Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பேட்மேன்' ஏபிடி - 'சூப்பர்மேன்' கோலி தெறிக்கும் டி20 சாதனைகள்!


ன்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் என்றால், அது நம் விராத் கோலியும், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்சும்தான். இருவரும் இரு வேறு வகையான பேட்ஸ்மேன்கள்.

கோலி ஒரு கிளாசிக்கல் பிளேயர். டிவில்லியர்சோ அனைத்தும் கலந்த கலவை. அவர் ஒரு ஃப்யூசன் மியூசிக் போன்றவர். கிளாசிக்கல் ஷாட்கள் மட்டுமல்லாது, பிற பேட்ஸ்மேன்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஷாட்களை அடிக்க வல்லவர். இருவரும் வேறு வேறு அணிகளில் இருந்தாலே ரன்கள் மழையாய்ப் பொழியும். ஒரே அணியில் இருந்தால்? சொல்லவா வேண்டும். இருவரும் இணைந்து இந்த ஐ.பி.எல் தொடரில் செய்யும் அட்டகாசங்களால், பல சாதனைகள் முறியடிக்கப்பட்டும், பல சாதனைகள் புதிதாய் உருவான வண்ணமும் இருக்கின்றன.
   

2011ம் ஆண்டு,  நான்காவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார் பெஞ்சமின் டிவில்லியர்ஸ். ஏற்கனவே கோலியைத் தக்கவைத்திருந்த அவ்வணி தில்ஷன், கெயில் போன்றோரையும் பின்னாட்களில் வாங்கியது. தில்ஷன், ஹென்ரிக்ஸ், ரூசோ, யுவராஜ், தினேஷ் கார்த்திக் என பல பெங்களூர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காவிடிலும், பல சமயங்களில் கெயில் ஏமாற்றினாலும் தூணாய் நின்று அணியை ஒவ்வொரு போட்டியிலும் காப்பாற்றி வருகிறது கோலி – டிவில்லியர்சின் சூப்பர்மேன் கூட்டணி. அதிலும் குறிப்பாக இந்த 9 வது சீசனில் அவர்களது ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது. தொடக்கத்தில் திணறிய அணியை, இருவரும் இணைந்து கரைசேர்த்தது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பெரும் நம்பிக்கை அளித்துள்ளனர் இந்த ரன் மெஷின்கள். இவர்கள் வெற்றிகளை மட்டும் குவிக்கவில்லை. பல்வேறு சாதனைகளையும் படைத்த வண்ணம் உள்ளனர்.

அந்த அபார கூட்டணி நிகழ்த்திய சிறப்புகள் பற்றிய பார்வை இதோ...
 

7 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்
   

கோலி – டிவில்லியர்ஸ் கூட்டணியின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கிடையே உள்ள புரிதல்தான். ஒருவர் அடித்து ஆடிக் கொண்டிருக்கும்போது எப்படிப்பட்ட எளிதான பந்தாக இருந்தாலும், மற்றொருவர் சிங்கிள் எடுத்துக் கொடுப்பார்.  இப்படியான புரிதலே இக்கூட்டணியின் பெரும்பலம். இவர்கள் ஆட்டத்தைத் தொடங்கும் விதம் சூழ்நிலையைப் பொறுத்து மாறலாம். ஆனால் முடிக்கும்போது அங்கு ஒவ்வொரு பந்து வீச்சாளரின் கண்களும் கலங்கியே நிற்கும். நேற்று நடந்த நைட்ரைடர்சுக்கு எதிரான போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்தக் கூட்டணி, 7 முறை செஞ்சுரியைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கெயில் - கோலி கூட்டணியும் 7 முறை சதமடித்துள்ளது. கடந்த சீசன்களில் கெயிலோடு இணைந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏ.பி யோடு அசைக்க முடியாத அணியை உருவாக்கிவிட்டார். இந்த சீசனில் மட்டும் இந்த பார்ட்னர்ஷிப் 5 முறை நூறு ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
 

ஒரே விக்கெட்டிற்கு 229 ரன்
   

ஒரு இன்னிங்சில் ஒரு பார்ட்னஷிப் அடித்த அதிகபட்ச ரன்கள் 229. அதை அடித்தவர்கள் யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், இந்த பேட்மேனும் சூப்பர்மேனும்தான். கடந்த வாரம் இவர்களிடம் சிக்கிய குஜராத் லயன்ஸ் அணியை பந்தாடி, 229 ரன்கள் குவித்த இவர்கள்தான் இரண்டாம் இடத்திலும். கடந்த ஆண்டு மும்பைக்கு எதிராக வாங்கடே மைதானத்தில், அவுட்டே ஆகாமல் இவர்கள் அடித்த 215 ரன்கள்தான் முந்தைய சாதனையாக இருந்தது. இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் 4 கூட்டணிகள் இரட்டைச் சதம் அடித்துள்ளன. மற்ற இரு கூட்டணிகள் கில்கிறிஸ்ட்-ஷான் மார்ஷ் மற்றும் கெயில்-கோஹ்லி. இதுவரை 3 இரட்டைச் சத பார்ட்னர்ஷிப்பில் பங்காற்றிய மகத்தான சாதனைக்கு கோலியே சொந்தக்காரர்.

