Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி கிரிக்கெட் கதை சொல்ல மாட்டாரா ஹர்ஷா போக்ளே..?!

கிரிக்கெட் – இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேசியப் பண்டிகை. மேட்ச் பார்க்க பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு கட் அடிப்பது, டி.டி.எச் பேக்குகள் வாங்குவது, கேபிள் காரரிடம் சண்டையிட்டு சோனி, ஸ்டார் சேனல்களை வரச்செய்வது என இந்தியர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குமான காதலை வலுப்படுத்திய ஒரு அற்புத சக்தி தான் கிரிக்கெட். அப்படி அத டி.வி யில தான் பாக்கனுமா? ஸ்டேடியத்தில் பார்ப்பதை விட டி.வி யில் கிரிக்கெட் பார்க்க இந்தியர்கள் அதிகம் விருப்பப்படுவது ஏன்? இரண்டே காரணங்கள் தான். ஒன்று அடிக்கடி காட்டும் ரீ-ப்ளே. இரண்டாவது மேட்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வர்ணனை. என்னதான் இந்தியா பாகிஸ்தான் போட்டியாகவே இருந்தாலும், வெறும் மட்டையின் சத்தத்தையும் கூச்சலையும் கேட்டுக்கொண்டிருக்கவா முடியும்? போட்டிகளை  ரசிகர்கள் விரும்பும் வகையில் ஆர்வப்படுத்தியதில் வர்ணனையாளர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இடமுண்டு. தங்களது அசாத்திய மொழித் திறமையாளும், கிரிக்கெட் பற்றிய நிபுணத்துவத்தாலும் வீரர்களைப்ப்போலவே தங்களையும் ரசிக்க வைத்த வர்ணனையாளர்கள் சிலர் உள்ளனர். சஞ்சய் மஞ்சரேக்கர், ரவி சாஸ்திரி, டேனி மோரிசன் என ரசிகர் வட்டம் வைத்துள்ள கமன்டேட்டர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களை விடவெல்லாம் ஒரு மிகப்பெரிய முன்னோடி தான் ஹர்ஷா போக்லே. இந்நிலையில் கிரிக்கெட்டின் குரலாகக் கருதப்பட்ட ஹர்ஷா போக்லே, ஐ.பி.எல் 9 யின் வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

54 வயதான ஹர்ஷா போக்லே தந்து 19வது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவிற்காக வர்ணனை செய்யத் தொடங்கினார். பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் விளையாடியதில்லை தான், ஆனால் கிரிக்கெட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அறிந்தவர். வாய் தான் இவரது மிகப்பெரிய சொத்து. இந்தியர்கள் ஆங்கிலம் பேசும் போது, தங்கள் தாய்மொழி வாடை அதில் வெளிப்படும் என்பார்கள். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்தவருடன் ஆங்கில யுத்தம் நடத்துமளவு இருக்கும் அவரது மொழி வலிமை. ஐ.ஐ.எம் அஹ்மதாபாத்தில் படித்தவர் என்றால் சும்மாவா? ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்பரேஷனால் வர்ணனை செய்வதற்கு அழைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமை போக்லேவிற்கே சேரும். ஒவ்வொரு ஜோர்னலிஸ்டுக்கும் கனவு ஸ்தாபனமான பி.பி.சி யில் எட்டு ஆண்டுகள் வர்ணனையாளராக செயல்பட்டு உலகக்கோப்பை போட்டிகளில் வர்ணனை செய்துள்ளார் ஹர்ஷா. கிரிக்கெட் தெரிந்த ரசிகர்களுக்கு ஹர்ஷாவைத் தெரியாமல் இருக்காது. அவர் அவ்வளவு பிரசித்தி பெற்றவர். ஐ.பி.எல் தொடர்களில் கடந்த 8 ஆண்டுகளும் வர்ணனை செய்து வந்த அவரை இரு வாரம் முன்பு இந்த சீசனின் வர்ணனையாளர் குழுலிரிந்து நீக்கியுள்ளது பி.சி.சி.ஐ. ஏன்? எதற்காக? எந்த அதிகாரப்பூர்வ கார்ணமும் சொல்லப்படாத நிலையில், “என்னை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை” என்று ஹர்ஷாவே குழம்புகிறார். ஆனாலும் இது தான் போக்லே நீக்கப்பட்டதற்கான காரணம் என்று சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அமிதாப்பிலிருந்து தொடங்கியதா?

