Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவங்கெல்லாம் ஏன் ஐ.பி.எல் ஆடுறது இல்லை?

ஐ.பி.எல் - பெரிய வீரர்களுக்கென பெயர்போன தொடர். அதேசமயம் இளம் திறமைகளை அடையாளம் காணும் ஒரு பள்ளிக்கூடம். கில்கிறிஸ்ட், காலிஸ், வார்னே, போலக் என எத்தனையோ மிகப்பெரிய ஜாம்பவாங்களெல்லாம் ஆடிச்சென்ற ஐ.பி.எல் தொடரின் நடப்பு நாயகர்கள் யாரென்றால் கோஹ்லி, வார்னர், டிவில்லியர்ஸ், ரஸ்ஸல் போன்றோர் தான். ஆனால் இந்த இரண்டு குரூப்புகளுக்கும் நடுவில் ஒரு சிலர் உள்ளனர். ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய அங்கம் வகித்துவிட்டு தற்போது ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பில்லாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர். “என்னது இவங்கல்லாம் ஆடலையா” என்று அனைத்து ரசிகர்களும் வாய் பிளக்குமளவிற்கு ஆச்சரியம் பொதிந்துள்ளது இந்த 9வது ஐ.பி.எல் தொடர்.
  

வீரர்களின் முந்தைய சாதனைகளுக்காகவும், அவர்களது பெயர்களுக்காகவுமே அணியில் தேர்வு செய்த காலமெல்லாம் போய்விட்டது. ஃபார்ம், அணியின் பேலன்ஸ் அகியவற்றிற்கே அனைத்து அணிகளும் முன்னுரிமை கொடுக்கின்றன. ஆனால் புனே, மும்பை போன்ற அணிகள் ஒருசில வகையில் அதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. ஒருசில வீரர்கள் சிறப்பாய் செயல்படாத போதும், அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அவ்வணியிலிருக்கும் பிற திறமைசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படி இந்த ஐ.பி.எல் தொடரில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வீரர்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் அலசுவோம்.
 

கிறிஸ் கெயில் (பெங்களூர்)
 

பவுலர்களின் எமன் கெயிலுக்கே இந்த நிலமையா என்று நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டியுள்ளது. ஆனால் இதற்குக் கெயிலே காரணம். டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக சரவெடியாய் சதமடித்த கெயில், அதன்பிறகு நமுத்துப் போன புஸ்வானம் ஆனார். அரையிறுதி, இறுதி என எந்தப் போட்டியிலும் கெயில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. சரி ஐ.பி.எல் லிலாவது ஜொலிப்பாரா என்று எதிர்பார்த்தால், விளையாடிய 3 போட்டிகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றமே அளித்தார். வாட்சன், கோஹ்லி, டிவில்லியர்ஸ், ராகுல், மன்தீப், சர்ஃப்ராஸ் என மிகச்சிறந்த பேட்டிங் வரிசை கொண்டிருந்ததால் கெயிலை கழட்டிவிட இம்முறை யோசிக்கவில்லை அணி நிர்வாகம். பந்துவீச்சு மிகமோசமாக இருப்பதால் ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளரை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி கெயிலை இன்னும் வெளியிலேயே அமர்த்தியிருப்பது ஆர்.சி.பி க்கான ஃபீல்டிங் தேவை தான். பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டை சரிகட்ட சிறந்த ஃபீல்டர்கள் தேவை என்பதால் அற்புதமாக ஆடிவந்த சர்ஃப்ராசையே வெளியில் அமர்த்தியிருக்கிறார் கோஹ்லி. கெயிலின் ஃபீல்டிங் பற்றி நாம் அறியாதது ஒன்றுமல்ல. அதேசமயம் இவரோடு ஓப்பனிங் இறங்கும் பட்சத்தில் கோஹ்லியால் அதிகமாக இரண்டு ரன்கள் கூட ஓடமுடிவதில்லை. தற்போது ஓப்பனிங் இறங்கி வரும் ராகுல் அதிரடி, ஸ்டிரைக் ரொடேஷன், கீப்பிங் அணி அனைத்து ஆப்ஷன்களையும் பூர்த்தி செய்வதால் கெயிலின் சேவை ஆர்.சி.பி க்கு தற்போது தேவை இல்லை. கிறிஸ் கெயில் பெங்களூரு அணியில் உள்ளே, வெளியேவாகவே இருக்கிறார். முன்பெல்லாம் கெயில் இல்லாமல் டி20 ஆட்டமா என்ற நிலை இருந்தது. தற்போது யார் இருந்தாலும் பந்தை சிக்ஸருக்கு விரட்ட தெரிந்தால் போதும் என்ற அளவுக்கு டி20 மாறியதால் கெயிலுக்கு மவுசு குறைந்துள்ளது.
 

