Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகக் கோப்பையின் மோசமான அணியில் இரண்டு இந்தியர்கள்! 3 கேப்டன்கள்!

விராட் கோலி, வாட்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அடங்கிய டி20 உலகக்கோப்பையின் சிறந்த அணியை ஐ.சி.சி இவ்வாரம் வெளியிட்டது.

பெரிய அளவில் எதிர்பார்க்காத வில்லி, ஜேசன் ராய், நெஹ்ரா போன்றவர்கள் அந்த சிறந்த அணியில் இடம்பிடித்து அசத்தினார்கள். அந்த அணியில் இடம்பிடிக்காவிட்டாலும் எதிர்பார்ப்பை விட சிறப்பாய் செயல்பட்டவர்கள் ஏராளம். ஆப்கானிஸ்தானின் முகமது சஷாத், நியூசிலாந்தின் ஈஷ் சோதி, வங்கதேசத்தின் தமீம் இக்பால் என ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்கள் ஏராளம். ஆனால் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்பு கொடுத்துப் போனவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். எல்லா தொடரிலும் ஆடிவிட்டு இந்த உலகக்கோப்பையில் சொதப்பியவர்கள், தொடர்ந்து சொதப்பல் ஃபார்மிலேயே  இருப்பவர்கள், ஆடிக்கும் அமாவாசைக்கும் மட்டும் அடித்தவர்கள் என சிலரை தேர்ந்தெடுத்து, இந்த உலகக்கோப்பையின் மோசமான லெவனை உருவாக்கியுள்ளோம். டி20 உலகக் கோப்பையின் மோசமான 11 பேர் இவர்கள்தான்!

1. ஷிகார் தவான்!

ஆஸ்திரேலியா 300 ரன்கள் அடித்தபோதெல்லாம் ரோஹித்தோடு இணைந்து அதிரடி துவக்கம் தந்த தவான்,  இரண்டு ஆண்டுக்கு முன்னரே தொலைந்து போய்விட்டார். இதோ இப்ப அடிச்சிடுவாரு, அப்ப அடிச்சிடுவாருனு எதிர்பார்த்து எதிர்பார்த்து தோனியே அப்சட் ஆயிட்டாப்ல. பிரளயமே வந்தாலும் டீம மாத்த மாட்டேனு ஒத்தக் கால்ல நிக்கும் தோனியவே, டீமை மாற்ற வச்ச பெருமை தவானுக்கே சேரும். 4 போட்டிகளில் விளையாடி,  வெறும் 43 ரன்கள்தான் எடுத்தார் இவர். அதை எடுக்க இவர் எடுத்துக் கொண்டதோ 52 பந்துகள். ஒவ்வொரு முறையும் இவர் மோசமான துவக்கம் தந்தாலும் கோலியின் உதவியால் அணி தப்பித்தது. அனைத்து வகையான போட்டிகளிலும் சொதப்பி வருவதால் இந்திய அணியில் இன்னும் எத்தனை காலம் நீடிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

2.சுரேஷ் ரெய்னா

'இவரு மஞ்ச சட்ட போட்டா மட்டும்தான் அடிப்பாரு' எனக்கூறிய நெட்டிசன்களுக்கு,  தனது பேட்டிங்கால் நன்றாக தீனி போட்டார் ரெய்னா. ஐ.பி.எல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேனால் ஒரு போட்டியில் கூட,  அணிக்காக சிறப்பான பங்களிப்பைத் தர முடியவில்லை. இவர் 4 இன்னிங்ஸ்களில் அடித்த ஸ்கோரை வெறும் 1 போட்டியில் மட்டுமே ஆடிய ரஹானே,  கிட்டத்தட்ட சமன் செய்து விட்டார். கொஞ்சம் கூட ஃபுட் வொர்க் இல்லாமல், இன்னும் ஷார்ட் பால்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்துக் கொண்டிருந்தால் காத்திருக்கும் மனீஷ் பாண்டே, பவன் நெகி போன்றோரிடம் தன் இடத்தைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும். ஒரு உலகக்கோப்பையில் வெறும் 41 ரன்கள் என்பது, ரெய்னா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரிடம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

3. அலெக்ஸ் ஹேல்ஸ்

டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தவர். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதமும் 7 அரைசதங்களும் அடித்தவர். ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஏமாற்றத்தை மட்டுமே பதிலாய்த் தந்தார். 10 சர்வதேச டி20 களில் மட்டுமே விளையாடிய ஜேசன் ராய் ஒருபுறம் புகுந்து விளையாட, அவரோடு இன்னிங்சை தொடக்கும் இவரோ ஒவ்வொru போட்டியிலும் சொதப்பினார். 5 போட்டிகளில் வெறும் 66 ரன்கள் எடுத்து, தான் ஒரு டி20 ஸ்பெஷலிஸ்ட் என்று கிரிக்கெட் உலகம் வைத்திருந்த நம்பிக்கை பொய்யென்று அவரே சுட்டிக்காட்டினார்.


