Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுதான் ஐ.பி.எல் லின் சிறந்த டீம்... எப்படி?

முன்னெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் தவிர்த்து, வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் யாரென நமக்குத் தெரியாது. காரணம், அதிகம் அறியப்படாத வீரர்களே பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உருவெடுத்தனர். உதாரணமாக டன்கன் பிளட்சர் போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி வீரர்கள் அனைவருமே கோச்சிங் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்டி பிளவர், கிறிஸ்டன் எனத் தொடங்கி ஜெயவர்தனே வரை அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சர்வதேச அரங்கே இப்படியென்றால் ஐ.பி.எல் நிலைமையை சொல்லவே தேவையில்லை. முன்னாள் வீரர்கள், உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்திருக்கின்றனர். சச்சின், டிராவிட், பிளமிங் என பயிற்சியாளர்களாகி இருக்கும் இந்த பட்டாளத்தை வைத்தே ஒரு தொடர் ஆடலாம் போல.

இப்போதுள்ள அணிகளில் பெங்களூரு அணி பலமா இல்லை புனே பலமா? என்று ரசிகர்கள் தங்களது அணிகளை வைத்து போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றனர். சரி இந்த கோச் குரூப்பையெல்லாம் சேர்த்து ஒரு டீம் போட்டா எப்படி இருக்கும்? எல்லா பயிற்சியாளர்களையும் அலசி, அவர்களது தரம், திறமை ஆகியவற்றைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கினோம். பார்த்தால் எந்த ஐ.பி.எல் அணியை விடவும் இரண்டு மடங்கு மிகச்சிறந்த அணியாக இருக்கிறது அது. ஒரு சிலருக்கு வயது பிரச்னை இருந்தாலும், நம் கற்பனை அணிக்கு, அப்படி எந்த வரம்பும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் ஐ.பி.எல் அணிகளுக்கு இருக்கும் 4 வெளிநாட்டவர்கள் மட்டுமே என்ற விதியும் உடைக்கப்படுகிறது.

இதோ அந்த அபார லெவன்…

சச்சின் டெண்டுல்கர்

இவரை ஏன் எடுத்தோம்...எதற்காக எடுத்தோம்? பூஜை அறையில் சாமி படத்தை வைக்க காரணம் சொல்ல வேண்டுமா என்ன? ஒருநாள் டெஸ்டுகளில் மட்டுமல்ல, டி20 யிலும் தான் ஒரு ஜாம்பவான் என்பதை சச்சின் நிரூபித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 78 போட்டிகளில் ஆடிய சச்சின்,  தற்போது அவ்வணியின் ஆலோசகராக உள்ளார். 3வது ஐ.பி.எல் தொடரின் தொடர் நாயகன்தான் நம் அணியின் முதல் வீரர்.

ரிக்கி பான்டிங்

ஐ.பி.எல் மற்றும் டி20 போட்டிகளில் இவர் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் உலகத்தரம் வாய்ந்ததே. இந்தியாவுக்கு எதிரான 2003 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில்,  இவர் ஆடிய ஆட்டத்தை மறந்துவிட முடியுமா என்ன? அதுமட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த கேப்டனான இவரே,  இந்த ஜாம்பவான்களை வழிநடத்தவும் சரியான ஆள். மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரே இவ்வணியின் கேப்டனாக குட் சாய்ஸ்.

 

விரேந்திர சேவாக்

டெஸ்ட் போட்டிகளை இந்திய ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டியதற்கு மிக முக்கியக் காரணம் சேவாக்காகத் தான் இருக்க முடியும். டெஸ்ட் மேட்சையே டி20 மாதிரி ஆடுற இந்த மனுஷன எப்படி விட முடியும்? டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள சேவாக்,  ஐ.பி.எல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடிவந்தவர்,  தற்போது அவ்வணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். தனது டிரேட் மார்க் அதிரடியின் காரணமாக பிளமிங்கை முந்தி அணியில் இடம் பிடிக்கிறார் வீரு!

ஜாக் காலிஸ்

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான காலிஸ், ஐ.பி.எல் தொடரிலும் தனது பலத்தை நிரூபித்தார். பெங்களூர் அணிக்காக பெரிய அளவில் சோபிக்காவிடிலும்,  நைட் ரைடர்ஸ் இரு கோப்பை வாங்க உறுதுணையாய் இருந்தார். தற்போது அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுள்ளார் காலிஸ்.