டிரென்ட் போல்ட் (ஹைதராபாத்)
   

கடந்த சீசனில் சன்ரைசர்சின் ஆடும் லெவனில் ஸ்டெயினையே ஓரம் கட்டியவர். ஆனால் இம்முறை இன்னும் ஒரு போட்டியில் கூட அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். அதற்கு மிக முக்கியக் காரணம் வங்கதேசத்தின் முஸ்தாஃபிகுர் ரஹ்மான். ஏற்கனவே நெஹ்ரா, புவனேஷ்வர், பரிந்தர் ஸ்ரன் என அற்புதமான பவுலிங் யூனிட்டைக் கொண்டிருக்கும் அணியில் எக்காரணம் கொண்டும் இரண்டு வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய இயலாது. இந்திய பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதால் 3 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில், யார்க்கர்களாலும், ஸ்பீடு வேரியேஷன்களாலும் அனைத்து முன்னனி பேட்ஸ்மேன்களையும் அச்சுறித்து வரும் முஸ்தா முஸ்தாஃபிசுரிடம் சற்று பின் தங்குகிறார் போல்ட். திறமை இருந்தும் அதற்காம வாய்ப்பு கிடைக்காதது கொஞ்சம் பரிதாபம் தான்.

டேல் ஸ்டெயின்(குஜராத்)
   

மெக்குல்லம், பிராவோ, ஸ்மித், ஃபின்ச், ஃபால்க்னர் என ஏற்கனவே ஐந்து டி20 ஸ்பெஷலிஸ்டுகள். அனைவரும் ஃபார்மில் வேறு உள்ளனர். இப்படியிருக்கையில் தனது பழைய ஃபார்மை இழந்து தவிக்கும் ஸ்டெயினுக்கு அணியில் எங்கு இடம் தருவது? அவர் விளையாடிய ஒரே போட்டியிலும் அவரால் விக்கெட் ஏதும் வீழ்த்த முடியவில்லை. மோசமாக பந்துவீசவில்லை என்றாலும் அணியிலுள்ள நிலமை அப்படி. குஜராத் அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் அபாரம். பிரவீன், குல்கர்னி, சிவில் கௌசிக், தாம்பே, பிராவோ, ஃபால்க்னர் என அசைக்க முடியாத பந்துவீச்சு. அவர்களின் ஒரே பிரச்னை மிடில் ஆர்டர் பேட்டிங் தான். அதனால் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் கூட ரெய்னா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யாராவது ஒருவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கக் கூடும். எனவே ஸ்டெயினுக்கு இனி வாய்ப்புக் கிடைப்பது அரிதிலும் அரிதே.
 

