Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிளாடியோ ரனேரி... சொல்லி அடித்த கில்லி! - லெய்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக்கதை

 ம் அணியின் இன்றைய தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். நமது அணிக்கு அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் ஒரு பயிற்சியாளரை நியமித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சுமார் இரண்டு ஆண்டுகள் முன்னர் கூறினார் கிரீஸ் கால்பந்துக் கழகத் தலைவர் ஜியார்கோஸ் சர்ரிஸ். கால்பந்து தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஃபரோ ஐலாண்டு அணியிடம்,  2004 ல் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸ் தோற்ற பிறகு அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். மொத்த கால்பந்து உலகமும் அதை ஆமோதித்தது.
 

ஆனால் சரியாக 18 மாதங்கள் கழித்து, அன்று கிரீஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அதே பயிற்சியாளர்தான் இன்று மொத்த கால்பந்து உலகத்தாலும் மெச்சப்படுகிறார். ஒட்டுமொத்த பத்திரிகை உலகும் அவரைத் தான் தினமும் பாராட்டி தள்ளுகிறது. அவரை இகழ்ந்து பேசியவர்களெல்லாம் தங்களுக்கு முதலில் கால்பந்தை பற்றித் தெரியுமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்தான் புகழ்பெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் புதிய சாம்பியன், லெய்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் கிளாடியோ ரனேரி.
 

ஒவ்வொரு பிரீமியர் லீக் தொடர் முடிந்ததும்,  கடைசி மூன்று இடங்கள் பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்பட்டு,  புதிய அணிகள் புரோமஷன் அடையும். கடந்த சீசனில் கடைசி 9 போட்டிகளில் 7ல் வென்று நூலிழையில் தப்பி பிழைத்தது லெய்செஸ்டர் அணி. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக,  பயிற்சியாளர் நைஜல் பியர்சன் நீக்கப்பட்டு,  ரனேரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அடுத்த கணமே கருத்துக்கணிப்புகள் எல்லாம் லெய்செஸ்டர் அணிக்குப் பாதகமாகத் திரும்புகின்றன. பிரீமியர் லீக் தொடரும் தொடங்குகிறது. நடப்பதையெல்லாம் ஆச்சர்யத்தோடு பார்ப்பதா இல்லை அதிர்ச்சியோடு பார்ப்பதா என்று கால்பந்து ரசிகனுக்குத் தெரியவில்லை. கத்துக்குட்டி அணியான லெய்செஸ்டர், அனைவரும் வெளியேறும் என்று எதிர்பார்த்த லெய்செஸ்டர், மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, செல்சி போன்ற அணிகளையெல்லாம் சுருட்டி வீசி புள்ளிப் பட்டியலில் முன்னேறுகிறது. மொத்த உலகமும் அதை வாயடைத்துப் பார்க்கிறது.
   

இதெல்லாம் கொஞ்ச காலம்தான். போகப்போக அவர்களின் ஆட்டம் அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால், கடிவாளம் கழற்றிய குதிரையைப் போல சீறிப் பாயத் தொடங்கிவிட்டனர் லெய்செஸ்டர் வீரர்கள். கோல்கள் பறக்கின்றன, வெற்றிகள் குவிகின்றன. “40 புள்ளிகள்தான் எங்கள் இலக்கு. ரிலகேஷனிலிருந்து தப்பித்தாலே போதும்”, “சாம்பியன்ஸ் லீக் இன்னும் உறுதியில்லை. அதை உறுதி செய்யப் போராடுவோம்”, “கோப்பையை வெல்ல ஆறு அணிகளுக்கு இன்னும் வாய்ப்புள்ளது” என்று தங்களின் அணி ஒவ்வொரு கட்டமாய் முன்னேறிய போதும் அடக்கியே வாசித்தார் ரனேரி. “எங்களுக்குக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது” என்று ஒருமுறை கூட அவர் சொல்லவில்லை. தங்கள் அணி வீரர்கள் வெற்றியால் அந்தரத்தில் பறந்துவிடக் கூடாது என்பதில் ரனேரி கவனமாக இருந்தார். கடைசியில் அந்தக் கோப்பையை வென்று, விளையாட்டு உலகின் மிகவும் அதிர்ச்சிகரமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது லெய்செஸ்டர் சிட்டி அணி. இன்று மொத்த கால்பந்து உலகமும் உரைக்கும் இரு பெயர்கள், ‘லெய்செஸ்டர்’, ‘ரனேரி’.


