Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக லெவன் பேட்டிங்... உளுத்துப்போன பவுலிங்... கரை சேருமா ஆர்.சி.பி?

ட்டுமொத்த இந்தியாவிலேயும் அதிக ரசிகர்கள் கொண்டிருந்த ஒரு ஐ.பி.எல் அணி என்றால் அது சி.எஸ்.கே தான். தோனி, ரெய்னா, பிராவோ போன்ற வீரர்களெல்லாம் சி.எஸ்.கே வெளியேற்றத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணியாகச் சென்றுவிட்ட நிலையில், இப்போ ஐ.பி.எல் லின் மோஸ்ட் ஃபெமிலியர் டீம் எது தெரியுமா? சந்தேகமா வேண்டாம் ஆர்.சி.பி தான்.

இதற்குக் காரணம் உலகின் அனைத்து பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் விராத் கோலி மட்டுமல்ல, சூறாவளி கிறிஸ் கெயில், அதிரடி வாட்சன், ஆக்ரோஷ ஸ்டார்க், இவையனைத்தையும் தாண்டி, ‘ஏண்டா இவன் நம்ம நாட்ல பொறக்கல’ என அனைவரையும் ஏங்க வைக்கும் ஏ.பி.டிவில்லியர்ஸ் என சற்றும் குறைவில்லாத இந்த நட்சத்திரப் பட்டாளம்தான் காரணம்.

எல்லாம் சரி, ஆனாலும் இன்னும் கோப்பையைக் கைப்பற்ற முடியலயே என்று கேட்டால், அவ்வணி ரசிகர்கள் சொல்லும் பதில், “ஏற்கனவே நாங்க அப்படி. இப்போ வாட்சன் வேற இருக்காப்ல. கப் எங்களுக்குத்தான்” என்பதுதான்.

கோப்பையை வெல்வதற்குத் தகுதியான அணிதானா ஆர்.சி.பி?

ஆர்.சி.பி யை பொறுத்தவரை எல்லாமே இருக்குற மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது ஒன்று இருக்காது. முதல் மூன்று சீசன்ல அதிரடி ஆட்டக்காரர் இல்ல. அப்புறம் கெயிலும் ஏ.பி யும் வந்தாங்க. வேகப்பந்து வீச்சு அட்ரஸ் இல்லாம இருந்துச்சு. ஜாகிர், ஸ்டார்க் லாம் இருந்தப்போ. நல்ல ஆல் ரவுண்டரும் மிடில் ஆர்டரும் இல்லாம இருந்துச்சு. இப்ப எல்லாம் செட் ஆன நேரத்துல, மறுபடியும் பவுலிங் படு கேவலமாகி நிக்குது. டாப் பவுலர்களான ஸ்டார்க், பத்ரி இருவரும் காயத்தால் அவதிப்பட, ஆரோன், சஹால், ஹர்ஷல், அபு நெகிம், அப்துல்லா என அனுபவமே இல்லாத இந்த வீரர்கள்தான் இப்போதைய ஆர்.சி.பி யின் பவுலிங் யூனிட். இவர்கள்தான் அணியின் மிகப்பெரிய வீக் பாயின்ட்.

எந்த அணிக்கும் கிடைத்திடாத ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ராயல் சேலஞ்சர்சுக்கு அமைந்துள்ளது. கோலி, கெயில் என கிளாஸ் + மாஸ் கூட்டணியோடு தொடங்கி, 360 டிகிரி மன்னன் டிவில்லியர்ஸ் வழியாக நீள்கிறது அவ்வணியின் அசாத்திய பேட்டிங் படை. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸியின் அதிரடி ஆல்ரவுண்டர் வாட்சன், பிக் பேஷில் சதமடித்துள்ள இளம் நம்பிக்கை நட்சத்திரம் ட்ராவிஸ் ஹெட் போன்றோர் அசுர பலம். அட என்னப்பா நாங்கெள்ளாம் அதுக்கும் மேல என கடைசி கட்டத்தில் சுனாமியாய் சீறும் ‘சோட்டா பீம்’ சர்ஃபராஸ், ரஞ்சி நாயகர்கள் கேதர் ஜாதவ், மன்தீப் என இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது பேட்டிங் டிப்பார்ட்மென்ட்.