4. டேவிட் வார்னர்டெஸ்ட் போட்டியையே டி20 போல் ஆடும் இந்த மனிதனிடம்,  டி20 போட்டிகளில் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் ரசிகர்கள்? தனது ஆஸ்தான ஓப்பனிங் ஸ்பாட்டில் விளையாடவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வார்னரின் பேட்டிங் அடிப்படையிலேயே மிக மோசமாக இருந்தது. கடந்த சில தொடர்களில் மிடில் ஆர்டரில் உண்மையிலேயே சீறினார் வார்னர். ஆனால் உலகக்கோப்பையில் ஏன் கோட்டைவிட்டார்? 4 இன்னிங்ஸ்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே அடிக்கக் காரணம் என்ன? இந்தியாவின் ஸ்லோ ஆடுகளங்களுக்கு வார்னரால் ஈடு கொடுக்க முடியவில்லை. குறிப்பாக ஸ்பின்னர்களிடம் ரொம்பவே திணறினார். 4 போட்டிகளில் 3 முறை ஸ்பின்னர்களிடமே வீழ்ந்தார் வார்னர். அது மட்டுமல்லாமல் இவரது வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம், இவரது மோசமான ஷாட் செலக்சன்தான். பேட்டிங் ஆர்டரை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை.

5. லஹிரு திரிமன்னேடி20 கேப்டன் மலிங்கா தொடரிலிருந்து ஓய்வு பெற, முன்னாள் கேப்டன் மாத்யூசிடம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கேட்கிறது இலங்கை அணி நிர்வாகம். அப்போது மாத்யூஸ் வைத்த நிர்பந்தங்களில் ஒன்று,  மூத்த வீரர் திரிமன்னேவை அணியில் சேர்க்க வேண்டுமென்பது. 6,5,0,3 என நான்கு போட்டிகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து, மாத்யூசை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டார் இவர். இவர் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து அனைத்துப் போட்டிகளிலும் இவரைத் தேர்வு செய்ய, அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி,  நடப்பு சாம்பியன்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேற மிகமுக்கிய காரணமாய் அமைந்தார் திரிமன்னே.

6. இயான் மோர்கன்இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தை கொண்டு வந்தது ஜோ ரூட் என்றுதான் சொல்ல வேண்டும். கேப்டன் மோர்கன் அனைத்து போட்டிகளிலும் சொதப்பித் தள்ளினார். அதிலும் குறிப்பாக அரை இறுதிப் போட்டியில் கோல்டன் டக், பைனலில் 5 ரன்கள் என அனைவரையும் விரக்தியின் உச்சிக்கே கூட்டிச் சென்றார். 6 போட்டிகளிலும் சேர்த்து இவர் அடித்த ரன்கள் வெறும் 66. பேட்டிங்தான் இப்படியென்றால் கேப்டன்ஷிப்போ படு மோசம். முக்கிய பவுலர் மொயின் அலிக்கு பைனலில் ஓவரே கொடுக்காமல்,  ஸ்டோக்சுக்கு கடைசி ஓவர் தர வேண்டிய நிலைக்கு ஆளாகி, கோப்பையை கோட்டை விட்டு, இந்த மோசமான அணியின் கேப்டனாக மோர்கனுக்கு மட்டுமே தகுதி உண்டு.

7. டேரன் சமிஇறுதிப்போட்டியில் விளையாடிய இரண்டு கேப்டன்களுமே அணிக்காக பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை தான். சிக்சரும் ஃபோருமாக போட்டுத்தள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் அணிக்காக ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது தான் பெரும் சோகம். 3 இன்னிங்ஸ்களில் வெறும் 8 ரன்கள் மட்டும் அடித்த இவர், அணிக்காக செய்தது 6 போட்டிகளிலும் டாஸ் வென்று கொடுத்தது மட்டுமே. பவுலராகவும் சமி பெரிதாய் ஒன்றும் சாதிக்கவில்லை. 3 ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் கொடுத்து, 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய இவரது செயல்பாட்டைப் பார்க்கையில், இவர்தான் சாம்பியன்களின் கிங்கா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது.

