Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்சிலோனாவை பழிவாங்கியது ரியல் மாட்ரிட்!

ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று மோதிய எல் கிளாசிக்கோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டி என்றால் அது எல் கிளாசிகோ தான்.

புகழ்பெற்ற இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டி என்றுமே கால்பந்து ரசிகர்களின் இதயத்துடிப்பைக் கட்டிப்போட்டுவிடும். எம்.எஸ்.என் எனப்படும் மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் கூட்டணிக்கும் பி.பி.சி எனப்படும் பேலே, பென்சிமா, கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட்டணிக்குமான இந்த யுத்தத்தின் முதல் அத்தியாயத்தை பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேம்ப் நௌ மைதானத்தில் நடந்த இப்போட்டி, மறைந்த முன்னாள் பார்சிலோனா வீரர் ஜோஹன் கிரையோஃபிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு தொடங்கியது. ஆட்டத்தின் முதல் நிமிடம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் எதிரணி வீரர்களைத் தள்ளி விளையாட முதல் பாதியில் மட்டும் 4 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. பார்சிலோனா அணியே அதிக நேரம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரு அணிகளாலும் கோல் போட முடியாததால் முதல் பாதி சமநிலையிலேயே முடிந்தது.

இரண்டாம் பாதியும் முதல் பாதியைப் போலவே விருவிருப்பாய் அமைந்தது. ரியல் மாட்ரிட் அணி அவ்வப்போதுதான் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் பார்சிலோனா அணியோ எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது. இரண்டாம் பாதி தொடங்கிய பத்தாவது நிமிடம், பார்சிலோனாவின் ஆட்டம் அனல் பறந்தது. வரிசையாக கோல் நோக்கி ஷாட்கள் அடிக்கப்பட்டன.

மெஸ்ஸி அடித்த அற்புதமான ஷாட்டை, ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் நவாஸ் மிகச்சிறப்பாக தடுத்தார். அதன் விளைவாகக் கிடைத்த கார்னரை ரகிடிக் கோல் நோக்கி அடிக்க, பாய்ந்து வந்த அதை தலையால் முட்டி கோலாக்கினார் பிக்கு. ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் ரியல் வீரர்கள் பார்சிலோனாவின் கோல் பகுதியை முற்றுகையிட்டனர். க்ரூஸ் அடித்த பந்தை அற்புதமாக ‘பைசைக்கிள் கிக்’ அடித்து கோலாக்கினார் பென்சிமா. இதன்மூலம் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

கடைசி 20 நிமிடங்கள் ஆட்டம் சூடு பிடித்தது. ரியல் வீரர்கள் பந்தை மின்னலென கோல் நோக்கி செலுத்தினர். ஒருமுறை பேலே அடித்த கோலை நடுவர் நிராகரிக்க, அடுத்த சில நிமிடங்களில் ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட, விரக்தியின் உச்சத்திற்கே சென்றனர் மாட்ரிட் ரசிகர்கள். ஆனாலும் மனம் தளராத பேலேவும் ரொனால்டோவும் மீண்டும் அதிரடி காட்ட 85வது நிமிடத்தில் ரொனால்டோவின் மூலம் கிடைத்தது வெற்றிக்கான கோல். இறுதியில் 2-1 என வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் அணி முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது. பார்சிலோனா அணி 76 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன.

லா லிகா தொடரின் மற்றொரு போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெடிஸ் அணியை போட்டுத்தாக்கியது. அவ்வணியின் டாரஸ், ஜுவான்ஃபிரான், பார்டே ஆகியோர் தலா ஒரு கோல்களும், கிரீஸ்மேன் இரண்டு கோல்களும் அடித்தனர். இவ்வெற்றியின் மூலம் அத்லெடிகோ அணி 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் முன்னனி அணிகளான செல்சி, ஆர்சனல், மேன்செஸ்டர் சிட்டி அணிகள் 4-0 என்ற அதே கோல் கணக்கில் ஆஸ்டன் விலா, வாட்ஃபோர்டு, போர்ன்மௌத் ஆகிய அணிகளை வீழ்த்தின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாட்டன்ஹாம் – லிவர்பூல் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. டாட்டன்ஹாம் அணியின் இளம்புயல் ஹேரி கேன் இப்போட்டியில் கோலடித்து பிரீமியர் லீக் வரிசையில் 22 கோல்களுடன் முன்னிலை வகிக்கிறார்.

பிரான்சின் லீக் 1 தொடரில், பி.எஸ்.ஜி அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. அவ்வணி நைஸ் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஜிலாட்டன் இப்ராஹிமோவிக் ஹாட் டிரிக் கோல் அடித்து அசத்தினார். இத்தாலியின் சீரி ஏ தொடரில் நடப்பு சாம்பியன் ஜுவன்டஸ் அணியும், ஜெர்மனியின் பண்டஸ்லிகா தொடரில் பேயர்ன் மூனிச் அணியும் வெற்றி பெற்று தங்கள் முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டனர். பொருசியா டார்ட்மன்ட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெர்டர் பெர்மன் அணியை வீழ்த்தியது.

மு.பிரதீப் கிருஷ்ணா (மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