வினய் குமார் (மும்பை)
   

கடந்த ஆண்டு ஐ.பி.எல் வென்ற மும்பை அணியின் மிகமுக்கிய ஆயுதமாய் இருந்தவர் வினய் குமார். ஆனால் இம்முறை நிலமை தலைகீழ். சவுதீ பவர்-ப்ளேயில் பட்டையைக் கிளப்ப, பூம்ரா டெத் ஓவர்களில் யார்க்கர்கள் சொருக, இருவரோடும் இணைந்து விக்கெட் வேட்டை நடத்துகிறார் மற்றொரு நியூசி வீரர் மிட்செல் மெக்லெனகன். ஹர்பஜனும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவர்களுக்கு ஆல்ரவுண்டர்களான பாண்டியா சகோதரர்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுப்பதால் வினய்க்கு தேவையில்லாமல் போய்விட்டது. உள்ளூர் தொடர்களில் பெரிதாய் ஒன்றும் சோபிக்காததும் அவருக்குப் பாதகமாய்ப் போய்விட்டது. இப்போதுள்ள பவுலர்கள் யாரேனும் ஃபார்ம் இழந்தாலோ, அல்லது அடிபட்டு அமர்ந்தாலோ ஒழிய வினய்க்கு ஒன்பதாவது ஐ.பி.எல் தொடரில் வாய்ப்புகள் இல்லை.
 

மார்டின் குப்தில் (மும்பை)
   

சிம்மன்சிற்குப் பதிலாக குப்தில் மும்பை அணிக்குக் கையெழுத்திட்டபோது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். ஆனால் அவையனைத்தையும் தனது முதல் போட்டியிலேயே தவிடுபொடியாக்கினார் குப்தில். “இவருக்கு துணைக்கண்ட ஆடுகளங்களில் ஆடிப் பழக்கமில்லை” என்று தான் அனைத்து அணிகளும் ஏலத்தில் இவரைப் புறக்கணித்தன. அதை நிரூபிக்கும் வகையிலேயே இருந்தது 2 ரன்னில் அவுட்டான அவரது ஆட்டம். ஒரு ஆட்டத்தில் எதையும் முடிவு செய்யக்கூடாது என்றாலும், பேலன்சிங் என்றொரு பிரச்சனை எழுகிறது. பார்த்திவ் பட்டேலின் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. அவரை வெளியில் அமர்த்தி அவருக்கு நிகரான ஒரு இந்தியரைத் தேட முடியாது. குப்தில் ஓப்பனிங் இறங்கிய போட்டியில் ரோஹித்தால் மிடில் ஆர்டரில் சரியாக விளையாட முடியவில்லை. எனவே பார்த்திவும் ரோஹித்தும் தான் மும்பைக்கு சரியான தொடக்க ஜோடி. அதேசமயம் சீராக ஆடாத பட்லருக்குப் பதிலாக குப்திலை சேர்க்கலாம். ஆனால் அவர் மிடில் ஆர்டருக்கு எப்படிப் பொருந்துவார் என்பது சந்தேகம் தான். அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், சோதனைகள் செய்துபார்க்க மும்பை அணி விரும்பாது.
   

இந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காத நிலமை. ஆனால் பின்வருபவர்களுக்கோ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
 

கோரி ஆண்டர்சன்(மும்பை)
   

தொடக்கத்தில் அணியில் ஓரிரு மாற்றங்கள் செய்த ரோஹித், அதன்பின் பல போட்டிகளாக அதே அணியைத்தான் பயன்படுத்தி வருகிறார். அதுவும் பெரிய அளவில் சோபிக்காத பொல்லார்டு, பட்லர் ஆகியோருக்கும் இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி வரும் பொல்லார்டுக்கு, கோரி நிச்சயம் சிறந்த மாற்றாக இருப்பார். பொல்லார்டோ மிஞ்சிப் போனால் இரண்டு ஓவர்கள் பந்து வீசுகிறார். அதுவும் சுமாராக. ஆனால் கோரி 4 ஓவர்களும் பந்து வீசத் தகுந்தவர். அவரை அணியில் சேர்க்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரும் வலுப்பெரும். ஆனால் ரோஹித்தோ மாற்றங்களைக் கொண்டு வர பெரிதும் தயங்குகிறார். பிளே ஆஃப் சுற்றுகள் நெருங்கிவிட்ட நிலையில் கோரியை அணியில் சேர்ப்பது மும்பைக்கு மிகவும் அவசியம்.