இந்த போக்லே பிரச்சனையெல்லாம் நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பையிலிருந்தே தொடங்கியது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சொதப்பல் ஆட்டம் ஆடி கடைசிப் பந்தில் வென்றது நாம் அறிந்ததே. அந்தப் போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த போக்லே, வங்கதேச வீரர்களின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டினார். அவ்வப்போது இந்திய வீரர்களையும் சாடினார். இந்தப் போட்டி முடிந்ததும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் “ இந்திய வர்ணனையாளர்கள் அதிகமாக பிற நாட்டவர்களைப் பற்றிப் பேசுவதை விட, நம் இந்திய வீரர்களைப் பற்றிப் பேசினால் நன்றாக இருக்கும்” என்று ட்வீட்டியிருந்தார். அதை இந்தியக் கேப்டன் தோனி ரீட்வீட் செய்ய, சமூக வலைதளங்களின் வெளிச்சத்திற்கு வந்தது விவகாரம். ஹர்ஷாவோ தனது பதிலை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். “ நான் மிகவும் மதிக்கும் அமிதாப் போன்ற ஒருவர் இப்படிக் கூறுவது சற்று வருத்தம் தான். வர்ணனையின் போது பாரபட்சம் பார்த்து செயல்படுவதை நான் விரும்புவதில்லை. நான் பணிபுரியும் ஸ்டார் தொலைக்காட்சி யு.ஏ.இ, வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒளிபரப்பாகும். நான் இந்தியாவிற்கு சாதகமாகப் பேசினால், அது அந்நாட்டு ரசிகர்களை அவமதிப்பதைப் போல் அமைந்துவிடும்” என்று வருத்தம் தெரிவித்தார்.

 இச்சம்பவம் மட்டுமல்லாது, பிற வர்ணனையாளர்களும், முன்னாள் வீரர்களும் ஹர்ஷாவைப் பற்றி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர்அதே தொடரில் நடந்த இன்னொரு பிரச்சனை தான் ஹர்ஷாவை வெளியேற்ற மிகப்பெரிய காரணம் என்று கருதப்படுகிறது. நாக்பூரில் நடந்த போட்டியின் போது இந்தி மற்றும் ஆங்கில வர்ணனை மையங்கள் பிரிக்கப்பட்டதால், அடிக்கடி சில மாடிகள் ஏறி, இறங்க வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நிர்வாகிகளிடம், ஹர்ஷா அந்தத் தடுப்பு டோரை திறக்கச்சொல்ல, அவர்கள் மறுக்க, இவர் வாதிட, விஷயம் பி.சி.சி.ஐ காதிற்குச் சென்றுள்ளது. பி.சி.சி.ஐ செயலாளரான சஷாங் மனோகர் நாக்பூரைச் சார்ந்தவர். தனது சொந்த ஊரில் இப்பிரச்சனை ஏற்பட்டதால் அவர் உடனடியாக தலையிட்டு ஹர்ஷாவை வர்ணனையாளளர் குழுவிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

 

குஜராத் மற்றும் புனே அணிகள் மோதிய போட்டியின் போது, தோனி ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பைத் தவறவிட, “ஸ்டம்பிற்கு பின்னால் தோனிக்கு இன்று கடினமான நாள்” என்று ட்வீட் செய்ய, முன்னனி வர்ணனையாளரான ஜொனாதன் அக்னூவ், “ அட சும்மா இருங்க உங்கள டுவிட்டர விட்டு தூக்கிடப் போறாங்க” என்று கலாய்த்துள்ளார். ஆனால் அதை வேடிக்கையான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட்டில் இன்று நடந்துகொண்டிருக்கும் பிற்போக்குத்தனத்தை சுட்டிக்காட்டும் பதிவு அது.

ஏற்கனவே சி.எஸ்.கே வை இழந்த ஐ.பி.எல் லிற்கு போக்லேவின் நீக்கம் மிகப்பெரிய இழப்பு. போதாக்குறைக்கு தமிழ் வர்ணனை என்ற பெயரில் வேறு கொன்று கொண்டிருக்கிறார்கள். ரவி சாஸ்திரி, இந்திய அணியின் மேலாளர் ஆன போதே ஒரு சிறந்த வர்ணனையாளரை கிரிக்கெட் இழந்தது. இப்போது போக்லேவையும். நடுவர்கள் எந்நாட்டவராக இருந்தாலும், பாகுபாடு பார்க்ககூடாது என்பது அவர்களுக்கான நியதி. ஆனால் வர்ணனையாளர்களுக்கு அப்படி ஏதும் இல்லை. ஒவ்வொரு நாட்டவரும், அவர் நாட்டு வீரர்களைப் பற்றியே பேசிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் ஹர்ஷா அதையெல்லாம் தாண்டி நடுவுநிலையோடு பேசுபவர். சிறப்பாக விளையாடுபவர் எந்நாட்டவராக இருந்தாலும் விளையாட்டு உணர்வோடு பாராட்டுவார். அப்படிப்பட்ட ஒருவரை நீக்கியிருப்பதன் மூலம், தனது சர்வாதிகாரப் போக்கை உலகிற்குக் காட்டியுள்ளது பி.சி.சி.ஐ. அரசியல் மைதானத்திலும், அணித் தேர்வு அறையிலும், டிரெஸ்ஸிங் ரூம்களிலும் மட்டுமல்ல கமன்டெரி பாக்ஸ் வரை கூட வந்துவிட்டது.

மு.பிரதீப் கிருஷ்ணா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close