,  நல்ல இன்ஸ்விங் யார்க்கர் முறையில் வீழ்த்தினார் பும்ரா. பவர் ப்ளேவுக்கு பிறகு பனிப்பொழிவு அதிகமனாதால் எந்த பவுலருக்குமே விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. நெஹ்ரா மட்டுமே ஒரு ஓவரை நன்றாக வீசினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் வலது கை ஆட்டக்காரர்கள் களத்தில் நின்ற சமயத்தில்,  பந்துகளே திரும்பாத ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. 

தட்டையான ஆடுகளங்களில் ஜடேஜாவுக்கு பந்தை திருப்ப தெரியாது என்பதால், இடது கை பந்துவீச்சாளராக இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்நிலையில்தான் வேறு வழியே இன்றி ஸ்லோ லெக் பிரேக் வீசக்கூடிய விராட் கோலியை பந்துவீச அழைத்தார் தோனி. விராட் கோலி  முதல் ஓவரில் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து,  ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி ஓவருக்கு  பிறகு பதினைந்தாவது ஓவரை  வீசிய பாண்டியா,  இந்திய அணிக்கு வில்லனாக அமைந்துவிட்டார். ஒரு நோ- பால் உட்பட   24 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரே ஓவரில் போட்டி,  வெஸ்ட் இண்டீஸ் கைக்கு சென்று விட்டது. இதனால்தான் அடுத்தடுத்து  நெஹ்ரா, பும்ராவை மூன்று ஓவர்களுக்கு  தோனி பயன்படுத்தினார். இந்த மூன்று ஓவரில் 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர் இவ்விருவரும்.

ஒருவேளை யுவராஜ் அணியில் இருந்திருந்தால், இந்திய அணிக்கு பந்துவீச்சில் முக்கிய ஆயுதமாக ஒருவேளை இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இடது கை பந்துவீச்சாளரான யுவராஜ் பந்தை தட்டையான ஆடுகளங்களில் கூட ஸ்லோவாக வீசி பந்தை திருப்பும் ஆற்றல் கொண்டவர். இதனால் விக்கெட்டுகள் விழுந்திருக்ககூடும். கோலி- யுவராஜ் பந்துவீச்சு கூட்டணி மேஜிக் நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் தோனிக்கு எந்த ஆப்ஷனுமே இல்லாமல் போனது. அதனால் கடைசி இரண்டு ஓவர்களை  வீசுவதற்கு   லெக் ஸ்பின் வீசும் ஜடேஜா, கோலியை தேர்ந்தெடுத்தார்  தோனி. கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளை கோலி நன்றாக வீசியது குறிப்பிடத்தக்கது. 192 ரன்களை மட்டும் வைத்து கொண்டு இந்தியா கடைசி ஓவர் வரை போராடியது ஆறுதலான விஷயம் தான்.

எமனான நோ-பால் :

அஷ்வின் நோ-பால் வீசுவது அரிதிலும் அரிதான நிகழ்வு. அஷ்வின் ஓவரில் விழுந்த ஒரே விக்கெட்டும் நோபாலாகி போனது துரதிர்ஷ்டம். பாண்டியாவின் ஓவரிலும் நோபாலில் விக்கெட் விழுந்தது. ஜடேஜா கஷ்டப்பட்டு தட்டிவிட்டு, கோலி கேட்ச் பிடித்ததிலும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் சிம்மன்ஸ் அவுட் ஆவதற்கு பதிலாக அவருக்கு சிக்ஸர் பரிசாக கிடைத்தது. மூன்று முறை இந்தியாவுக்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் பெரிய பேட்டிங் வரிசையும், வலுவான ஹிட்டர்களும் இருக்கிறார்கள். அணியில் ஒன்பது சிறந்த ஹிட்டர்களை வைத்துள்ள அணியிடம்தான் நாம் தோற்று போயிருக்கிறோம். தோனி தலைமையிலான இந்தியா அணி எல்லாவகையிலும் முயற்சி செய்து தான் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் மனதில் நன்மைதிப்பையே பெற்றிருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி போட்டியில் சிறப்பாக் விளையாட நம் வாழ்த்துக்களை சொல்வோம்.


- பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close