Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

ரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி முடிவதையொட்டி, அடுத்த பயிற்சியாளராகப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மேலாளர் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறினாலும் டிராவிட், வார்னே, ஸ்டீவ் வாக் என்ற சில பெயர்களும் அடிபடுகின்றன. கிரிக்கெட் உலகின் கௌரவமிக்க பதவியான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது? யார் நியமிக்கப்பட்டால் அணி மேம்படும்? இதோ சில பெயர்களை அலசுவோம்.

ராகுல் டிராவிட்

நமது அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மொத்த தேசமும் எதிர்பார்க்கும் ஒரு பெயர் – டிராவிட். ஒரு வீரராய், இந்திய அணியின் ஆபத்பாந்தவனாய், டெஸ்ட் போட்டிகளில் சுவராய் எந்த அளவு ரசிகர்கள் இவரை நேசித்தார்களோ, அதைவிட  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் டிராவிட்டை நேசித்தனர்.

 நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பாமல், இளம் இந்திய வீரர்களின் திறமைகளை இவர் வெளிக்கொண்டுவந்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அணியின் ஒவ்வொரு வீரர் மீதும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டுவது டிராவிட்டின் ஸ்பெஷாலிட்டி. 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு ஏற்கனவே பயிற்சியாளராக இருப்பதால், அந்த அனுபவமும் கைகொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல் தற்போதைய அணியில் உள்ள கோலி, நெஹ்ரா, அஷ்வின் போன்ற சில வீரர்கள் டிராவிட்டோடு விளையாடிய அனுபவம் உள்ளதால், எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்திய அணியும் தற்போது மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இளம் வீரர்களை வேட்டைப் புலிகளாக மாற்றுவதற்கு டிராவிட்டை விட சிறந்த ஆள் இருக்க முடியுமா என்ன?

ஷேன் வார்னே

“நிச்சயமாக நான் அதை விரும்புவேன்” – இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு ஷேன் வார்னே கூறிய பதில் இது. டி20 உலகக்கோப்பையில் அரை இறுதியோடு வெளியேறியதைப் பற்றிப் பேசையில், இந்திய அணியின் பந்துவீச்சுப் பிரச்சனைகள் பற்றிக் கூறிய வார்னே, அவற்றை நிவர்த்தி செய்யத் தயாராயிருக்கிறார். முதல் ஐ.பி.எல் தொடரில் பலவீனமாகக் கருதப்பட்ட ராஜஸ்தான் அணியை சாம்பியனாக்கிய இவரது தலைமையை யாராலும் மறக்க முடியாது. உணர்ச்சிகளை சட்டென்று வெளிப்படுத்துபவராக இருந்தாலும், சக வீரர்களை ஊக்கப்படுத்தத் தவறமாட்டார்.

அஸ்னோத்கர், ஜடேஜா, திரிவேதி போன்ற வீரர்களை ஊக்கப்படுத்தி சிறந்த டி20 வீரர்களாக்கினார் வார்னே. நீண்ட காலமாக மோசமாக செயல்பட்டு வரும் இந்திய பந்துவீச்சு இவரால் நிச்சயம் எழுச்சி காணும். ஏற்கனவே உலகத்தரத்திலிருக்கும் ஸ்பின் டிப்பார்ட்மென்ட் அசாத்திய சாதனைகள் படைக்கலாம்.

ஸ்டீவ் வாக்

இந்திய பயிற்சியாளர் பதவியை விரும்பும் மற்றொரு ஆஸி வீரர். உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு அணியை எப்படி உருவாக்க வேண்டுமென்று நன்கு அறிந்தவர். இக்கட்டான சூழ்நிலைகளில் எவ்விதமான மிகப்பெரிய முடிவுகளையும் எடுக்கக் கூடியவர். மேற்கிந்தியத் தீவுக்கெதிரான கடைசி டெஸ்டை வென்றால் தான் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருக்கையில் துணைக் கேப்டன் வார்னேவையே அணியை விட்டு நீக்கியவர். அணியின் நலனுக்காக எதையும் செய்யக்கூடியவர் ஸ்டீவ். ஆஸி அணியின் கேப்டனாக இருக்கையில் அனுபவத்தையும் இளமையையும் மிக அற்புதமாகக் கையாண்டவர் இந்திய அணியையும் சிறப்பாகக் கையாள்வார் என நம்பலாம்.

