Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பை டி20: சிறந்த யங் லெவனில் யாருக்கு இடம் ?

உலகக் கோப்பை டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் உலகக் கோப்பையை ஆடிய இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கனவு அணி இதோ....
 
1. ஜேசன் ராய் (இங்கிலாந்து)
 
 
இங்கிலாந்து அணிக்கு  தொடக்க வீரராக விளையாடிய ஜேசன் ராய்தான் யங் '11' அணிக்கும் தொடக்க வீரர்.  தென்னாபிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 229 ரன்னை சேஸ் செய்யவேண்டும் என்ற நிலையில் ரபாடா, ஸ்டெயின் பந்துவீச்சை சிதறடித்து 16 பந்தில் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்ஸர் உதவியுடன் 43 ரன்களை குவித்தார். அரை இறுதிப் போட்டியில் வலுவான நியூஸியை கதறவிட்டு,  44 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து இறுதிப் போட்டி வரை வந்ததற்கு ராய் முக்கிய காரணம். 
 
 
2.  உஸ்மான் கவாஜா  (ஆஸ்திரேலியா) 
 
 
ஆஸ்திரேலியாவின் வார்னர், வாட்சனையே ஓரங்கட்டிவிட்டு நிரந்தர தொடக்க வீரராக மாறிவிட்டார் கவாஜா. நான்கு போட்டியிலும் 143 ரன்களை குவித்துள்ளார். சராசரி - 35.75. அனைத்துப் போட்டியிலுமே ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம் பெறுவதற்கு அடித்தளமிட்டவர் கவாஜா. விர்ச்சுவல் காலிறுதி என கருதப்பட்ட இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில்,  நான்கு ஓவரில் ஐம்பது ரன்களை குவிக்க உதவினார். ஆஸ்திரேலியாவின் எதிர்கால தொடக்க வீரர் மட்டுமல்ல,  யங் '11' னிலும் ராயுடன் தொடக்க வீரராக களமிறங்க தகுதியானவர் கவாஜா. 
 
 
 
3. ஆண்ட்ரே பிளேட்சர்
 
 
பெங்களூருவில் இலங்கைக்கு எதிரான போட்டியில்,  சேஸிங் சமயத்தில் கெயிலுக்கு பதிலாக களமிறங்கினார்  ஃபிளட்சர். கெயிலின் காயத்தால் அதிர்ஷ்டமடிக்க,  கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விளாசி தள்ளிவிட்டார். சுழற்பந்துக்கு மைதானம் சாதகமாக இருந்தபோதும்,  64 பந்தில் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறவைத்தார்.  யங் லெவனில் இவரை ஒன் டவுன் பேட்ஸ்மேனாக தாரளமாக இறக்கலாம். 
 
 
4. மொஹமது சஷாத் (​ஆப்கானிஸ்தான்) 
 
இந்த உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் விளாசியது சஷாத்துதான். ஆள் பார்க்க தொப்பையுடன் இருக்க, பலர் சிரித்தனர். ஆனால் தென்னாப்பிரிக்க பவுலர்களையே கண்ணீர் விடவைக்கும் அளவுக்கு சாத்து சாத்து என சாத்தினார். ஸ்டெயினின் பந்துவீச்சை எதிர்கொள்ள பயமில்லை என ஜாலியாக பேட்டியும் தந்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடம் சஷாதுக்கு. இவர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான் அணிக்கு விக்கெட் கீப்பரும் கூட. யங் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஷாத் தான்.
 
 
5.  பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 
 
 
இறுதிப்போட்டியில் 19 ரன்களை தடுக்க முடியாமல்,  பிராத்வொயிட்டை நான்கு சிக்ஸர் விளாச விட்டவருக்கு எப்படி அணியில் இடம் என யோசிக்கலாம். இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசுவது சாதாரண விஷயமில்லை. நான்கு சிறப்பான பந்துகளையே வீசினார். முக்கியமாக,  இலங்கைக்கு எதிரான  போட்டியில் அப்போது பயமுறுத்திய மேத்யூஸ் களத்தில் நின்ற போது, இலங்கை,  கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைஇருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் சிறப்பாக வீசி,  நான்கு ரன்களை மட்டுமே விட்டு தந்தார். அரையிறுதியில்,  தனது கடைசி ஓவர்களால்  நியூசிலாந்தை அருமையாக கட்டுப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டோக்ஸ் பேட்டிங்கிலும் வெளுத்து கட்டக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர்.
 