8. மஸ்ரஃபி மோர்டாசா

மோசமான லெவனில் மீண்டும் ஒரு கேப்டன். 7 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்த இவர், பவுலிங்கிலும் 3 விக்கெட் மட்டுமே எடுத்து சொதப்பினார். இந்தியாவுடனான போட்டி, சாதகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், முன்னாலேயே களமிறங்கி விக்கெட்டையும் பறிகொடுத்து இந்தியாவிற்கு சில சாதகங்கள் செய்து கொடுத்தார். ஆனால் இவரது தலைமை ஓரளவு சிறப்பாகவே இருந்தது. பேட்டிங் ஆர்டரை ஒவ்வொரு போட்டியிலும் மாற்றியது வீரர்களை செட்டில் ஆக விடாமல் தடுத்துவிட்டது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மோசமான செயல்பாடுதான்.

9. டேல் ஸ்டெயின்

உலகமே பார்த்து பயந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்த அணியில் இணைவது சற்றே கடினமான விஷயம் தான். யார்க்கர் மற்றும் பவுன்சர்களாலும், தனது வேகத்தாலும் எதிரணியை நிலைகுலைய வைத்த ஸ்டெயின், தற்போது தன் வாழ்நாளின் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த அவர், 6 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்க, அணியிலிருந்து கழட்டி விடப்படும் மோசமான நிலையை அடைந்தார். கடந்த ஐ.பி.எல் போட்டியிலிருந்தே அவரது செயல்பாடு மோசமாகத்தான் உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக அவர் எப்படி செயல்படப்போகிறார் என்பதே அவரது கிரிக்கெட் பயணத்தை முடிவு செய்யும்.

10. சுலைமான் பென்

சுனில் நரைனின் இடத்தைப் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்த்தால், சுத்தமாக அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர் போலவே செயல்பட்டார். இத்தொடரில் 6 போட்டிகளில் 22 ஓவர்கள் பந்துவீசி,  2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி திணறிக்கொண்டிருக்க, பட்லருக்கு அற்புதமாக இரு சிக்சர் டெலிவரிகளை வழங்கி,  இங்கிலாந்தை கரை சேர்த்தார். நம்பகத்தன்மை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுத்தமாக நம்ப முடியாத வீரர் என்றால் அது பென் தான்.

11. முகம்மது இர்ஃபான்

உலகின் அச்சுறுத்தும் பவுலிங் யூனிட்டாக கருதப்படும் பாகிஸ்தான் பந்துவீச்சின் மிகப்பெரிய ஏமாற்றம் இர்ஃபான். ஒவ்வொரு ஓவருக்கும் 9.32 ரன் என்ற சராசரியில் 105 ரன்களை வாரி வழங்கினார் இர்ஃபான். அதிக விக்கெட் வீழ்த்தியிருந்தால் கூடப் பரவாயில்லை. வெறும் 2 விக்கெட்டுகள்தான் வீழ்த்தினார். நீண்ட நாள் விளையாடாத ஆமிர் அளவிற்கு இர்ஃபானின் செயல்பாடு இல்லை.

12. வது வீரர் – நாதன் கோல்டர்நைல்

அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற மிகமுக்கியக் காரணம் என்று சொல்லலாம்.கொஞ்சம் கூட வேரியேஷன் இல்லாமல், எப்படியெல்லாம் பந்து வீசினால் கோலி அடிப்பாரோ அப்படியெல்லாம் பந்துவீசினார் கோல்டர்நைல். அந்தப் போட்டியில் மட்டுமல்ல தொடர் முழுவதுமே சொதப்பினார். 16 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய இவர்,  மோசமான லெவனில் இருக்கத் தகுதியானவரே.

இவர்கள் மட்டும்தான் மோசமான வீரர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ், தில்ஷான், அஷ்வின், அப்ரிடி போன்ற வீரர்கள் பலரும் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இளம் வீரர்கள் பலர் எழுச்சி காண, உச்ச நட்சத்திரங்களெல்லாம் சோடை போயின. விளையாட்டில் எதுவும் நிரந்தரமல்ல என்பதே உண்மை. மீண்டு வருபவனே வீரன் என்பதால், இவர்களும் மீண்டு வருவார்கள். ஆனால் எப்போது? காலம் பதில் சொல்லும்.

 -மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close