ராகுல் டிராவிட்

டி20 அணியில் டிராவிட்டா? ஆச்சர்யம் வேண்டாம். நீங்கள் ஆச்சர்யப்பட்டீர்களேயானால்,  நியூசி அணிக்கெதிராக வெறும் 22 பந்துகளில் அரை சதம் அடித்த சூறாவளி சுவரை நீங்கள் அறியவில்லை என்றே அர்த்தம். ராஜஸ்தான் அணியில் இளம் வீரர்களை வளர்த்து விட்டு,  இப்போது அதே வேலையை டெல்லி அணிக்காக செய்துகொண்டிருக்கிறார். இவ்வணிக்கு விக்கெட் கீப்பிங் பணியும் இவருக்கே.


பிராட் ஹாட்ஜ்

குஜராத் லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் இல்லாவிட்டால் இவ்வணி முழுமை அடையாது. டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் இவருக்கு முன் இருப்பவர் கெயில் மட்டுமே. மிடில் ஆர்டரில் வந்து, சிங்கிள் மேனாக மேட்சை மாற்றும் வல்லமை படைத்த ஹாட்ஜ் என்றுமே டி20 ஸ்பெஷலிஸ்ட் தான்.

டேனியல் வெட்டோரி

உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவரான வெட்டோரி, பெங்களூர் அணியின் கோப்பைக் கனவை நனவாக்கப் போராடிக்கொண்டிருக்கிறார். பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடிய வெட்டோரி, குஜராத அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரீக்கை விடவும் நல்ல ஆப்ஷனாக தெரிகிறார்.


வாசிம் அக்ரம்

ஒருநாள் போட்டிகளில் எவராலும் தொட முடியாத 502 விக்கெட்டுகள் என்ற சாதனையின் சொந்தக்காரர். நீண்ட காலமாக நைட் ரைடர்சின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர்,  விளையாடி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் தனது டிரேட் மார்க் ரிவர்ஸ் ஸ்விங்கால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடும்.

ஷேன் பான்ட்

ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் சாதிக்காவிட்டலும், இன்று மும்பை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். 150 கி.மீ வேகத்தில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் இவர்,  இந்திய ஆடுகளங்களிலும் பவுன்சர்களை அள்ளி வீசக்கூடியவர்.முத்தையா முரளிதரன்

சென்னை, பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ள இந்த 1000 விக்கெட் ஜாம்பவான்,  தற்போது இருப்பது சன்ரைசர்சின் பவுலிங் கோச்சாக. வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைந்த சன்ரைசர்ஸ் அணியை இந்த சுழற்பந்து வீச்சாளர் எப்படி பயிற்றுவிப்பார்? பந்து எப்படி வீசப்படுகிறது என்பது முக்கியமல்ல. எங்கு வீசப்படுகிறது என்பதே முக்கியம். அதை இவரை விட இன்னொருவர் நன்கு அறிந்திருக்க முடியுமா என்ன?

ஆலன் டொனால்டு

ராயல் சேலஞ்சர்சின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான டொனால்டின் திறமை,  உலகம் அறிந்ததே. தென்னாப்பிரிக்க அணிக்காக கோப்பை வெல்ல முடியாத இவர்,  இன்னும் அதே நிலையைதான் அனுபவித்துக் கொண்டுள்ளார். இவரது ஸ்விங்குகளுக்கு பேட்ஸ்மேன்கள் இன்னும் பதில் சொல்லக் கஷ்டப்படுவார்கள்.

இவர்கள் மட்டுமல்ல சைமன் கேடிச், ஜான்டி ரோட்ஸ், பிளமிங், ஹீத் ஸ்டிரீக், லக்ஷ்மண் போன்றோரும் தலைசிறந்த அவ்வணியில் இடம்பிடிக்கத் தகுதியான தலைசிறந்த வீரர்களே ஆவர். அதிலும் குறிப்பாக மற்ற அணிகளை விட மும்பை அணியின் கோச்சிங் டீம்தான் உச்சகட்டம். சச்சின், பான்டிங், ராபின் சிங், ரோட்ஸ் என உச்ச நட்சத்திரங்கள் அணிவகுக்கின்றன.
 
இவர்கள் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்பதன் மூலம், அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அதிக பாடம் கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்களின் அனுபவம் நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுக்கும். இவர்கள் மட்டுமல்லாமல், முன்னணி வீரர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார்கள்.

பின்னாட்களில் வெறுமனே கமென்டரி பாக்சில் அமர்ந்துகொண்டு பேசாமல்,  வீரர்களின் திறமைகளை மெருகேற்றும் துரோணர்களாக உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். 

-மு.பிரதீப் கிருஷ்ணா

( மாணவர் பத்திரிகையாளர்)
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