Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்?

தாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி.

இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான்.

மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர்கள் வசம். போன மாதம் வரை தொடர்ந்து 39 போட்டிகளில் தோற்காமல் சரித்திரம் படைத்து வந்த அவ்வணி,  தற்போது 3 லாலிகா போட்டிகளில் தொடர்ந்து மண்ணைக் கவ்வியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிளப் போட்டிகளில் மிகவும் பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்தும் கடந்த வாரம் வெளியேறியதால் கால்பந்து உலகமே உறைந்துபோயுள்ளது.

மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் என உலகின் மிகவும் ஆபத்தான முன்கள வீரர்கள் இணைந்து அனைத்து அணிகளையும் பந்தாடி வந்தனர். கடந்த ஆண்டு வென்ற ஐந்து கோப்பைகளையும், பார்கா அணி தக்கவைத்துக்கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எல்லாம் போன மாசத்தோடு மாறிவிட்டது. லா லிகா தொடரில் 13 புள்ளிகள் முன்னணியோடு வீறுநடை போட்டுக்கொண்டிருந்த அவ்வணி,  தற்போது தனது 13 புள்ளிகள் முன்னிலையை முற்றிலும் சரண்டர் செய்துள்ளது. அதிலும் கடந்த மூன்று போட்டிகளிலும் தோற்று,  மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

எல்லாம் பரம வைரியான ரியல் மாட்ரிட்டிடம் தொடங்கியது. மிகமுக்கியமான எல் கிளாசிகோ போட்டியில் 10 பேர் மட்டுமே கொண்ட ரியல் அணியிடம் 2-1 என வீழ்ந்தது. வில்லேரல் அணிக்கெதிரான அதற்கு முந்தைய போட்டியிலேயே இறுதிக்கட்ட சொதப்பலால் 2-2 என டிரா கண்டது. அதன்பிறகு சாம்பியன்ஸ் லீக் தொடரில் அத்லெடிகோ அணி,  ஒரு வீரர் குறைவாக ஆடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியை 2-1 என்ற கணக்கில் போராடியே வென்றது. அதன்பின்னர் சுமாரான ரியல் சோசிடாட் அணியிடம் 1-0 என வீழ்ந்தது.

அத்லெடிகோவுடனான சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் இரண்டாம் சுற்றில்,  2-0 எனத் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. அதுவரை தோற்காமல் ஆடி வந்த அவ்வணி, மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அத்லெடிகோவிடம் தோற்று,  காலிறுதியோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தொடரின் ஆரம்பத்திலிருந்து சொதப்பி வந்த வெலன்சியா அணியிடம் நேற்று 2-1 என தோற்று,  தனது மோசமான ஃபார்மை தொடர்ந்து வருகிறது இந்த ஜாம்பவான்களின் அணி.


இந்தத் தோல்விகளுக்கு என்னதான் காரணம்? ஒரு மாத காலத்தில் இப்படி மொத்தமாக மண்ணைக் கவ்வுவது எதனால்? யாராலும் அதற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது. வெலன்சியாவுக்கு எதிரான போட்டியில் எத்தனையோ வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவையெல்லாம் கோலுக்குள்தான் செல்லவில்லை. லா லிகா தொடரில் 70 கோல்கள் அடித்துள்ள எம்.எஸ்.என் கூட்டணி,  இப்படித் தடுமாறுவதை யாராலும் நம்ப முடியவில்லை. அதிலும் குறிப்பாக வெலென்சியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 500-வது கோலை அடித்த மெஸ்ஸி,  அதற்கு முன்பு நடந்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட கோலடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமல்ல, முன்னணி வீரர்கள் இனியஸ்டா, நெய்மார், சுவாரஸ் ஆகியோரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தலைசிறந்த 11 வீரர்களைக் கொண்டிருந்தாலும், சரியான மாற்று வீரர்கள் இல்லாதது அவ்வணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்தக் காரணத்தால் விளையாடியே வீரர்களே தொடர்ந்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் வீரர்கள் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்துவிடுகின்றனர். பிற அணிகளில் இருக்கும் வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்களாக இருப்பர். ஆனால் இவ்வணியில் அனைவரும் நட்சத்திர வீரர்களாக இருப்பதால்,  உலகக்கோப்பை தகுதிச் சுற்று, ஐரோப்பா லீக் தகுதிச் சுற்று என அனைத்திலும் அவர்கள் பங்கேற்க வேண்டியிருப்பதால், அவர்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடிவதில்லை.

ஏற்கனவே அணியிலிருந்த ஃபேப்ரகாஸ், பெட்ரோ, சான்செஸ் போன்ற வீரர்கள் பலரை விற்று நெய்மார், சுவாரஸ் போன்ற ஒருசில வீரர்களில் முதலீடு செய்தது பார்சிலோனா அணி. அது ஆரம்பத்தில் நல்ல பலன் கொடுத்தது. ஆனால் சைட் எஃபெக்ட் எல்லாம் இப்போதுதான் தெரிகிறது. இந்த சீசனில் அவர்கள் வாங்கிய அலெக்ஸ் விடால், ஆர்டா டுரான் போன்றோர் பெரிதாக சோபிக்காத்தால், முன்னணி வீரர்களே 90 நிமிடமும் விளையாட வேண்டி இருக்கிறது. இத்தருணத்தில்தான் ஃபேப்ரகாஸ், சான்செஸ் போன்ற அற்புத வீரர்களை பார்கா மிஸ் செய்கிறது.

யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு பார்சிலோனை விட மிகப்பெரிய உதாரணம் தேவையில்லை. வெறும் 11 பேரால் மட்டுமே அணியை கரை சேர்த்து விட முடியாது. எளிதில் அடிபடும் கால்பந்து போன்ற கடினமான விளையாட்டில் மாற்று வீரர் உட்பட அனைவரும் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.

இனிமேலாவது பல மில்லியன் டாலர்களை ஒரே ஒரு வீரருக்காக செலவிடுவதற்கு முன் பார்சிலோனா அணி சற்றேனும் யோசிக்க வேண்டும். அதற்கான அலாரம் தற்போது அடிக்கப்பட்டு விட்டது.

பார்சிலோனா இரண்டானால் மாட்ரிட்டுக்குதானே கொண்டாட்டம்!

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close