பார்த்தா ஐ.சி.சி வெளியிடுகிற உலக லெவன் அணியோட பேட்டிங் ஆர்டர் மாதிரிதான் இருக்கு ஆர்.சி.பி யோட பேட்டிங். ஒவ்வொரு போட்டியின் போதும் எதிரணி கேப்டனின் இலக்கு இவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதாகும். முதலில் பேட் செய்தால் இவர்களுக்கு என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பது எதிரணிக்கு தண்ணி பட்டபாடுதான். டெல்லிக்கு எதிரான போட்டியின்போது, “விராட்டை சேஸிங்கில் கட்டுப்படுத்துவது கடினம். எனவே முதலில் பவுலிங் செய்கிறோம்” என்று ஓப்பனாகவே சொன்னார். முதலிரண்டு போட்டியில் கெயில் சோபிக்கவில்லை. ஆனால் கோலி, ஏ.பி, வாட்டோ, சர்ஃபராஸ் என அனைவரும் பொளந்து கட்டினர். மும்பைக்கு எதிராக அனைவரும் சொதப்ப,  சர்ஃபராசும் ஹெட்டும் அணியை நிலை நிறுத்தினர். அதுதான் ஆர்.சி.பி-யின் பலம்.

எல்லாம் சரி. 190 அடிச்சும் தோக்குது, 170 அடிச்சும் தோக்குது. என்னதான்பா பிரச்சனை? அந்தப் பாழாய்ப்போன பவுலிங் யூனிட்தான். ஸ்டார்க்கும் இல்ல, பத்ரியும் இல்ல. யாரைத்தான் பயன்படுத்துறது? இந்தக் கேள்விக்கான பதில் வெட்டோரிக்கும் டொனால்டுக்குமே இல்ல போல. மூன்று போட்டிகளில் மொத்தம் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியுள்ளது அவ்வணி. தகுதியான ஸ்பின்னரும் இல்லை. தரமான வேகப்பந்துவீச்சாளரும் இல்லை. இந்திய அணிக்காக விளையாடிய ஒரே பவுலர் ஆரோன் மட்டுமே என்பதுதான் கவலையான விஷயம். மற்றவர்களெல்லாம் ரஞ்சியில் கூட சிறப்பாய் செயல்படாதவர்கள். தனது முதல் தொடரில் சிறப்பாய் செயல்பட்ட சஹால், பின்னர் சிக்சர்களாக வாரி வழங்கத் தொடங்கிவிட்டார். ரசூலிடமோ, இக்பால் அப்துல்லாவிடமோ ‘கன்சிஸ்டென்சி’ சுத்தமாக இல்லை. மில்னே, ரிச்சர்ட்சன் போன்றோரும் அவ்வளவாக சோப்பிக்கத் தவறுகின்றனர். மும்பைக்கு எதிராக முதலிரண்டு ஓவர்களை நன்றாக வீசிய ரிச்சர்ட்சனும் ஆரோனும் அடுத்த ஓவர்களில் சிக்சர்களை வாரி வழங்கினர்.

மொத்த அணியும் சார்ந்திருக்கும் ஒரே பவுலர் ஷேன் வாட்சன். முதலிரண்டு போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி, சிக்கனமாகவும் பந்து வீசிய அவரும் கூட மும்பை இந்தியன்சிடம் காலை வாரி விட்டார். இப்படி உள்ளூர் அணியை விட மோசமான பவுலிங்கை வைத்து என்னதான் செய்வது? எவ்வளவு ரன்கள் குவித்தாலும் அதைக் காப்பதென்பது அரிது. இன்னும் யாரை எப்போது பயன்படுத்துவதென்ற டெசிஷன்,  அணி நிர்வாகத்திற்கே பெரும் தலை வலியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை பத்ரி வந்த பிறகு பந்துவீச்சு சற்று முன்னேற்றம் காணலாம். ஆனால் மீதமுள்ள 16 ஓவர்கள்? சரியான காம்பினேஷனை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அவசியம்.

கெயில் தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சீசனில் ஒரு போட்டியில் நன்றாக ஆடுவதற்காக அவரை 14 போட்டிகளிலும் வைத்துக்கொண்டிருப்பது பெரும் முட்டாள்தனம். அவர் அணியில் இருப்பதால் சிங்கிள், டபுள்ஸ் எடுப்பதிலும் ஃபீல்டிங்கிலும் சற்று பின்னடைவுதான். அவர் ஒழுங்காய் ஆடாவிட்டாலும் அணி சிறப்பாய் செயல்படும் என்பது முதலிரண்டு போட்டிகளிலேயே தெரிந்தது. போன சீசனில் சில போட்டிகளில் மன்தீப் தனியாளாக வெற்றி தேடித்தந்தார். எனவே கெயிலுக்குப் பதிலாக அவரை களமிறக்கிவிட்டு, இரண்டு வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்குவதுதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற நீண்ட நாள் கனவை நனவாக்க ஒரே வழி.

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் 170 ரன்கள் எடுத்தாலும், 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ஆர்.சி.பி. இத்தோல்வியின் மூலம் மூன்று போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது அவ்வணி.

தங்கள் நீண்ட நாள் பிரச்னையான பவுலிங் கோளாறை இனிவரும் போட்டிகளிலாவது  ஆர்.சி.பி சரி செய்தால்தான்,  கோலியின் கையில் கோப்பை ஏறும்.

- மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close