 
6. ஹர்டிக் பாண்டியா (இந்தியா)
 
 
வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் இடத்துக்கு பாண்டியா பொருத்தமாக இருப்பார். இந்த உலகக்கோப்பையில்  பேட்டிங்கில் தனது திறமையை நிரூபிக்க,  பாண்டியாவுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் பவுலிங்கில் அசத்தினார். இந்த உலகக்கோப்பையில்,  இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது நெஹ்ராவும், பாண்டியாவும்தான். வங்கதேசத்துக்கு எதிராக, முதன் முறையாக கடைசி ஓவர் வீசும்போதே,  கடைசி மூன்று பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே வங்கதேசத்துக்கு தேவை என்ற நிலையில்,  இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். பாண்டியாவுக்கு ஆல்ரவுண்டர் இடம் எப்போதும் உண்டு.
 
7. கார்லஸ் பிராத்வொயிட் (வெஸ்ட் இண்டீஸ்)
 
சமீப நாட்களில் கூகுளில்  அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் கார்லஸ் பிராத்வொயிட் தான். சமூக வலைதளங்களில் தெறி வைரல். இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி,  இங்கிலாந்தை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, கடைசி ஓவரில் நினைத்து கூட பார்க்கமுடியாத அளவுக்கு,  நான்கு இமாலய சிக்சர்களை விளாசிய பிராத்வோயிட்டுக்கு வேகப்பந்து வீசுவதோடு ஹிட்டர் பணியும் இனி உண்டு.
 
8. மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து)
 

உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விக்கெட் எடுத்தவர் சாண்ட்னர். சுழல் மண்ணில் இந்திய வீரர்களை திணரவிட்டு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கும் எதிராக சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலகக்கோப்பையில் மிகக் குறைவான ரன்களையே விட்டுத் தந்தவர்களில் சாண்ட்னரும் ஒருவர். 

 
 
9. ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா)
 
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது  ஜாம்பாதான். இந்தியாவுடனான தோல்விக்கு, ஜாம்பாவுக்கு சரியாக ஓவர் கொடுக்காததே காரணம் என பேட்டி தந்திருந்தார் கேப்டன் ஸ்மித். ஏனெனில் ஜாம்பா வீசிய இரண்டு ஓவரில், 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர் இந்திய வீரர்கள். வங்கதேச  அணியை தனது  சுழலால் சுருட்டியதற்கு,  ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஜாம்பா. 
 
10. ஜெப்ரி வான்டர்சே (இலங்கை)
 
 
மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தையே ஓரங்கட்டும் அளவுக்கு அற்புதமாக பந்து வீசி வருகிறார் வாண்டர்சே.  இந்த உலககோப்பையில் இலங்கை அணிக்கு ஒரே பிளஸ் வாண்டர்சேவை கண்டெடுத்ததுதான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் வீசி,  வெறும் 11 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தினார்.
 
 
11. முஸ்தாபிசூர் ரஹ்மான் (வங்கதேசம்)
 
 
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது, குறைவான ரன்களை விட்டுக்கொடுத்தது, சிறந்த பந்துவீச்சு, ஐந்து விக்கெட் எடுத்தது  என அத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் முஸ்தாபிசூர் ரஹ்மான். நியூசிலாந்தின் பலமான பேட்டிங் வரிசையை உடைத்து, ஐந்து  விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். தொடக்க ஓவர்களையும், டெத் ஓவர்களையும் வீசுவதற்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் முச்தாபிசூர் ரஹ்மான்தான்.

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