Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியோ ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் பங்கேற்க மல்லுக்கட்டும் சுஷில் - நர்சிங்!


   

ந்திய ஒலிம்பிக் வரலாற்றிலேயே, தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவரால், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் சார்பாக, ஒரு பிரிவில் ஒரு நபர்தான் பங்கேற்க முடியும் என்பதால், 74 கிலோ எடைப் பிரிவில் சுஷிலுக்குப் பதிலாக நர்சிங் யாதவை தேர்வு செய்துள்ளது இந்திய மல்யுத்த சம்மேளனம்.


2008 ம் ஆண்டு,  பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற சுஷில், முதல் சுற்றிலேயே தோற்றுப் போனார். ஆனாலும் ரெபசேஜ் எனப்படும் மறுவாய்ப்பின் மூலமாக, வெறும் 70 நிமிட இடைவெளியில் தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து 2010 ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதுவரை 66 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வந்த சுஷில், அதன்பின்னர் 74 கிலோ எடைப் பிரிவுக்குத் தாவினார். அப்பிரிவில் பங்கேற்று 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
   

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம், பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சுஷிலுக்குப் பதிலாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நர்சிங் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 74 கிலோ எடைப் பிரிவில் 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கமும், 2014 காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும் வென்றவரான நர்சிங், 2012 ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
   

மல்யுத்தத்தைப் பொறுத்தவரையில், பிற விளையாட்டுகளைப் போல் நேரடித் தேர்வு முறை இல்லை. ஒவ்வொரு எடைப் பிரிவிலும் ஒரு நாட்டுக்கு ஒரு ஸ்லாட் மட்டுமே வழங்கப்படும். அதாவது ஒரு நாடு ஒரு வீரரை மட்டுமே, குறிப்பிட்ட ஒரு பிரிவில் களமிறக்க முடியும். அந்த ஒரு வீரரை அந்நாட்டு வாரியமே தேர்வு செய்து கொள்ளலாம். அதனால் 2015 ம் ஆண்டு,  லாஸ் வேகாசில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நர்சிங் யாதவின் பெயரையே இந்திய மல்யுத்த சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. இதனால் இரண்டு முறை இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சுஷில்,  ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சுஷிலோ,  2015 உலக சாம்பியன்ஷிப் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் தனக்கும் நர்சிங்கிற்கும் இடையே ஒரு போட்டி வைத்து, அதில் வெல்பவரை ஒலிம்பிற்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய மல்யுத்த சங்கத்திற்கு சுஷில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் சுஷிலின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட, அவர் இந்திய அரசின் மேற்பார்வைக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்றார்.

இருப்பினும் இந்திய அரசு இதில் தலையிடாது என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்து விட்டார். இதையடுத்து இவ்விவகாரம் குறித்து டெல்லி ஐகோர்ட்டில் சுஷில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், “தனக்கும் நர்சிங்கிற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுபவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
   

இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரு வீரருக்கே இந்நிலைமை என்பது சற்று அதிர்ச்சியாகதான் உள்ளது. அதேசமயம் சுஷிலும் கடந்த சில மாதங்களாக காயங்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். 26 வயதேயான நர்சிங்கும், சர்வதேச அரங்குகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார். லாஸ் வேகாஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, அவர் செய்த ‘தக்’ எனப்படும் மூவ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. களிமண் தரைகளில் மட்டுமே செய்ய முடியும் அந்த மூவை துல்லியமாக அரங்கேற்றுவது கடினம். ஆனால் அதை அற்புதமாகச் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நர்சிங்.

இப்படி திறமையுள்ள வீரர்கள் இருவரும் ஒரு இடத்திற்காக மல்லுக்கட்டுவதால்,  பிரச்னை தற்போது சூடு பிடித்துள்ளது. யார் போனாலும் சரி நமக்குத் தேவை மெடல்தான். 

    - மு.பிரதீப் கிருஷ்ணா

( மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