இவ்வாண்டின் சிறந்த வீரர் விருதினை வென்ற ரியாட் மஹரஸ், பத்திரிகையாளர்களால் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேமி வார்டி, அவ்விரு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்த கான்டே – இந்த மும்மூர்த்திகள்தான் அவ்வணியின் இந்த அசாத்திய சாதனைக்கு மிகப்பெரிய காரணம். ஆனால் அதையெல்லாம் தாண்டி இவர்களின் திறனை முழுமையாய் வெளிக்கொண்டு வந்ததில், ஒரு அணியாய் அவர்களை ஒன்று திரட்டியதில், வீரர்களுக்குள் ஒரு தீயை மூட்டி, அது கடைசி வரை அணையாமல் பார்த்துக் கொண்டதில் ரனேரியின் பங்கு ஆசம்.
   

உண்மையைச் சொல்லப்போனால் அவர் ஒன்றும் மோசமான பயிற்சியாளர் அல்ல. புகழ்பெற்ற செல்சி, ஜுவன்டஸ் போன்ற அணிகளை இதற்கு முன் வழிநடத்தியுள்ளார். அவ்வணிகளை இரண்டாம் இடம் வரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கோப்பைதான் அவர் வசம் வரவில்லை. ஏனோ காலத்தின் விளையாட்டால் கிரீஸ் அணி சொதப்ப, அவருக்கு அவ்வளவு அவப்பெயர்கள். ஆனால் கால்பந்து உலகம் அவரை குறைகூற இன்னொரு காரணமும் இருந்தது. இவர் ஒவ்வொரு போட்டிக்கும் அணியின் பிளான் முதற்கொண்டு வீரர்களையும், விளையாடும் முறையையும் மாற்றிக் கொண்டே இருப்பார். அதனால் அவரை ‘டிங்கர் மேன்’ என்றே அழைப்பார்கள். எளிதாக சொல்ல வேண்டுமானால் நம்ம ஆர்.சி.பி கேப்டன் விராத் கோஹ்லி மாதிரி. மேட்சுக்கு மேட்ச் மூணு, நாலு மாற்றங்கள் இருக்கும். பொதுவாக கால்பந்தில் இது அணியின் கெமிஸ்ட்ரியைக் கெடுத்துவிடும். ஆனால் இம்முறை ரனேரி தன்னை சரி செய்து கொண்டார். நம்ம கேப்டன் கூல் தோனியைப் போல வின்னிங் காம்பினேஷனையே தொடர்ந்தார்.
   

ஆனால் அவர் வீரர்களை அணுகிய விதம்தான் மொத்த மாற்றத்திற்கும் காரணம். தங்கள் அணியின் தாக்குதல் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், தடுப்பாட்டக்காரர்கள் தொடக்கத்தில் சொதப்பினர். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக இரண்டு கோல்கள் விட்டனர். அதைத் தடுக்க ரனேரி கூறியது இதுதான், “ஒரு போட்டியில் எதிரணியை கோலடிக்காமல் தடுத்தீர்களேயானால், ஆட்டம் முடிந்ததும் உங்களுக்காக நான் பீட்சா ஆர்டர் செய்வேன்”. பீட்சா ஒரு விஷயம் அல்ல. ஆனால் ஒரு பயிற்சியாளர் தன் வீரர்களை எப்படி அணுகுகிறார் என்பதே முக்கியம். அதன் விளைவு 15 போட்டிகளில் லெய்செஸ்டர் வீரர்கள்,  எதிரணியை கோல் போட விடாமல் தடுத்துள்ளனர். அதே போல், தொடர்ந்து போட்டிகள் வரும் கிறிஸ்துமஸ் சமயம், “4 போட்டிகளில் 10 புள்ளிகள் எடுத்தால் உங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை” என்று அறிவித்தார். அவ்வணி 9 புள்ளிகளே எடுத்த போதும் வீரர்களுக்கு பயிற்சியிலிருந்து விடுப்பளித்தார். கால்பந்து பயிற்சியாளர்கள் நம்ம ஊர் கணக்கு டீச்சர்களை விடக் கறாரானவர்கள். ட்ரில் வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு தாய் மகனிடம்,  “நல்லா படிடா சாக்லேட் வாங்கித் தர்றேன்” என்று சொல்லும் அணுகுமுறையே வேறு. அப்படிப்பட்ட அணுகுமுறைதான் ரனேரியை இன்று உலகமே பாராட்ட வைத்துள்ளது. இவரை ‘டிங்கர் மேன்’ என்று பழித்தவர்களெல்லாம் இப்போது ‘ ரனேரி ஒரு திங்க்கர் மேன்’ என்று புகழ்கிறார்கள்.