ஒரே இன்னிங்சில் இரண்டு சதங்கள்
   

ஐ.பி.எல் போட்டிகளில் சதமடிப்பதே பெரிய விஷயம். ஒரே போட்டியில் இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரரொருவர் சதமடித்த நிகழ்வே அரிதாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரே இன்னிங்சில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர், ஒரு டி20 போட்டியில் சதமடிப்பதெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. அதையும் நிகழ்த்திக் காட்டினர் இவர்கள். முதலில் டிவில்லியர்ஸ் அசுர வேகத்தில் சதமடிக்க, பொறுமையாய் ஆடிவந்த கோலி,  கடைசி கட்டத்தில் சுனாமியாய்ப் பொங்க,  இருவரும் சதமடித்து, ஐ.பி.எல் வரலாற்றில் மேலுமொரு சாதனையைப் படைத்தனர். இதுவரை நடந்துள்ள 5707 டி20 போட்டிகளில்,  இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே அப்படி நடந்துள்ளது. மிடில்செக்ஸ் அணிக்காக குளோசெஸ்டரின் கெவின் ஓ பிரையன் மற்றும் ஹாமிஷ் மார்ஷல் ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
 

கடைசி கட்டத் தாண்டவம்
   

ஒரு அணி பவர் பிளேயில் கூட மெதுவாக ஆடும். ஆனால் கடைசி ஐந்தாறு ஓவர்களில் கண்டிப்பாக அனல் பறக்கும். எப்படியும் எந்த அணியும் குறைந்தபட்சம் 50 முதல் 60 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடுவார்கள். ஆனால் இவர்கள் இருவரும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லவா? இவர்களது டார்கெட் மற்றவர்களை விட எப்பொழுதும் டபுளாகவே இருக்கும். ஆம், குஜராத் அணிக்கெதிராக கடைசி ஐந்து ஓவர்களில், இவர்கள் எடுத்த ரன் 112. அதிலும் 14 சிக்சர்களைப் பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இதுவரை எந்த அணியும் கடைசி 5 ஓவர்களில் 100 ரன்களைக் கூடக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சா 30 தான்

அந்த அணிக்கு குஜராத் அணி என்ன பாவம் பண்ணாங்கனு தெரியல. பந்து ஒவ்வொரு மூலைக்கும் பறந்துக்கிட்டே இருந்துச்சு. 'அஞ்சு ஓவருக்கு 112 ரன்களா...?' ன்னு  வாயப்பொளக்காதீங்க. இன்னும் 18 வது மற்றும் 19 வது ஓவர் பத்தி சொல்லல. அந்த இரண்டு ஓவரிலும் தலா 30 ரன்கள் எடுத்தனர் அந்த இரு மாஸ்ட்ரோக்களும். முதலில் மாட்டியது ஐ.பி.எல் லின் மிகச்சிறந்த டெத் பவுலர் டுவைன் பிராவோ. நோ பால் போட்டது அவருடைய தப்பென்றாலும், ஏ.பி யும் கோலியும் ஆடிய விதத்திற்கு அத்தருணத்தில் யார் பந்து போட்டிருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். அடுத்ததாக மாட்டியது இளம் வீரர் சிவில் கவுசிக். உலகத்தரம் வாய்ந்த வீரருக்கே அந்த நிலை என்றால், இவரை என்ன சொல்வது? அந்த ஓவர் தொடக்கத்தில் வெறும் 68 ரன்களில்தான் இருந்தார் கோலி. 4 சிக்சர் 1 பவுண்டரி என கவுசிக்கின் பந்துகளை சிதறடித்து,  எளிதில் சதத்தை நெருங்கினார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்.
 

இது கோலியின் சீசன்
   

தனது வாழ்நாளில் எப்போதுமே கோலியால் இவ்வருடத்தை மறக்க முடியாது. டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற கையோடு களமிறங்கிய விராத், ஒவ்வொரு அணியையும் பதம் பார்த்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 752 ரன்கள் குவித்து, ஒரு சீசனில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை ஹஸ்ஸி மற்றும் கெயிலின் வசமிருந்து கைப்பற்றினார். அதில் 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், ஒரு சீசனில் அதிக சதங்கள் (3) எடுத்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். இன்னும் 2 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், கோலி இருக்கும் பார்முக்கு மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிடுவார். ஒருவேளை பெங்களூர் அணி, இறுதிப் போட்டி வரை சென்றால், 1000 ரன்கள் கூட கோலி அடித்தாலும் அடித்து விடுவார்.
   

இதுமட்டுமல்ல, கோலி – டிவில்லியர்ஸ் இணை கூட்டாக இணைந்து 2000 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. இவர்கள் இருவரும் களத்தில் நின்றாலே,  எதிரணியினர் அரண்டு விடுகின்றனர். கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனும்,  தான் ஆதரிக்கும் அணியையும் மறந்துவிட்டு எதிரணியாய் இருந்தாலும் இவர்களை ரசிக்கத் தொடங்கிவிட்டான். எந்த மைதானமாய் இருந்தாலும் வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு ரசிகனும் “ஏ.பி.டி…ஏ.பி.டி..” என்று உரக்கக் கத்துகிறான்.

ரன்கள் குவிப்பது, சதங்கள் அடிப்பது, வெற்றிகள் குவிப்பது, சாதனைகள் புரிவது என அனைத்தையும் தாண்டி, கிரிக்கெட் ரசிகனின் ரசனையை மாற்றியதுவே இந்தக் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி. கூட்டணியாய் மட்டுமல்ல, தனித்தனியாகவும் இந்த இரு வீரர்களும் இந்தியன், தென்னாப்பிரிக்கன் என்ற தேச வேறுபாட்டையெல்லாம் தாண்டி ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களாய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர் என்பதே உண்மை!

- மு.பிரதீப் கிருஷ்ணா

( மாணவப்பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close