Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடுகளத்தில் அசத்திய 'அம்மா'க்கள்!

தாய்மை ஒரு வரம். பிரசவம் வலி தரும் தான். ஆனால், தாய்மை வலி தராது. அது ஒரு எல்லையில்லா பேரின்பம். தாய்மை தரும் உடல் வலிமையும், மன வலிமையும் வேறு எதுவும் தர முடியாது. அதனால் ஏற்படும் மெச்சூரிட்டி எந்த வகை பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தரும். பிள்ளைப்பேறு அடைந்த பிறகு தங்கள் வேலைகளை விட்டவர்கள் எத்தனையோ பேர். குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தங்கள் லட்சியத்தையும், வெறியையும் விட்டவர்கள் எத்தனையோ பேர். ஆனால் ‘தாய்மை எதற்கும் தடை இல்லை’ என்பதை நிரூபித்த பெண்களும் உள்ளனர். சினிமா, விளையாட்டு, வணிகம் என எத்தனையோ துறைகளில் சாதித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களுள் விளையாட்டுத் துறையில் சாதித்த ஒரு சில அம்மாக்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மேரி கோம் (குத்துச் சண்டை)

வசதிகள் அதிகம் இல்லாத மணிப்பூர் மாநிலத்தில் பிறந்து, குடும்பத் தடைகள் எல்லாம் மீறி ஐந்து முறை உலக அமெச்சூர் பாக்சிங் பட்டம் வென்ற இந்த இரும்புப் பெண், ஒரு இரும்புத் தாயும் கூட. 3 குழந்தைகளுக்கு அம்மாவான இவர், உடல் பலம் அதிகம் தேவைப்படும் பாக்சிங்கில் சற்றும் மனம் தளராமல் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். 2012 ஒலிம்பிக்கில் மேரி வெண்கலம் வென்றது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், பயிற்சியாளரே இல்லாமல் அவர் சண்டையிட்டது நம்மில் பலருக்குத் தெரியாது. ‘அன்பிரேக்கபிள்’ எனப்படும் தனது சுயசரிதையில், தனது உடல் நலம் குறைந்த குழந்தையை இந்தியாவில் விட்டுவிட்டு தான் உலக சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் வலியோடும், வேதனையோடும் பங்கேற்றதாகக் கூறுயுள்ளார். லட்சிய வெறியும், தாய்மையின் வலியும் இணையும் அவ்விடம் நம்மையும் கண்கலங்க வைக்கும். தற்போது ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ள மேரி 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற போராடி வருகிறார். அவரது வெற்றி ஒட்டுமொத்த தாய்மார்களுக்குமான வெற்றி.

டேன் சாரா (சைக்கிளிங் & ஸ்விம்மிங்)

பிறக்கும்போதே தொப்புள் கொடியில் இடது கை சிக்கிக்கொண்டு செயலிழந்தது. ஆனால், எந்த தடையும் அவருக்குத் தடையாய் இருக்கவில்லை. பாரா நீச்சல் போட்டியிலும், சைக்கிள் பந்தயத்திலும் 27 முறை பட்டம் வென்றுள்ளார். 2013-ம் ஆண்டு குழந்தை பெற்றெடுத்த சாரா, அடுத்த ஆறே வாரங்களில் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 1992-ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் நீச்சலில் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சாரா, 2012-ம் ஆண்டு சைக்கிள் பந்தயத்தில் 4 தங்கங்கள் வென்றார். தாய்மை எப்பொழுதும் அவருக்குத் தடையாய் இருந்ததில்லை.

கிம் கிளிஸ்டர்ஸ் (டென்னிஸ்)

டென்னிஸ் வரலாற்றிலேயே விம்பிள்டன் வென்ற முதல் அம்மா, இந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த கிளிஸ்டர்ஸ் தான். 2008-ம் ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு பெற்ற கிளிஸ்டர்ஸ் மகளைப் பெற்ற பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஏதோ வருவார், விளையாடுவார், போவார் என்று எதிர்பார்த்த போது, டென்னிஸ் உலகின் ஃபீமேல் ஸ்டார் செரினாவைப் போட்டுத்தள்ளி அதிர்ச்சியளித்தார் கிளிஸ்டர்ஸ். அதோடு மட்டும் நிற்காமல் அவ்வாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்று சரித்திரம் படைத்தார் கிம். கோப்பையை ஒரு கையிலும், குழந்தையை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு கிம் கொடுத்த போஸ், மொத்த தாய்மார்களையும் நெகிழ வைத்தது.

ஷெல்லி ரூட்மேன் (பனிச்சறுக்கு)

“நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை என் மகள் கேலரியில் இருந்து பார்த்தாள் எப்படி இருக்கும்? அதுவொரு அற்புத அனுபவம்” என்று தாய்மையை அனுவனுவாக அனுபவிக்கிறார் ரூட்மேன். இரண்டு குழந்தைகளின் தாயான ரூட்மேன், 2007-ம் ஆண்டு தனது மகள் எல்லா பிறந்த அடுத்த மூன்றாவது மாதமே பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டார். தாய்மையை அவர் ஒரு பாரமாகக் கருதவில்லை. அதையொரு வரமாகவே கருதினார். அதன்பிறகு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற ஸ்கெலிடன் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டின் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கமும், 2011-ல் தங்கப் பதக்கமும் வென்று அசத்தினார். தனது மகள் எல்லாவையும் ஒரு விளையாட்டு வீராங்கனயாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார் ஷெல்லி.

லிஸ் மெக்கோல்கன்

1987-ல் தாயான இந்த ஸ்காட்லாந்து ஓட்டப்பந்தய வீராங்கனை தாயான அடுத்த ஆண்டே பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார். அதுவும் அதிக ஸ்டெமினா தேவைப்படும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற மெக்கோல்கன், 1991-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதித்தார். ஐந்து குழந்தைகளுக்குத் தாயன லிஸ், காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கம் வென்றவர். அவரது மகள் எல்லிஸ் கூட 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். தனது மகளையும் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் ஒரு மங்கையாக உருமாற்றப் போராடி வருகிறார் லிஸ் மெக்கோல்கன்.

இந்த ஐவர் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தாய்கள் விளையாட்டுத் துறையில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். சரிதா தேவி (குத்துச் சண்டை), மேரி கிங் (ஈக்குஸ்டெரியன்), பவுலா ரெட்கிளிஃப் (மாரத்தான்) என எத்தனை எத்தனையோ அம்மாக்கள் இன்னும் தாய்மையை சுகமாகவே கருதி வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒவ்வொரு அம்மாக்களும், தங்கள் குழந்தைகளுக்காக இப்படியான தங்களது லட்சியங்களை தியாகம் செய்த தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

-எம்.பிரதீப் கிரஷ்ணா
(மாணவப் பத்திரிகையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