இர்ஃபான் பதான், பாபா அபாரஜித், ஈஸ்வர் பாண்டே (புனே)
 

   

 

இவர்களெல்லாம் அணியில் சேர்க்கப்படாததற்கு ஒரே காரணம் தோனி. அவரின் அணுகுமுறையே திறமையான இந்த வீரர்களை வெளியில் அமர்த்தியிருக்கிறது. எப்பொழுதும் வின்னிங் காம்பினேஷனையே விரும்பும் தோனி, இம்முறை புனே அணி கடுமையாக சொதப்பியும் கூட அணியில் பெரிய மாற்றங்கள் செய்யாமலேயே இருக்கிறார்.
   

ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, முருகன் அஷ்வின் ஆகியோர் பயங்கரமாக சொதப்பியும் கூட மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பளித்து வருகிறார் தோனி. தோனியின் தலைமை இர்ஃபான் விஷயத்தில் ரசிகர்களை மிகவும் கவலையுறச் செய்துவிட்டது. கடந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக 17 போட்டிகளிலும் வெளியிலேயே அமர்ந்திருந்தார் இர்ஃபான். சில மாதங்கள் முன்பு நடந்த சையது முஸ்தாக் அலி டி20 தொடரில்10 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராகத் திகழ்ந்தார். பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்திய இர்ஃபான், 200 ரன்களும் குவித்தார்(சராசரி-40). அப்படி அற்புதமான ஃபார்மில் இருந்த நிலையில் புனே அணியால் வாங்கப்பட்ட இர்ஃபானை மீண்டும் ஏமாற்றி வருகிறார் தோனி. விளையாடியுள்ள 10 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போட்டியிலும் ஒரு ஓவரே அவருக்கு பந்துவீசக் கொடுத்தார் தோனி. அந்த ஒரு ஓவரில் வெறும் 7 ரன்களே கொடுத்திருந்த போதும் அடுத்த போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இர்ஃபான்.
   

சென்னை அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஈஷ்வர் பாண்டேவிற்கும் இதே நிலமை தான். கடந்த ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்திய இவரது எகானமி வெறும் 7.19 தான். ஆனால் இவருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
   

அனைத்தை விடவும் கொடுமை பாபா அபாரஜித்தின் நிலமை. நல்ல ஆல்ரவுண்டர். அற்புதமான ஸ்பின்னர். தமிழக ரஞ்சி அணியின் நம்பிக்கை நாயகன். யார் யாரோ அடையாளம் தெரியாதவர்களெல்லாம் ஐ.பி.எல்லில் விளையாட இவருக்கு இன்னும் அறிமுக போட்டியில் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. சி.எஸ்.கே வில் சில சீசன்கள், புனேவில் இந்த சீசன் என தோனியில் நிழலில் இவரும் மறைந்து கொண்டிருக்கிறார்.
   

உன்முக்த் சந்த், பவன் நெகி, அபு நெகிம் என உள்ளூர் வீரர்கள் மட்டுமல்ல, தற்போது ஜான்சன், மேக்ஸ்வெல், நரேன் போன்ற ஜாம்பவான்கள் கூட அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்புக்காகத் தவிக்கிறார்கள். கெயில், ஜான்சன் போன்றோரின் புறக்கணிப்புகள் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்றாலும், இர்ஃபான், அபாரஜித் ஆகியோரின் புறக்கணிப்புகள் சற்றுக் கொடுமையே. கேப்டன்கள் தங்களுக்கென இருக்கும் ஃபார்முலாவிலிருந்து மீண்டு சில மாற்றங்கள் புகுத்துதல் வேண்டும். ‘திறமைக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதைத் தவிர பெரிய வலி ஏதுமில்லை’.

மு.பிரதீப் கிருஷ்ணா
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close