Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..?

டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்கு மாற்று வந்துவிடும் என்று அனைவரும் கருத, அது யார் என்ற கேள்வி எழுந்தது. மிடில் ஆர்டரில் ஆடும் ரஹானேவா? ஸ்ரேயஸ் ஐயரா? உத்தப்பாவா? என எத்தனையோ பெயர்கள் அடிபட, ‘ஐ ஆம் பேக்’ சொல்லி அனைவரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறது அடிபட்ட சிங்கம் கவுதம் கம்பீர்.

2009ம் ஆண்டு உலக டெஸ்ட் லெவனில் இடம்பெற்றிருந்த கம்பீரின் பெயர் மூன்றே ஆண்டுகளில் அணித்தேர்வுக்குக் கூட பரீசிலக்கப்படாமல் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலையற்ற ஆட்டத்தால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ரீ-என்ட்ரி கொடுக்குமளவு கம்பீரின் செயல்பாடு சிறப்பாக இல்லை தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டு முறை கோப்பைக்கு வழிநடத்திச் சென்றாலும், அவ்வப்போது அரை சதங்கள் அடித்தாலும் தேர்வாளர்கள் இவரது பெயரை பரிசீலிக்கவில்லை. ஐ.பி.எல் தொடர்களில் கூட ரெய்னா, கோலி போல மிகவும் அபாயகரமான ஆட்டத்தை இதுவரை அவர் வெளிப்படுத்தியதில்லை. 2014ம் ஆண்டு தொடர்ந்து 4 டக்குகள் போட்ட அவர், அதன்பிறகு மீண்டு சிறப்பாய் செயல்பட்டு கோப்பையை வெல்ல வழிவகுத்தார். ஆனால் நடப்பு சீசனில் கம்பீரின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது.


 

இதுவரை இத்தொடரில் விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் 192 ரன்கள் குவித்துள்ளார் கவுதீ. அதுவும் ஒரே முறை தான் அவுட் ஆகியுள்ளார் என்பது தான் கூடுதல் சிறப்பு. முதல் போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 99 என்ற இலக்கைத் துரத்திய போது நிதானமாக விளையாடி 41 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 52 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். நேற்று சன்ரைசர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் அணி 142 ரன்கள் எடுக்க, எளிதான இலக்கை கம்பீர் பொறுமையாக கையாள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே பவுண்டரிகளாக அடித்துத் தள்ளிய கவுதீ 150 என்ற ஸ்டிரைக் ரேட்டோடு 13 ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் விளாசி 90 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை கொல்கத்தா அணி எதிர்கொண்ட 52.3 ஓவர்களில் 51.4 ஓவர்கள் கம்பீர் களத்தில் இருந்துள்ளார் என்பது தான் தனிச்சிறப்பு. ரன்கள் குவிப்பது மட்டுமல்ல, பவுலர்களை எதிர்கொள்வது, நிதானம் காட்டுவது, சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடுவது என அனைத்திலும் கம்பீர் ஆசம். மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

2007 டி20 உலகக்கோப்பையிலும் சரி 2011 உலகக்கோப்பையிலும் சரி, இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதுகளை இர்ஃபானும் தோனியும் தான் வென்றனர். ஆனால் அந்தப் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங்கை நிலை நிறுத்தியவர் கம்பீர் தான். “75, 97 என இரு போட்டிகளிலும் இந்தியாவை நிலை நிறுத்தியது நான் தான்” என்று அனைவருக்கும் நினைவுபடுத்துகிறார் கம்பீர். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் 50க்கும் மேற்பட்ட ரன் எடுத்த அந்த கம்பீரை நாம் மறந்துவிட முடியுமா? 43 முறை டி20 போட்டிகளில் அரை சதம் கடந்து சதமே அடிக்காமல், அதிக அரை சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் கம்பீர். அதிக அரை சதங்கள் அடித்த கேப்டனும் (20) கம்பீர் தான். இப்படியொரு வீரர் இன்னும் எத்தனை காலங்கள் தான் ரஞ்சிப் போட்டிகளிலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் ஆடிக்கொண்டிருப்பது. வயது 34 ஆகிவிட்டது தான். நெஹ்ராவிற்கு ஒரு ரீ-என்ட்ரி கிடைக்கிறது என்றால் கம்பீருக்கு அப்படியொரு வாய்ப்பு தரக்கூடாதா?

புதிதாக ஒரு வீரரை நம்பும்போது, தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த ஒரே இந்தியரான கம்பீரை நம்பக்கூடாதா? இந்த ஐ.பி.எல் தொடரில் 2 போட்டிகளில், தவானோ 16 பந்துகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கொஞ்சம் கூட அவரது பேட்டிங் சொல்லிக்கொடும்படி இல்லை. இன்னும் எத்தனை காலம் தான் அவரை அணியில் வைத்துக் கொண்டிருப்பது? தற்போது இருக்கும் ஃபார்மை கம்பீர் தொடர்ந்தாயேராயானால் தவானின் இடம் கவுதிக்கு கண்டிப்பாக வழங்கப்படும். இந்திய அணிக்கான கதவு திறக்கப்படும். ஷேவாக் தான் இல்லை. அட்லீஸ்ட் ஷேவாக்கோடு கலக்கிய கம்பீராவது மீண்டும் அணிக்கு வருவாரா? பொருத்திருந்து பார்ப்போம்.

 

தனது 90 ரன் இன்னிங்சிற்காக கம்பீர் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதிக ரன் எடுத்தவர்கள் வைத்திருக்கும் ஆரஞ்சு கேப்பும் தற்சமயம் அவர் வசமே உள்ளது. சன்ரைசர்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோற்ற நிலையில், இரண்டாம் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது. மற்றொரு போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பை 143 ரன்கள் எடுக்க, 7 விக்கெட்டுகள் இழந்து கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது குஜராத். அவ்வணியின் ஃபின்ச், 67 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவரும் இத்தொடரில் இதுவரை 191 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலுள்ளார். லயன்ஸ் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது.

மு.பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