ஸ்டீபன் பிளமிங்


மற்றவர்கள் கூட பயிற்சியாளர்களாக தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். ஆனால் பிளமிங் நிரூபிப்பதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்சை தன்னிகரற்ற அணியாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. வீரர்களிடத்தில் ஒரு ஆசிரியர் போல் ஸ்ட்ரிக்டாக இல்லாமல் தோழனாகப் பழகுவதே இவரது மிகப்பெரிய பிளஸ். எந்த ஒரு சூழ்நிலையிலும் அணியின் கெமிஸ்டிரி சிதையாமல் பார்த்துக்கொள்வார். ஒவ்வொரு ஏலத்திலும் பழைய அணியை மீட்டதுவே அதற்கு சாட்சி. 2011ம் ஆண்டே இவரது பெயர் இப்பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டது. தற்போதைய இந்திய அணியின் தோனி, ஜடேஜா, ரெய்னா, அஷ்வின், நெஹ்ரா, நேகி எனப் பலரும் இவருக்கு நெருக்கம் என்பதால் அணியில் எப்போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்க அது உதவும். யாரும் அறியாத தமிழக வீரர் அஸ்வின் முருகன் புனே அணியால் வாங்கப்பட்டதற்குக்கூட பிளமிங் தான் காரணம். எந்த சமயத்திலும் திறமைகளை புறக்கணிக்கமாட்டார். நீண்ட காலமாக நியூசி அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்த இவர், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் கோலோச்சலாம்.

மைக்கேல் ஹஸ்ஸி

கடந்த ஐ.பி.எல் தொடரின் போது வி.வி.எஸ்.லக்ஷ்மன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை பரிசீலிக்குமாறு ஹஸ்ஸியிடம் கேட்டுள்ளார். இப்போது பயிற்சியாளரை முடிவு செய்யும் மூவருள் அவரும் ஒருவராக உள்ளதால், ஹஸ்ஸி பயிற்சியாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். கிரிக்கெட் விளையாட்டின் நுனுக்கங்களை நன்கு அறிந்தவர் ஹஸ்ஸி. மூன்று வகையான போட்டிகளிலும் கலக்கியவர். ஒவ்வொரு ஃபார்மட்டிலும் தனக்கென ஒரு அனுகுமுறையைக் கையாண்டவர். எந்தப் போட்டியை எப்படிக் கையாள வேண்டுமென அறிந்தவர். இவரும் ஐ.பி.எல் தொடரில் பல இந்திய வீரர்களோடு விளையாடிய அனுபவம் உள்ளதால், எளிதில் தனது திட்டங்களை செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது 2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் ஆலோசகராகவும், இந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸி அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளதால், அந்த அனுபவமும் அவருக்குக் கைகொடுக்கும்.

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் மேலாளராக சாஸ்திரியின் செயல்பாடுகள் மோசம் இல்லைதான். தோனியின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் அணியை நிலைநிறுத்தினாலும், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடர்களை இழந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாண்டியா, பூம்ரா போன்ற இளம் வீரர்கள் மட்டுமல்லாது நெஹ்ரா, யுவி போன்ற சீனியர்களுக்குக் கம்பேக் கொடுத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஆடும் லெவனில் மாற்றம் கொண்டு வர விரும்பாமல் சொதப்பும் வீரர்களை வைத்துக் கொண்டே இருப்பது தான் தோனி – சாஸ்திரி கூட்டணியின் ஒரே மைனஸ். மற்றபடி அணி வீரர்களை வழிநடத்துவதாகட்டும், டெஸ்ட் கேப்டன் கோலியின் மீது உச்சகட்ட நம்பிக்கை செலுத்துவதாகட்டும் சாஸ்திரி சிறப்பாகவே செயல்படுகிறார். அணியின் வளர்ச்சிக்குத் தகுந்த மாற்று கிடைக்காத பட்சத்தில் பிளட்சர் போன்று இன்னொரு ஆளை நியமிக்காமல் சாஸ்திரியையே டிக் செய்யலாம்.

ஜான் ரைட், சேப்பல், கிறிஸ்டன், பிளட்சர் என்று 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தான் அணியை வழிநடத்துகிறார்கள். இம்முறை ஒரு மாற்றாக இந்தியர் வரவேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக அனைவரது ஆள் காட்டி விரலும் காட்டும் ஒரு நபர்- ராகுல் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் சுவரே இப்போது அணியை தூக்கி நிறுத்தும் ஏணியாக மாற வேண்டுமென்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்களின் ஆசை. அதையே கங்குலி,சச்சின்,லக்ஷ்மன் ஆகியோரும் நினைப்பார்களா?

வீ  ஆர் வெயிட்டிங் ஃபார் தி வால்!

மு.பிரதீப் கிருஷ்ணா(மாணவப் பத்திரிக்கையாளர்)
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