இந்த வெற்றிக்குப் பின்னர் வார்டி, மஹரஸ் போன்ற வீரர்களை பெரிய அணிகளெல்லாம் விலைக்கு வாங்கத் துடிக்கின்றன. அதிக சம்பளத்தில் விளையாட அவர்களும் ஆசைப்படுகின்றனர். எந்தப் பயிற்சியாளரும் தனது ஆஸ்தான வீரர்களை விட விரும்பமாட்டார்கள். ஆனால் ரனேரி அப்படியல்ல.

“என் அணிக்கு நட்சத்திரங்கள் தேவையில்லை. நான் அவர்களை உருவாக்குவேன். யார் வேண்டுமானாலும் அணியை விட்டு வெளியேறலாம்” என்பதே அவரது நிலைப்பாடு. இல்லையென்றால் வெறும் 28 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு அணியை வைத்துக்கொண்டு 309 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மான்செஸ்டர் சிட்டி போன்ற அணியைப் பந்தாட முடியுமா? அதற்காக ரனேரி,  ஆணவம் கொண்டவரென நினைத்துவிட வேண்டாம். கடந்த 3ம் தேதி நடைபெற்ற செல்சி - டாட்டன்ஹாம் அணிகளுக்கு எதிரான போட்டியில், இரண்டாம் இடத்திலிருந்த டாட்டன்ஹாம் அணி வெல்லாவிடில் லெய்செஸ்டர் மகுடம் சூடும் நிலை. வேறு யாராக இருந்தாலும் அப்போட்டியைக் காண மைதானத்திற்குப் போயிருப்பார்கள். அல்லது வீட்டிலாவது நகத்தைக் கடித்துக் கொண்டு பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த மனிதன் இத்தாலியிலிருக்கும் தனது 96 வயது தாயைப் பார்க்கக் கிளம்பி விட்டார். இரண்டு போட்டிகள் இருக்கும்போதே கோப்பையை வென்று விட்ட போதும், “எவர்டன் அணிக்கெதிரான அடுத்த போட்டியின் போது, கோப்பை வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் மோசமாக ஆடினால், என் வீரர்களை அடித்தே கொன்று விடுவேன்” என்று சிரிக்கிறார் ரனேரி. “ரசிகர்களுக்காக விளையாடுவதுதான் நம் இலக்கு“ என்பதே அவரின் தாரக மந்திரம்.
   

சர் அலெக்ஸ் பெர்குசன், ஜோஸ் மொரின்ஹோ போன்ற உலகின் முன்னணி பயிற்சியாளர்கள் அனைவரும் ரனேரியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஒருவனை உலகம் எப்படி வேண்டுமானாலும் இகழலாம். அவன் திறமையின் மீது சந்தேகம் கொள்ளலாம். ஆனால் அவனுக்குள் இருக்கும் லட்சியத் தீ எரிந்துகொண்டிருக்கும் வரையில் அவனை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு உதாரணம் கிளாடியோ ரனேரி. ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் இவரைப் பார்த்து, ‘பலமுறை உங்கள் அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உங்களால் முதலிடத்தை அடைய முடியாதா?’ எனக் கேட்க, ரனேரியோ “நான் ஒன்றும் இரண்டாம் இடத்திற்காக விளையாடுபவன் அல்ல. திறமையானவர்கள் எப்போதும் இரண்டாவதாகவே வரமாட்டார்கள். ஒருநாள் கோப்பையை என் கைகளில் ஏந்துவேன்” என்று கூறியிருந்தார்.

அந்த நம்பிக்கை தான் தனது 28 ஆண்டு கால பயிற்சியாளர் வாழ்க்கையில் முதல் முத்தை லெய்செஸ்டர் அணியின் வாயிலாகப் பெற்றுத் தந்திருக்கிறது.

வாழ்த்துகள் ரனேரி!

- மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close